பிசான நெல் நடவுக்கு முன் பசுந்தாள் விதைப்பு

“பிசான நெல் நடவுக்கு முன் பசுந்தாள் உரப்பயிர் விதைப்பு செய்ய வேண்டும்’ என கீழப்பாவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் நல்ல முத்துராசா கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

  • நமது மண் வகைகளில் கரிம பொருட்கள் அதாவது அங்ககப் பெருட்களின் அளவும், தழைச்சத்தின் அளவும் மிகவும் குறைவாக உள்ளது.மண் வள மேம்பாட்டில் இவையிரண்டும் இரண்டு கண்கள்.
  • மண் வளத்தை மேம்படுத்துவதற்கு கரிமப் பொருள் மற்றும் தழைச்சத்தின் அளவை அதிகப்படுத்த வேண்டும். கரிம தழைச்சத்து பெறுவதற்கு பசுந்தாள் உரமிடுதல் மிகமிக அவசியம்.
  • பசுந்தாள் பயிர்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
  • ஒன்று பயறு வகை செடி, மற்றொன்று பயறு வகை மரம், சீமை அகத்தி, தக்கைப்பூண்டு, சணப்பு, நரிப்பயறு, தட்டைப்பயறு போன்றவை ஆகும்.
  • பசுந்தாள் உரங்களை மண்ணில் இடும்போது அது மண்ணில் உள்ள கண்ணுக்கு புலப்படாத பல கோடிக்கணக்கான நுண்ணுயிர்களின் தாக்குதலுக்கு இலக்காகிறது.
  • இவை சிதைக்கப்படும் போது அப்பயிர் வகைகளில் உள்ள பேரூட்டங்கள் மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் வெளியாகி பயிர்கள் செழித்து வளர உதவுகின்றன.
  • நுண்ணுயிர்களின் பெருக்கம் அதிகரிக்கும் போது அவைகளிலிருந்து பலவிதமான அங்கக அமிலங்களும் வளர்ச்சி ஊக்கிகளும், நொதி மற்றும் சர்க்கரைப் பொருட்களும் வெளிப்பட்டு மண்ணில் கரையா வடிவத்திலிருக்கும் ஊட்டச்சத்துக்களை கரைத்து எளிதில் பயிர்கள் எடுத்துக் கொள்ளும் வடிவங்களுக்கு மாற்றுகிறது. மேலும் பயிர் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.
  • தக்கைப் பூண்டு போன்ற பசுந்தாளுரத்தின் இலைகளில் காணப்படும் திரவம் அமிலத்தன்மை கொண்டதாகும். இதனால் இலைகளை உரமாக உபயோகிக்கும் பொழுது நிலங்களை எளிதாக சீர்திருத்தம் செய்கின்றன.
  • நிலத்தில் இடும் ரசாயன உரங்கள் ஆவியாதல், களியோடு சேர்ந்து நிலை நிறுத்தப்படுதல், பாசன நீருடன் கரைந்து வெளியேறுதல் போன்ற பலவித இழப்புகளை தடுப்பதோடு பயிருக்கு உணவுச் சத்துக்களை சீராக கிடைக்க செய்தல் போன்றவற்றை பசுந்தாளுரம் இடுவதன் மூலம் சரிசெய்யலாம்.
  • தற்போது கீழப்பாவூர் பகுதியில் பிசான பருவ நெல் நடவிற்கு முன் தக்கைப்பூண்டு நெல் வயல்களில் விதைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • தக்கைப்பூண்டு விதைகளை ஏக்கருக்கு 20 கிலோ என்ற அளவில் விதைப்பு செய்து 45 முதல் 60 நாட்களில் மடக்கி உழுதோ அல்லது நடவிற்கு 15 நாட்கள் முன்பாக வெளியிலிருந்து கொண்டு வந்து வயலில் இட்டு மண் வளத்தை பெருக்கி பிசான நெல் பயிரில் அதிக மகசூல் பெறலாம்.
  • தக்கைப்பூண்டு உரப்பயிர் இடுவதால் 150 முதல் 225 கிலோ தழைச்சத்து நிலத்திற்கு கிடைக்கிறது. பசுந்தளை உற்பத்தியாக 8.5 டன் முதல் 10 டன் வரை கிடைக்கிறது.

எனவே விவசாயிகள் பிசான நெல் சாகுபடிக்கு முன் பசுந்தாள் உரப் பயிரான தக்கைப்பூண்டு விதைப்பு மேற்கொண்டு மண் வளத்தை பெருக்கி அதிக மகசூல் பெற வேண்டும்” என வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் நல்லமுத்துராசா அறிக்கையின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “பிசான நெல் நடவுக்கு முன் பசுந்தாள் விதைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *