மண் சோதனை முறை வேளாண்துறை அட்வைஸ்

மானாவாரி நிலங்களில் நீர் பற்றாக்குறை மற்றும் மண்ணின் ஊட்டச்சத்து குறைபாடுகளின் காரணமாக பயிர்களின் மகசூல் வெகுவாக குறைந்து வருகிறது. மண்ணின் பண்புகள் உரமேலாண்மை முறைகளை கையாண்டு வந்தால் மண்வளத்தினை பாதுகாப்பதோடு, பயிர் விளைச்சலையும் அதிகரிக்கலாம். இதற்கு ஒரே வழி மண்மாதிரி எடுத்து பரிசோதனை செய்வதே ஆகும்.

எப்படி எடுக்கலாம்?

மாதிரி எடுக்கும் ஆழம் புல் மற்றும் புல்வெளி 2 அங்குலத்தில் 5 செ.மீ,  நெல், கேழ்வரகு, நிலக்கடலை, கம்பு மற்றும் சில தானியப் பயிர்கள் 6 அங்குலம்  15 செ.மீ, பருத்தி, கரும்பு, வாழை, மரவள்ளி மற்றும் காய்கறிகள் 9 அங்குலம்  22 செ.மீ, நிரந்தரப்பயிர்கள் , மழைப்பயிர்கள், பழத்தோட்டப்பயிர்கள் 12,  24, 36 அங்குல ஆழங்களில் 3 மண் மாதிரிகளை எடுக்க வேண்டும். 30, 60, 90  செ.மீ ஆழங்களில் 3 மண் மாதிரிகளை எடுக்க வேண்டும்.

மண் மாதிரி எடுக்கும் பகுதி முழுவதையும், குறுக்கும், நெடுக்கமாக நடந்து அப்பகுதியில் காணப்படும் நிலச்சரிவு, மண்ணின் நிறம், நயம், மேலாண்மைமுறை பயிர் சுழற்சி இவற்றிற்கு ஏற்றாற்போல் பல பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பிரிவிலிருந்தும் தனித்தனியாக மண்மாதிரி சேகரிக்க வேண்டும். முக்கியமாக ரசாயன உரங்கள், மக்கிய எரு மற்றும் குப்பை உரங்கள் பூஞ்சாண மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இடப்பட்ட பகுதிகளில் மாதிரிகள் எடுப்பதை தவிர்க்கவேண்டும். வயலின் வரப்பு பகுதிகள், வாய்க்கால்கள், மரத்தடி நிழல், உரக்குழிகள், கிணற்றுப்பகுதி இவற்றிலும் மண்மாதிரி எடுக்கக்கூடாது.

அதிகபட்சமாக 5 ஹெக்டருக்கு ஒரு மாதிரியும், குறைந்தபட்சம் கால் ஹெக்டேருக்கு ஒரு மாதிரியும் தயாரிக்க வேண்டும். நிலம் தரிசாக இருக்கும் காலத்தில் மண் மாதிரிகள் எடுக்கலாம். உரமிட்டவுடன் சேகரிக்கக்கூடாது. குறைந்தது 3 மாதம் இடைவெளி தேவை.  பயிர்கள் உள்ள நிலங்களில் மண்மாதிரி எடுக்கக்கூடாது. மண்மாதிரி எடுக்கவேண்டிய இடத்தில் உள்ள இலை, சருகு, புல், கற்கள் போன்றவற்றை முறையாக வயல்மண்ணை நீக்காமல் அப்புறப்படுத்தவேண்டும்.

மண்வெட்டி கூடாது

மண் மாதிரி எடுக்கும்போது ஆங்கில எழுத்து வி போல் மண்வெட்டியால் இருபுறமும் வெட்டி அவ்விடத்தில் உட்புறமண்ணை நீக்கிவிட வேண்டும். பின்பு வி யின் இருபுறமும் 15 செ.மீ அளவு கரண்டி மண்மாதிரி சேகரிக்கவேண்டும். குறைந்தபட்சம் ஒரு ஹெக்டேரில் 10 முதல் 20 இடங்களில் மாதிரிகள் சேகரிக்கவேண்டும். ஈரமான மண்மாதிரிகளாக இருந்தால் முதலில் அதனை நிழலில் உலர்த்தவேண்டும். நுண்ணூட்டங்கள் அறிய வேண்டும் என்றால் எவர்சில்வர் அல்லது பிளாஸ்டிக் குப்பி மூலம் மண்மாதிரிகளை எடுத்து பிளாஸ்டிக் வாளியில் சேகரிக்கவேண்டும். மண்வெட்டி மற்றும் இரும்புச்சட்டிகளை பயன்படுத்தக்கூடாது.

சேகரிக்கப்பட்ட மண்மாதிரிகளை ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு நன்றாக கலக்கி அதிலிருந்து ஆய்வுக்கு அரை கிலோ மண்மாதிரியை கால் குறைப்பு முறையில் எடுக்க வேண்டும். மண்ணை சுத்தமான சாக்கு அல்லது பாலித்தீன் தாள் மீது பரப்பி அதை நான்காக பிரித்து அரை கிலோ அளவு வரும்வரை திரும்ப திரும்ப கையாளவேண்டும்.

மேறகூறப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி விவசாயிகள் மண்மாதிரிகளை எடுத்து மாவட்டந் தோறும் உள்ள மண்பரிசோதனை நிலையங்களில் அல்லது வேளாண் அறிவியல் நிலையங்களில் கொடுத்து மண்வள அட்டையினை பெற்று, அதன்படி எரு உர நிர்வாகம் செய்து பயிர் மகசூலை அதிகரிக்கலாம்.

இத்தகவலை கோவிலாங்குளம் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் பால்பாண்டி, மண்ணியல் துறை உதவி பேராசிரியர் பாக்கியாத்து சாலிகா  தெரிவித்துள்ளனர்.

நன்றி:தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *