இந்தியாவின் மிகப் பழமையான மரம் !

ராமாயணம், மகாபாரதம், பிரஹத்சம்ஹிதா மட்டுமின்றி சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இடம்பெற்றுள்ள இந்தியாவின் மிகவும் பழமையான மரம், நாவல் மரம். மிகவும் சாதாரணமாக வளரக்கூடிய மரங்களில், இது மிகவும் முக்கியமானது.

பழங்களே பிரதானம்

 Syzygium cumini; தாவரக் குடும்பம் மிர்டேஸி என்ற தாவரப் பெயர் கொண்ட நாவல் மரம் இந்தியா முழுவதும் காணப்பட்டாலும், தமிழகத்தில் அதிகமாக வளரும் மரங்களில் ஒன்று. ஜனவரி முதல் ஏப்ரல்வரை பூக்களையும், மார்ச் முதல் செப்டம்பர்வரை பழங்களையும் தாங்கியிருக்கும்.

இயல்பாக வளர்வது மட்டுமின்றி மக்களால் வளர்க்கப்பட்டுவரும் மரங்களில் இது முக்கியமானது. மரத்தின் முக்கியமானபாகங்கள் அதன் பழங்களே. தமிழகத்தில் வளரும் மரங்களின் பழங்கள் சற்றுச் சிறியவை, வட இந்திய மரங்களின் பழங்கள் பெரியவை; மிகுந்த சுவையுடையவை.

பழங்கள் அதிகமாக இருப்பதால் வடஇந்தியாவில் கிளிகளுக்குச் சிறந்த புகலிடமாக இந்த மரம் திகழ்கிறது. பழங்கள் நிறைய உண்டாக்கப்பட்டால் அந்தக் காலகட்டம் உளுந்து, எள் போன்ற பயிர்களுக்குச் சிறந்த காலமாக அமையும் என்றும், இந்த மரம் மிகவும் செழிப்பாக வளரும் இடங்களில் நிலத்தடி நீர் நன்கு காணப்படும் என்றும், அந்த மண்ணில் தங்கத் தாதுகள் மிகுந்திருக்கும் என்றும் பிரஹத்சம்ஹிதா குறிப்பிடுகிறது.

சுரபாலரின் விருக்ஷாயுர்வேதத்தின் 232-வது பாடலில் இதன் பழத்துடன் “பவளம், வெட்டி வேர் சேர்த்து அரைத்த விழுதை மாமரத்தின் வேர்ப்பகுதியில் பூசி, நீர் கலந்து தெளித்தால், மாமரம் மணம் நிறைந்த மலர்களை உருவாக்கித் தேனீக்களை ஈர்த்து நல்ல சுவையுள்ள மாம்பழங்களை உண்டாக்கும்” என்கிறது.

Courtesy: Hindu
Courtesy: Hindu

இந்தியாவின் மரம்

‘ஜம்பூத்வீபே’ என்ற வடமொழி மந்திரத்தின்படி பண்டைய ‘இந்தியத் தீவில்’ நாவல் மரங்கள் (ஜம்பு மரங்கள்) நிறைந்து காணப்பட்டதால், இந்தியாவே இந்த தாவரத்தின் பெயரால் அழைக்கப்பட்டது. ‘நாவலந்தீவு’ என்ற பெயரும் உண்டு.

ஒரு புராணக் கதையின்படி மேகக் கடவுளான வருணன் நாவல் மரமாக மாறினார். இதன் காரணமாகவே, ஐம்பூதங்களில் நீருக்கான தலமாகத் திருச்சி ஜம்புகேஸ்வரர் கோயில் விளங்குகிறது. இந்தக் கோயிலின் தலமரமாக நாவல் (வெண்ணாவல் அமர்ந்துறை வேதியனை – திருஞான சம்பந்தர்) மரம் திகழ்கிறது. மற்றொரு சிவன் கோவிலான திருநாவலூரிலும் நாவல் மரம் தலமரமாக உள்ளது.

வடநாட்டில் பழத்தின் நிறம் கருதி இது கிருஷ்ணருக்கும், மகாராஷ்டிரப் பகுதியில் விநாயகருக்கும், தமிழகத்தில் சிவனுக்கும் முருகனுக்கும் உரித்தானதாக இந்த மரம் கருதப்படுகிறது. அவ்வையார் ‘முருகனிடம் சுட்ட பழம், வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?’ என்று கேட்டது, நாவல் பழத்தைத்தான் என்று கருதப்படுகிறது. பௌத்தர்களுக்கும் சமணர்களுக்கும்கூட நாவல் மரம் ஒரு புனிதத் தாவரம். புத்தக் கபிலவஸ்தா இந்த மரத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தார். பதிமூன்றாவது சமணத் தீர்த்தங்கரரான விமலநாதர், நாவல் மரத்தடியில்தான் ஞானம் பெற்றதாகக் கருதப்படுகிறது.

நீரிழிவுக்கு மாமருந்தாகும் கனி

நாவல் மரத்தின் மருத்துவப் பயன்கள் போற்றத்தக்கவை. இதன் மருத்துவப் பெயர்கள் ஆருசுதம், நேரேடம் (நேரேடு). மரத்தின் அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பயன் கொண்டவை.

Courtesy: Hindu
Courtesy: Hindu

விதை சூரணம் / பொடி நீரிழிவு நோயைப் போக்கும், வயிற்றுப் போக்கை நீக்கும், கருப்பை ரத்தப்போக்கைத் தடுக்கும். ஆஸ்துமாவைக் குணப்படுத்தும், கபத்தைப் போக்கும், குடல் புழுக்களைக் கொல்லும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், தோல் நோய்களைக் குணப்படுத்தும். மரத்தின் வேறு பகுதிகளும் நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாக அமையும்; உயிரி எதிர்ப்பொருளாகச் செயல்படும்: பூச்சிக்கொல்லியாகப் பயன்படும்; கபத்தையும் பித்தத்தையும் போக்கும்.

நாவல் விதைப் பொடியோடு மாமரத்தின் தளிர் இலைகளையும் தயிரையும் கலந்து அரைத்து உட்கொண்டால் சீதபேதி நீங்கும். பழம், உணவு செரிமானத்துக்கு உதவும். மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகுவதைத் தடுக்கும். கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கும். நல்ல டானிக்காகச் செயல்படும். மரப்பட்டையும் மேலே குறிப்பிடப்பட்ட பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கும்.

ஆக்சிஜன் அமுதசுரபி

சங்க இலக்கியத்திலும் வடமொழி இலக்கியத்திலும் பரவலாகச் சுட்டப்பட்டுள்ள நாவல் மரம், நல்ல நிழல் தரும் மரம். வழிப்போக்கர்களுக்கு நல்ல நிழல் கொடுப்பது மட்டுமின்றி, கோடையில் பழங்களையும் அதிகம் நல்கும். இதன் காரணமாகவே பன்னெடுங்காலமாக இது ஒரு சாலையோரத் தாவரமாக இந்தியா முழுவதும் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. பேரரசர் அசோகர் நட்ட சாலையோர மரங்களில் இது முக்கியமான ஒன்று என்பதற்குச் சான்றுகள் உள்ளன. தற்கால ஆய்வுகளின்படி இந்த மரம் வாகனப் புகையால் ஏற்படும் காற்று மாசுறுதலை நன்று தாங்கவல்லவை என்று அறியப்பட்டுள்ளது.

மேலும், இந்த மரம் அதிக அளவு ஆக்ஸிஜனைக் காற்றில் வெளியிடுகிறது.

கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் வெட்டப்பட்ட மரங்களில் புளிய மரத்துக்கும் தூங்குமூஞ்சி மரத்துக்கும் அடுத்தபடியாக நாவல் மரங்கள் அதிகம் இருந்ததாகத் தெரிய வருகிறது.

எனவே, நாவல் மரங்களின் எண்ணிக்கையைச் சாலை ஓரங்களில் அதிகரிப்பதற்கான முயற்சிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தத் தாவரத்துக்கு நல்ல உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தக வாய்ப்புகள் அதிகமாகியுள்ள நிலையில், பற்றாக்குறையைத் தடுக்க மேற்கூறப்பட்ட முயற்சி அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *