மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சராசரியாக ஆண்டுதோறும் 13,300 ஹெக்டேர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு, சுமார் 23,275 டன் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில், வைகாசிப் பட்டத்திலும் மற்றும் இறவைப் பயிராகக் கார்த்திகைப் பட்டத்திலும் பயிரிடப்படுகிறது.

நிலக்கடலை சாகுபடியில் மேற்கொள்ளப்பட வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து கிருஷ்ணகிரி டாக்டர் பெருமாள் வேளாண் அறிவியில் ஆராய்ச்சி மைய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் டி.சுந்தர் ராஜ் கூறியது:

  • வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திண்டிவனம் ஆராய்ச்சி மையத்திலிருந்து வெளியிடப்பட்ட டிஎம்வி 7, விருத்தாசலம் ஆராய்ச்சி மையத்திலிருந்து வெளியிடப்பட்ட விஆர்ஐ 2 மற்றும் விஆர்ஐ 5, கோவையிலிருந்து வெளியிடப்பட்ட கோ 4 ஆகிய 100 முதல் 110 நாள்கள் வரை வயதுடைய கொத்து ரகங்களையும், கோ.6, விஆர்ஐ 7 ஆகிய 125 முதல் 130 நாள்கள் வரை வயதுடைய கோ.டி கொத்து ரகங்களையும் மானாவாரியில் சாகுபடி செய்யலாம். இந்த ரகங்கள் வறட்சியைத் தாங்கி வளர்வதோடு மட்டுமன்றி, நோய் எதிர்ப்புத் திறனையும் கொண்டுள்ளன.

விதை விதைப்பு:

  • விதைப்பதற்கு சான்று பெற்ற சுமார் 90 சதம் முளைப்புத் திறன் உள்ள விதைகளையே பயன்படுத்த வேண்டும்.
  • ஏக்கருக்கு 50 கிலோ விதைப் பொருள்கள் தேவைப்படும். விதைகளை சுமார் 5 செ.மீ ஆழத்திலும், வரிசைக்கு வரிசை 30 செ.மீ, செடிக்கு செடி 10 செ.மீ இடைவெளியிலும் விதைக்கலாம்.

இயற்கை முறை விதை நேர்த்தி:

  • மண் வழியாகப் பரவும் நோய்களான வேரழுகல், தண்டழுகல் நோய்களால் இளஞ்செடிகள் பாதிக்கப்பட்டு, பயிர் எண்ணிக்கை குறைந்து விளைச்சல் பாதிக்கப்படுகிறது.
  • உயிர் நோய்க் கொல்லிகளான டிரைக்கோடெர்மா விரிடி ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் விதை நேர்த்தி செய்வதன் மூலம் மண் வழியாகப் பரவும் நோய்களைத் தடுக்கலாம்.

உர மேலாண்மை:

  • விதைப்பதற்கு 10 முதல் 15 நாள்கள் முன்னதாக ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் இட வேண்டும். மண்ணை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் உரமிடுவதே சிறந்தது.
  • பின்னர் மண் அமைப்பதன் மூலம் பயிரின் காய்ப் பிடிக்கும் திறனை அதிகரித்து நல்ல திரட்சியான பருப்பைப் பெற வழி வகுக்கிறது.

நுண்ணூட்டக் கலவை தெளித்தல்:

  • பொதுவாக போரான், துத்தநாகம், இரும்பு, கந்தகச் சத்து போன்ற நுண்ணூட்டச் சத்தின் குறைபாடு காரணமாக பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

களை நிர்வாகம்:

  • நிலக் கடலை விதைப்பு செய்த உடன் நிலத்தில் நல்ல ஈரம் இருக்கும் நிலையில், புளுக்குளோரலின் என்ற களைக் கொல்லியை ஏக்கருக்கு 800 மி.லி என்ற அளவில் 200 லிட்டர் நீரில் கலந்து கைத் தெளிப்பான் மூலம் தெளித்தால், பயிரின் இளம் பருவத்தில் தோன்றும் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.

இந்தத் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் மானாவாரி நிலத்தில் ஏக்கருக்கு சுமார் 1250 கிலோ வரை விளைச்சல் கிடைக்கும்.தொடர்புக்கு: 04343296039.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *