பார்த்தீனியம் கட்டுப்பாடு முறைகள்

பார்த்தீனியம் பற்றி நாம் ஏற்கனவே படித்துள்ளோம்.இதோ, மற்ற வழிகள் மூலம் பார்த்தீனியம் கட்டுப்பாடு:

  • பார்த்தீனியம் விதைகள் முளைக்கும் முன்னும் முளைத்த செடிகள் பூ பூத்து விதை உண்டாவதற்கு முன்னும் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம்.இதனால் விதைகள் முற்றி மேற்கொண்டு இச்செடி பரவுவது தடுக்கப்படுகிறது.

பார்த்தீனியம் விதைகள் முளைக்கும் முன் கட்டுப்படுத்தும் முறை

  • பார்த்தீனியம் நச்சுக்களை விதைகள் முளைப்பதை தடுக்க மழை காலத்தில் மண்ணில் போதுமான ஈரம் இருக்கும்பொழுது அட்ராடாப் களைக்கொல்லியை எக்டருக்கு 2.5 கிலோ என்ற அளவில் சுமார் 625 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பானால் நிலத்தின் மேல் சீராக தெளிக்க வேண்டும்.

பார்த்தீனியம் செடிகள் பூக்கும் முன் கட்டுப்படுத்தும் முறை

செடிகளை அகற்றி எரித்தல்: பூப்பதற்கு முன் கையுறை அணிந்து அல்லது ஏதாவது கருவியை உபயோகித்து செடிகளை வேருடன் அகற்றி எரிப்பதனால் விதை உண்டாகி பரவுவது தடுக்கப்படுகிறது.

களைக்கொல்லி உபயோகம்:

  • ஒரு லிட்டர் நீரில் 200 கிராம் சமையல் உப்பு (20 சதம்) மற்றும் 2 மில்லி டீபால் அல்லது சோப்பு திரவம் கலந்து நல்ல வெயில் நேரத்தில் செடிகள் முழுவதும் நனையும்படி கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.
  • ஒரு லிட்டர் நீருக்கு 2,4-டி (பெர்னாக்சோன்) 10 கிராம் அல்லது கிளைபோசேட் (ரவுண்டப்) 15 மில்லியுடன் அம்மோனியம் சல்பேட் 20 கிராம் + சோப்பு திரவம் 2 மி.லி. அல்லது மெட்ரிபுசின் (சென்கார்) 4 கிராம் ஆகிய களைக்கொல்லிகளில் ஏதாவது ஒன்றை கலந்து, வளர்ந்த பார்த்தீனியம் செடிகள் முழுவதும் நனையும்படி கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

உயிரியல் முறை கட்டுப்பாடு

  • தரிசு நிலங்களில் அடர் ஆவாரை மற்றும் துத்தி வகைச் செடிகளை போட்டு, செடிகளாக வளரச் செய்து பார்த்தீனியத்தின் வளர்ச்சியைக் குறைக்கலாம்.
  • மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக வளரும் தாவர இனங்களை வளர ஊக்குவிக்கலாம்.
  • பார்த்தீனியம் செடியை தின்று அழிக்கக்கூடிய சைக்கோகிராமா பைக்கலரேட்டா என்ற மெக்சிகன் வண்டுகளை பரவச் செய்தும் பார்த்தீனியத்தை கட்டுப்படுத்தலாம்.

பார்த்தீனியம் செடிகள் பூத்தபின் கட்டுப்படுத்தும் முறை

  •  செடிகள் பூத்த பின்னும் மேற்கூறிய களைக் கொல்லிகளைத் தெளிக்கலாம். ஆனால் செடிகள் முழுவதும் அழியாது.
  • இச்சூழ்நிலையில் பூத்த செடிகளை கையுறை அணிந்து அல்லது கருவிகள் மூலம் விதைகள் காற்றில் பரவும் முன் அகற்றி எரித்தல் வேண்டும்.

பார்த்தீனியத்தை உரமாக்குதல்:

  • பார்த்தீனியச் செடிகளை களைக்கொல்லி கொண்டு அழிக்காத தருணத்தில் அவற்றை வேருடன் அகற்றி நன்கு நறுக்கி, குழியில் போட்டு மக்கவைத்து உரமாக பயன்படுத்தலாம்.

வி.கு.பால்பாண்டி மற்றும் செ.ராதிகா, வேளாண் அறிவியல் நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவிலாங்குளம், அருப்புக்கோட்டை, விருதுநகர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *