சூரிய ஒளி மோட்டார் பம்பு செட் அமைக்க 90 சதவிகிதம் மானியம்

தமிழக வேளாண் துறையில் நவீன இயந்திரங்கள் மற்றும் கருவிகளை அறிமுகப்படுத்தி அவற்றை பிரபலப்படுத்துவதன் மூலம் கூடுதலாக பண்ணை சக்தியை வழங்கிடவும், வேளாண் தொழிலாளர்கள் பற்றாக்குறையை ஈடு செய்யவும், வேளாண் பணிகளை உரிய நேரத்தில் முடித்திடவும் வேளாண் இயந்திரமாக்கும் திட்டம் வேளாண்மை பொறியியல் துறையால் செயல்படுத்தப்படுகிறது.

வட்டார அளவில் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை கொண்ட வாடகை மையங்கள் அமைக்க தொழில் முனைவோர், விவசாயிகள், விவசாயக் குழுக்களுக்கு 40 சதவிகிதம் என அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.

விவசாய குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் ஒவ்வொன்றும் 10 லட்சம் மதிப்பீட்டில் பண்ணை இயந்திர மையங்களை கிராம அளவில் நிறுவிட 8 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இதன்படி குறைந்தபட்சம் எட்டு உறுப்பினர்களை கொண்ட விவசாய குழுக்களுக்கு பண்ணை இயந்திர மையங்களின் திட்ட மதிப்பீட்டில் 80 சதவிகிதம் மானியம் வழங்கப்படும்.

அறுவடைக்கு பின் செய்நேர்த்தி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைக்கான இயந்திரங்களை வழங்குதல் திட்டத்தில் விவசாயிகள், சுய உதவி குழுக்கள், விவசாய உபயோகிப்பாளர் குழுக்கள், விவசாய கூட்டுறவு சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர் ஆகிய இதர பயனாளிகளுக்கு 60 சதவிகிதம் அல்லது அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மானியத்தொகை, அதில் எது குறைவோ அத்தொகை மானியமாகவும், ஆதி திராவிடர், பழங்குடியினர், சிறு, குறு மற்றும் பெண் பயனாளிகளுக்கு அதிகபட்சமாக 60 சதவிகிதம் மானியமாகவும் வழங்கப்படுகிறது.

சூரிய ஒளி சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகளை விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் 5 முதல் 10 குதிரைத்திறன் கொண்ட மோட்டார் பம்பு செட்டுகள் கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆர்வம் உள்ள விவசாயிகளுக்கு 90 சதவிகிதம் மானியத்தில் வழங்கப்படும். இதன்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் இலவச மின் இணைப்பு பெற்றிருந்தால் அதனை துறக்க முன் வர வேண்டும். இலவச மின் இணைப்பிற்கான விண்ணப்பம் அளிந்திருந்தால், அதனை திரும்ப பெறுவதற்கு சம்மதக் கடிதம் அளிக்க வேண்டும்.

வேளாண்மை பொறியியல் துறை மூலம் ஆர்வம் உள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, போர்வெல் (ஆழ்துளை கிணறு) மற்றும் திறந்த வெளி கிணறுகள் ஆகியவற்றில் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகள் அமைத்திட வழி வகை செய்யப்படுகிறது. பயனாளிகள் பத்து சதவிகிதம் பங்களிப்பு தொகை செலுத்தியவுடன் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் 90 சதவிகதம் மானியத்தில் விவசாயிகளின் நிலங்களில் அமைத்து தரப்படும். தொடர்புக்கு மாவட்ட பொறியியல் துறையின் வேளாண் செயற்பொறியாளரை அணுகலாம்.

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “சூரிய ஒளி மோட்டார் பம்பு செட் அமைக்க 90 சதவிகிதம் மானியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *