மஞ்சள் அமோக விளைச்சல் தரும் பிரதிபா ரகம்

தமிழகத்தில் பரவலாகப் பயிரிடப்பட்ட ரகங்களுக்குப் பதிலாக, கேரளத்தின் கோழிக்கோடு பிரதிபா ரகத்தில் ஒரு செடிக்கு ஆறு முதல் ஏழு கிலோ வரை விளைச்சலைக் காண முடிகிறது. அதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பிரதிபா ரகத்துக்கு மாறிவருகின்றனர்.

மஞ்சள் பயிரில் ஒடிசா ரகம், பி.எஸ்.ஆர். 1, பி.எஸ்.ஆர். 2, கோ 1, கோ 2, பி.டி.சி. 10 எனப் பத்துக்கும் மேற்பட்ட ரகங்களில் ஒரு செடிக்கு இரண்டு முதல் மூன்று கிலோ வரையே விளைச்சல் கிடைத்துவந்தது. இதன்மூலம் ஏக்கருக்கு 16 முதல் 17 டன் பச்சை மஞ்சள் மகசூலை எதிர்பார்க்க முடியும். அதுவே காய்ந்த மஞ்சள் என்றால் மூன்று டன் கிடைத்தாலே அதிகம்.

ஆனால், பிரதிபா ரகப் பச்சை மஞ்சள் 32-லிருந்து 35 டன்னுக்குக் குறையாமலும், காய்ந்த மஞ்சள் ஆறு முதல் ஏழு டன் வரையிலும் கிடைக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன் மூன்றே விவசாயிகள் பயிரிட்டுவந்த இந்த பிரதிபா ரக மஞ்சளை, தற்போது 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாங்கி விதைத்து வருவதாகத் தெரிவிக்கிறது மஞ்சள் ஏற்றுமதியாளர் சங்கக் கூட்டமைப்பு.

ஒரு லட்சம் டன்

பிரதிபா மஞ்சள் ரகம் பயிரிடல் தொடர்பாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வி.எம்.ஆர். தோட்டம் மஞ்சள் ஏற்றுமதியாளர்களில் ஒருவரான ராமமூர்த்தி பகிர்ந்துகொண்டார்:

“விவசாயிகளின் முக்கியமான பணப் பயிர் மஞ்சள். ஈரோடு மாவட்ட விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் மஞ்சள் விவசாயத்தையே நம்பியுள்ளனர். இந்தியாவில் உற்பத்தியாகும் ஏழு லட்சம் டன் மஞ்சளில், தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சம் டன் விளைகிறது. ஈரோடு தவிர கோவை, திருப்பூர், சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களிலும் அதிக அளவு மஞ்சள் பயிரிடப்படுகிறது.

இதுவரை கிருஷ்ணா, சுகந்தன், சுவர்ணா, சுதர்சனா, பிரபா, சோரோமா, ரஷ்மி, ரங்கா, ராஜேந்திர சோனியா, காந்தி என்று பல்வேறு ரக மஞ்சள் விதைகளை விவசாயிகள் பயிரிட்டுவந்தார்கள்.

இரட்டிப்பு விளைச்சல்

இந்த ரக விதைகள் கிலோ ரூ. 30 முதல் ரூ. 35 வரையிலும் கிடைத்துவந்தன. அதேநேரம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூரில் சிலர் மட்டும் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிரதிபா ரகம் பயிரிடப்படுவதைக் கேள்விப்பட்டு, அங்கே போய் விதை (கிலோ ரூ.100) வாங்கிவந்து பயிரிட்டோம். அப்படி நான் மட்டும் இரண்டு வருஷங்களுக்கு முன்பு மூன்று ஏக்கரில் பிரதிபா ரகத்தைப் பயிரிட்டேன். எட்டு மாதங்களிலேயே விளைச்சல் இரட்டிப்பாகக் கிடைத்தது. அதை வைத்துக் கடந்த ஆண்டு ஒன்பது ஏக்கரில் பயிரிட்டேன்.

போன வருஷத்தைப் போலவே நல்ல விளைச்சல். புனே, கம்போடியாவுக்கு மஞ்சளை ஏற்றுமதி செஞ்சேன். இதை போலவே தாளவாடி, அந்தியூரில் பயிரிட்டவர்களுக்கும் நல்ல லாபம். பழைய ரகங்களில் விளைச்சல் சரிபாதிக்கும் கீழே மட்டுமல்ல; கிழங்கு அழுகல் நோய், இலைக்கருகல் நோய் என்று பல்வேறு நோய்த் தாக்குதலும் இருந்தது. பிரதிபா ரகத்தில் நோய்த் தாக்குதலும் இல்லை. காய்ந்த மஞ்சள் 30 நாட்கள் ஆனாலும் சுருங்குவதில்லை. இந்த மஞ்சளில் 6.5 சதவீதம் நிறமிச் சத்தும் உள்ளதால் சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

எனவே, இதைப் பார்த்து 400-க்கும் மேற்பட்ட சுற்றுப்புற விவசாயிகள் தற்போது பழைய ரகங்களைக் கைவிட்டு, பிரதிபா ரகத்துக்கு மாறிப் பயிரிட்டுவருகிறார்கள். எல்லா விதமான மண்ணின் தன்மைக்கும், கிணற்று நீர், ஆற்று நீர், சொட்டு நீர்ப் பாசன முறை எனச் சகலத்துக்கும் ஏற்றதாக இந்த ரகம் உள்ளது. 15 நாட்களுக்கு முன்பு வேளாண் துறையினர் 10 சென்ட் நிலப்பரப்பில் ஆய்வு நடத்தி, இந்த ரக விதை சிறப்பானது, விளைச்சல் நன்றாக உள்ளது என்று சான்று தந்துவிட்டுப் போயிருக்கிறார்கள்!”.

ராமமூர்த்தி, தொடர்புக்கு: 09442352121

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *