கோடை மழை சேமிக்க உதவ பசுந்தாள்

தற்போது பெய்து வரும் கோடை மழைநீரை மண்ணில் நிலை நிறுத்த, உழவு செய்ய வேளாண் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை குறைந்து, மானாவாரி சாகுபடி பெரும்பாலான இடங்களில் நடைபெறவில்லை. தமிழ்நாட்டில் 60 சதவீதம் மானாவாரி நிலங்களாகும். ஆனால், இப்பகுதியில் பெய்யும் மழை அளவு மிக குறைவு. பெய்யும் காலமும் நிச்சயமற்றதாகி வருகிறது. ஒரே நாளில் அதிக மழை பெய்வதும், பிறகு மாதக்கணக்கில் மழையே இல்லாத நிலை ஏற்படுகிறது.

கிடைக்கின்ற மழையை நிலத்தில் சேமித்து வைத்து அதை பயன்படுத்தி, பயிர் சாகுபடி செய்வது எவ்வாறு என்பதுதான் மானாவாரி உழவர்களின் தலையாய பிரச்னை.பொழியும் சிறிதளவு மழையும் சரியான முறையில் பாதுகாக்கப்படாவிட்டால், மழை நீர் மண்ணிலிருந்து வழிந்து ஓடியோ, வெப்பத்தால் ஆவியாக மாறியோ அல்லது களைகளால் எடுத்து கொள்ளப்பட்டோ வீணாகி விடும். எனவே மானாவாரி நிலத்தில் விழும் ஒவ்வொரு சொட்டு நீரையும், சரியான முறையில் பயன்படுத்த கோடை உழவு செய்வது அவசியமாகிறது என வேளாண் விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.

செட்டிநாடு மானாவாரி ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் கண்ணன் கூறும்போது:

  • கோடை உழவு செய்வதன் மூலம் மழை நீர் ஆவியாவது தடுக்கப்படும். மண்ணின் ஈரத்தன்மை அதிகரிக்கிறது.
  • மண்ணின் அடியில் உள்ள பூச்சிகளின் லார்வாக்கள் மேற்கொண்டு வரப்பட்டு, பறவைகளால் உண்ணப்படுகிறது.
  • பூஞ்சான வித்துக்களின் செயல்பாட்டை குறைக்கும்.
  • கோடை உழவு மூலம் களை விதைகள் மேற்கொண்டு வரப்பட்டு முளைக்க செய்யப்படும். முளைத்த களைகள் அதிக வெப்பத்தால் காய்ந்து விடும்.
  • கோடை உழவு செய்யும்போது, பசுந்தாள் பயிரை சாகுபடி செய்து, அந்நிலத்திலேயே மடக்கி உழ வேண்டும். பசுந்தாள் உரம், பசுந்தாழைகள் மண்ணில் சிதைவடையும்போது, உண்டாகும் அங்கக அமிலங்கள் மற்றும் கார்பன்டை ஆக்சைடு போன்றவை, மண்ணின் கார, அமில நிலையை சமன்பாட்டில் வைத்து பயிர்க்கு கிட்டாமல் இருக்கும் பாஸ்பேட்களை விடுவிக்கின்றன. மண் வாழ் நுண்ணுயிரிகள் செயல்திறன் ஊக்குவிக்கப்படுகிறது.
  • எனவே, விவசாயிகள் கோடை உழவு மேற்கொண்டு, நிலத்தை செம்மைபடுத்தினால், வரும் சாகுபடி காலங்களில், நிறைவான பயன் அடையலாம், என்றார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *