மழையால் நூதன விவசாயம் : நெல்லை வயல்களில் இரு பயிர் சாகுபடி

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கோடை மழை காரணமாக பல வயல்களில் இரு பயிர் சாகுபடி நடந்து வருகிறது. உளுந்து பயிரிட்ட வயல்களில் நெல்லும் முளைத்து நிற்பதால் விவசாயிகள் திகைத்து நிற்கின்றனர். தாமிரபரணி பாசன பரப்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரதான பயிராக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழையை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆண்டுதோறும் நெல் சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். முன் கார் மற்றும் கார் சாகுபடியில் தண்ணீரின் இருப்பை பொறுத்து விவசாயிகள் வாழை, உளுந்து உள்ளிட்ட பயிர்களை தேர்வு செய்வதுண்டு.

இந்நிலையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் பெய்த பருவமழையால் நெல் சாகுபடி அதிகரித்தது. அதை தொடர்ந்து தற்போது கோடை காலத்தில் மழை பெய்யவே வாய்ப்பு இல்லை என கருதிய நெல்லை கால்வாய் பாசன விவசாயிகள் வயல்களில் உளுந்து விதைத்தனர். நெல்லை சுற்று வட்டார பகுதிகளான அருகன்குளம், கட்டுடையார்புரம், பாலாமடை, ராஜவல்லிபுரம், கட்டளை, குலையநேரி பகுதிகளில் விவசாயிகள் அறுவடை முடிந்தவுடன் உளுந்தை விதைத்து விட்டனர். உளுந்து விவசாயம் செய்யும் பெரும்பாலான விவசாயிகள் ஏற்கனவே நெல் நட்ட வயல்களில் உள்ள கதிருக்கான தாள்களை முழுமையாக அகற்றுவதில்லை. சில விவசாயிகள் வயல்களில் அறுவடை நடக்கும் முன்பே உளுந்தை வீசிவிட்டு, அறுவடையை மேற்கொள்வர். அறுவடையின்போது காலடிபடும்போது உளுந்து விதைகள் மண்ணுக்குள் புகுந்து வளருவதுண்டு.

இவ்வாண்டு கடந்த சில தினங்களாக கோடை மழை எதிர்பாராத வகையில் பல்வேறு இடங்களிலும் பெய்து வருகிறது. காலையில் கடும் வெயிலும், மாலையில் இடி மின்னலுடன் மழையும் இருப்பதால் உளுந்து நட்ட வயல்களில் உளுந்தோடு, விடுபட்ட தாள்கள் நெற்கதிராகவும் வளர்ந்து நிற்கிறது. சில வயல்களில் அறுவடையின்போது உதிர்ந்த பதர் நெல்லும் இப்போது முளைத்து நெற்கதிர்களாக காட்சியளிக்கின்றன. இதனால் ஒரே வயலில் இரு பயிர் சாகுபடி காணப்படுகிறது.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *