பயறு வகைப் பயிர்களின் மகசூலுக்கு உதவும் இலைவழி கரைசல்!

பயறு வகைப் பயிர்களான உளுந்து, பச்சைப்பயிறு, துவரை, கொண்டக் கடலை, மொச்சை போன்றவை புரதச்சத்து வழங்கும் இந்திய உணவு வகைகளில் முக்கியத்துவம் வகிக்கிறது. இத்தகைய பயறு வகைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கிட தமிழக அரசு வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு தரமான விதையை வழங்கி வருகிறது. கிலோவுக்கு ரூ.25 மானியமும், பெருவிளக்கப் பண்ணைகள் அமைத்திட ஹெக்டேருக்கு ரூ.5 ஆயிரம் இடுபொருள் மானியமும், பயிர் வகை நுண்சத்துகள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் மற்றும் உயிர் உரங்களுக்கு 50 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

மேலும், பயறு வகைப் பயிர்களை ஊக்குவித்திட, நிலத்தில் நீர்ப்பாசன குழாய்கள் பதிக்க ரூ.15 ஆயிரம் அளவில் ஹெக்டேருக்கு மானியம் வழங்கப்படுகிறது. வயல் வரப்புகளில் பயறுவகைப் பயிர்கள் சாகுபடி செய்திட 50 சதவீத மானிய விலையில் பயறு வகை விதைகள், பயறு வகைப் பயிர்களுக்கு இலைவழி தெளிப்புக்கு, டிஏபி உரங்கள் 50 சதவீதம் மானியத்தில் வழங்குகிறது. இந்த வகையில் பல்வேறு திட்டங்களை பயறு வகை உற்பத்தியை அதிகரித்திட தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தில் நடைமுறைப்படுத்தி வருகிறது.

உற்பத்தியை பெருக்கும் வழிகள்:

உளுந்து உள்ளிட்ட பயறு வகைப் பயிர்கள் மண்ணுக்கும், மனிதருக்கும் வளம் தருகிறது. இத்தகைய பயறு வகைப் பயிர்களுக்கு விவசாயிகள் மேலுரம் இடாததால் விளைச்சல் பாதிக்கிறது. பயறு வகைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்க 50 சதவீதம் பூக்கும் பருவத்திலும், அதன் பிறகு 15 தினங்கள் கழித்தும் என இருமுறை 2 சதவீதம் அளவில் டிஏபி கரைசல் தெளிக்க வேண்டும்.

இந்த டிஏபி கரைசலை மாலை வேளையில் தெளிக்க வேண்டும். இதனால், பூக்கள் அதிகரிப்பதோடு, பூக்கள் கொட்டாமல் அனைத்து பூக்களும் காய்களாக மாற வாய்ப்புள்ளது. ஒரு ஏக்கருக்குத் தேவைப்படும் 4 கிலோ டிஏபி உரத்தை, தெளிப்பதற்கு முந்தைய இரவு 20 லிட்டர் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
மறுநாள் மாலை நேரத்தில் ஊற வைத்த கரைசலில் தெளிந்த நீரை மட்டும் எடுத்து பயிர்களின் மீது தெளிக்க வேண்டும். கைத்தெளிப்பான் மூலம் ஒரு டேங்குக்கு 1 லிட்டர் டிஏபி கரைசலுடன், 9 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். இந்த வகையில், மாலை நேரத்தில் ஏக்கருக்கு 20 டேங்க் அளவில் கரைசலை தெளிக்க வேண்டும்.

இந்த கரைசலுடன், பயிர் ஊக்கிகளையும் வாங்கி தெளித்தால், பூக்கள் அதிகரித்து காய்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும். மணிகளின் எடையும் கூடும். இதனால், ஏக்கருக்கு 800 கிலோ முதல் 1,300 கிலோ வரை மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது.

இதனால், நடப்பு பருவத்தில் உளுந்து உள்ளிட்ட பயறு வகைப் பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், டிஏபி கரைசலை இலைவழி தெளிப்பு செய்து, பயறு வகைப் பயிர்களில் உற்பத்தியை அதிகரித்து லாபம் பெறலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *