வறட்சியை சமாளிக்க உதவும் மூடாக்கு தொழில்நுட்பம்!

கடந்த சில நாட்களாக கடும் வறட்சி காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை நீடித்தது. சில இடங்களில் தண்ணீர் இல்லாமல் மக்களும், விவசாயிகளும் பெரும் துன்பத்திற்கு உள்ளானார்கள். சில விவசாயிகள் மட்டும் இயற்கை விவசாயம் மற்றும் சிறிதளவு தண்ணீரை மட்டும் பயன்படுத்தி விவசாயம் செய்து வந்தனர். அவ்வாறு விவசாயிகள் பின்பற்றும் தொழில்நுட்பங்களில் மூடாக்கும் ஒன்று. அதிலும் பெரும்பாலான விவசாயிகள் வறட்சியான காலங்களில் பின்பற்றிச் சாதித்தும் வந்திருக்கின்றனர்.

இதேபோல ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்து கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு மூடாக்கு ஒரு வரப்பிரசாதம்தான். இந்த மூடாக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தன்னுடைய பத்து ஏக்கர் தென்னையும், 25 ஏக்கர் கொய்யாவையும் காப்பாற்றியிருக்கிறார், விவசாயி பிரகாஷ்.

வறட்சியால் வறண்ட கிணறு - மூடாக்கு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், ரெட்டிக் குப்பத்தில் இருக்கிறது, பிரகாஷின் பண்ணை. தண்ணீர் இல்லாததால், கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவரை சந்தித்தோம்.

ஆட்கள் தோண்டும் கிணற்றை ஆழமாக பார்த்துக் கொண்டிருந்தவர், முகத்தில் இன்னும் தண்ணீர் வரவில்லையே என்ற ஏக்கம் தென்பட்டது. நம்மை அழைத்துச் சென்று தென்னை மர நிழலில் அமர வைத்து பேசினார். தண்ணீர் இல்லாமல் எப்படி இவ்வளவு பசுமையாக வைத்திருக்கிறீர்கள் என்ற கேள்வியை முன் வைத்தோம். விரக்தியாக இருந்தவர் மெளனம் கலைத்து நம்மிடம் பேசத் தொடங்கினார். ” அண்ணன், தம்பினு நாங்க எல்லோரும் பரம்பரையா விவசாயம் செய்யுற குடும்பம். நான் முழுமையான இயற்கை விவசாயி கிடையாது. மொத்தமா எனக்கு 50 ஏக்கர் நிலமிருக்கு. ஆனா, இந்த வருஷம் வந்த வறட்சி போல எப்பவும் பார்த்ததில்ல. இந்த வருஷம் அப்படி ஒரு வறட்சி வந்துடுச்சு. சுத்தி இருக்குற நிலஙகள்ல தண்ணீ வத்துனா கூட என் தோட்டத்துல தண்ணி இருக்கும். இந்த வருஷம் சுத்தமா தண்ணி இல்லை. 20 அடிக்கும் மேல தோண்டியாச்சு இன்னும் தண்ணி கிடைக்கலை. சைடு போர் போட்டாலும் பலன் கிடைக்கல… என்ன பண்றதுன்னு தெரியலை” என்றவர் விரக்தியோடு தொடர்ந்தார்.

“10 ஏக்கர்ல தென்னை, கொய்யா 25 ஏக்கர், 10 ஏக்கர்ல மா, 5 ஏக்கர்ல சவுக்குனு பயிர் செய்துருக்கேன். நல்ல வேளை காய்கறிப் பயிரை விதைக்கல. விதைச்சிருந்தா தண்ணீர் இல்லாம பெரிய நஷ்டம் ஆகியிருக்கும். தென்னை தோட்டத்துக்கு உள்ள 200 ஆடுகளை வளர்க்குறேன். அதுல 40 தலைச்சேரி ஆடுகள், 10 போயர், 150 செம்மறியாடுகள்னு மூணு வகை ஆடுங்க இருக்கு. காலையில பரண்ல இருந்து திறந்து விட்டுடுறேன். தோட்டத்த சுத்தி வேலி இருக்குறதால ஆடுங்க வெளியில போகாது. தோட்டம் முழுக்க மேய்ஞ்சிட்டு வீட்டுக்கு வந்துடும். ஆடுங்க தோட்டத்துல மேயுறதால அதோட புழுக்கைகள் மண்ணுக்கு உரமாயிடும். தோட்டம் பெருசா இருக்குறதால ஆடுங்களுக்கு பெரும்பாலும் தீவனம் பிரச்னை இல்லை. ஆடுங்க இருக்குறதுனாலதான் ஓரளவு வறட்சியை சமாளிக்க முடியுது. அதுபோல என் தோட்டத்துல இருக்குற மூடாக்கு ஓரளவு வறட்சியை சமாளிக்க உதவுது. என் தோட்டத்துல இருக்குற பொருள் எதுவும் வெளியில போக கூடாதுங்குறதுல உறுதியா இருப்பேன். தென்னை மட்டையா இருந்தாலும் சரி, தேங்காய் மட்டையா இருந்தாலும் சரி எதுவுமே வெளியில போக கூடாது. இதுக்காகவே தென்னை மட்டை அரைக்கிற மிஷின வாங்கி வச்சிருக்கேன். இதுனால தென்னை மட்டைகளை அரைச்சு தென்னை மரங்களுக்கும், கொய்யா மரங்களுக்கும் மூடாக்கா போட்டுடுவேன். நான் முழு இயற்கை விவசாயி இல்லை. கொஞ்ச நாளா இயற்கை விவசாயம் பண்ண முயற்சி செஞ்சேன். ஆனா, எதிர்பார்த்த மகசூல் கிடைக்கல. அதனாலதான் மறுபடியும் செயற்கை பாதி, இயற்கை பாதின்னு போட்டு விவசாயம் செய்திட்டிருகேன்” என்றவர், மூடாக்கை காட்டி பேச ஆரம்பித்தார்.

தென்னை மூடாக்கு

“குறைஞ்ச தண்ணியை மட்டுந்தான் மூடாக்கு எடுத்துக்கும், அதுமட்டுமில்லாம எடுக்கும் தண்ணீரை எடுத்து தக்க வச்சிக்கும். இதுனால எப்பவும் தண்ணியை மரத்துக்கு கொடுத்துக்கிட்டே இருக்கும். மூடாக்கு மண்ணின் ஈரப்பதத்தை தக்க வச்சு, மண்புழுக்களை எப்பவும் இருக்குற மாதிரி பாத்துக்குது. உருவாகுற மண்புழுக்கள் 10 அடிக்கும் கீழ போய்ட்டு வர்றதால மண்ணுல உயிரோட்டம் எப்பவும் இருந்துகிட்டே இருக்கும். பாசன நீரையும் அவ்ளோ சீக்கிரம் ஆவியாக விடுறது இல்ல.

அதுவும் தென்னை மரத்து வேர்ப்பகுதியை சுத்தி களையை சின்னதா வளரவிட்டு தென்னை மட்டைங்களை கூழாக்கி தென்னை மரத்தை சுத்தி தூவலாம்.இதுதவிர, தென்னை மட்டைகள்ல அடி மட்டையை நீக்கிட்டு மேல் பகுதியை போட்டுட்டா அப்படியே மூடாக்கா மாறி மட்கிடும். இது மட்கும்போது, கார்பன், நைட்ரஜன் சத்துக்களைக் கொடுக்குது. ஒவ்வொரு கிலோ மட்கும் 4 லிட்டர் தண்ணீரை சேமிக்கும்.

வெறும் ஒரு கிலோ மட்கு மட்டும் இந்த அளவு தண்ணீரை சேமிக்குதுன்னா, வயல் முழுக்க மட்கு போட்டா எவ்வளவு தண்ணீர் மிச்சமாகும்ங்குறதை நீங்களே கணக்கு போட்டுக்கங்க. இந்த மூடாக்குனால வழக்கமா தென்னைக்கு கொடுக்குற தண்ணியை விட கம்மியா கொடுத்தா போதும். இந்த முறைதான் வறட்சியான காலத்துலேயும் விவசாயத்தை காப்பாத்த உதவுது. இதுமட்டுமில்லாம, கொய்யா இலைகளை வச்சும் மூடாக்கா போட்ருவேன். இங்க எல்லா இலைதழைகளையும் மட்க வச்சிருவேன். மூடாக்கை காய்கறி பயிர்களுக்கும் கொடுக்கலாம். அதனால தண்ணியை அதிக அளவில் மிச்சப்படுத்தலாம். என்னோட பண்ணையில இருக்குற ஆடுங்க மூலமா 150 ஆட்டுக்குட்டி விற்பனை செய்துடுறேன். இப்பவும் ஆட்டுக் குட்டிகளையும் விற்பனை செய்துட்டிருக்கேன். இது மூலமா எனக்கு கணிசமான லாபம் கிடைக்குது. என்றவர் வருமானம் பற்றிய கணக்குகளை சொல்ல தொடங்கினார்.

தென்னை மூடாக்கு

தினமும் எடுக்குற தேங்காயை விக்கிரவாண்டி டோல்கேட்டுக்கு பக்கத்துல இருக்குற கடைகள்ல விற்பனைக்கு கொடுத்துடுவேன். தென்னை வச்சு 4 வருஷம் ஆயிடுச்சு. வருஷத்துக்கு ஒரு மரத்துல 250 காய்கள் முதல் 300 காய்கள் வரைக்கும் கிடைக்கும். பெரும்பாலும் இளநியாத்தான் விற்பனை செய்யுறேன். வறட்சி காலத்துல 15 ரூபாயில இருந்து 20 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யுறேன். மத்த நேரத்துல 10 ரூபாய்னு விற்பனை செய்யுறேன். 10 ரூபாய்க்கு கம்மியா விற்பனை செய்ய மாட்டேன், அது கட்டுப்படியாகாது. தோராயமா 250 காய்களுக்கு 10 ரூபாய்னு விற்பனை செஞ்சா ஒரு மரத்துக்கு 2,500 ரூபாய் வருமானம் கிடைக்கும். அதுல செலவு எப்படியும் 1,000 ரூபாய் செலவாகிடும். மொத்தமா 1,500 ரூபாய் ஒரு மரத்துக்கு லாபமா நிக்கும். தென்னைக்கு இடையில ஊடுபயிரா கொய்யாவை நட்டிருக்குறதால, ஏக்கருக்கு 60 தென்னை மரங்களை மட்டும்தான் நடவு செய்துருக்கேன். ஏக்கருக்கு 60 தென்னை மரங்கள் மூலமா, 15,000 ரூபாய்கள் கிடைக்கும். இதுல ஒரு காய் 10 ரூபாய்னு விற்பனை செஞ்சாலும், 1,50,000 ரூபாய் ஒரு ஏக்கர்ல,ஒரு வருஷத்துக்கு லாபமா எடுக்கலாம். இதுல செலவு எப்படியும் 50,000 ரூபாயில இருந்து 75,000 ரூபாய் வரைக்கும் செலவாகிடும். இந்த வருஷம் வறட்சிங்குறதால விளைச்சலும் கம்மிதான். அதனால, இந்த வருஷம் லாபம் ஏக்கருக்கு 50,000-க்கும் கம்மியாத்தான் இருக்கும். இது எல்லாமே மூடாக்குனால மட்டும்தான் சாத்தியம்” என்றபடி விடைகொடுத்தார்.

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *