ஒரு கிலோ இலை ₹1500.. அழிவின் விளிம்பில் கருநொச்சி மூலிகை!

சில வகை மூலிகைகளில் ஏதாவது ஒரு பாகம் மட்டுமே அதிகமான மருத்துவக் குணங்களைக் கொண்டிருக்கும். கருநொச்சி மூலிகைச் செடி முழுவதும் மருத்துவக் குணங்களைக் கொண்டது. இதனால் சித்தர்கள் இதனை ஓர் அபூர்வ வகை மூலிகையாகவே வர்ணித்து வருகின்றனர்.

இன்றைய தலைமுறைகள் மறந்த ஒரு மூலிகை கருநொச்சி என்றால் மிகையாகாது. இதனை `ராஜாளிப்பச்சிலை’ என்றும் அழைப்பர். இது சிறிய மர வகையைச் சேர்ந்த மூலிகைத் தாவரம். கருநொச்சி அனைத்து இடங்களிலும் வேலிக்காவல் செடியாகவும் வளர்க்கப்பட்டு வருகிறது. நொச்சிகளில் பல வகைகள் இருந்தாலும், வெண்நொச்சி, கருநொச்சி, நீர்நொச்சி என மூன்று ரகங்கள் முக்கியமானவை. வெண்நொச்சிதான் பெரும்பாலான இடங்களில் வளர்கிறது. கருநொச்சி அதிக மருத்துவப் பயன்களைக் கொண்டதால், சித்த வைத்தியங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு இன்று தமிழ்நாட்டில் அருகிவிட்டது. கொல்லிமலைப் பகுதிகளில் கருநொச்சி அதிகமாகக் காணப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் (vitex negundo) இது (lamiaceae) குடும்பத்தைச் சேர்ந்தது.

கருநொச்சி

கருநொச்சியானது, நொச்சி செடியைப் போல் தோற்றம் கொண்டிருந்தாலும், இலை, தண்டு, பூ இவை கருப்பு நிறமாகவே இருக்கும். இது நீர் நிலைகள் அதிகம் உள்ள இடங்களில் வளரக் கூடிய ஒரு வகை புதர்ச் செடியாகும். 3 முதல் 5 கூட்டு இலைகளை உடையது. இது ஓர் அரிய வகை முலிகை ஆகும். கருநொச்சியின் ஒரு கிலோ இலை 500 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரையிலும், சிறிய செடியின் விலை 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரையிலும் சந்தையில் விற்பனையாகிறது.

வெண்ணொச்சிக் குச்சிகள் வேலி பின்னவும், கூடை பின்னவும் பயன்படுகிறது. கருநொச்சி இலையை மாடுகள் மேயும். ஆனால் வெண்ணொச்சியை ஆடுகள் ஒன்றிரண்டு முறைதான் கடிக்கும். கருநொச்சி இலையின் காட்டமான மணம் காரணமாகச் சில பூச்சிகள் இதனை நெருங்குவதில்லை. ஆதலால் தானிய பாதுகாப்புக்குக் கருநொச்சி இலை பயன்படுகிறது. ஓலைச் சுவடிகளை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும் கருநொச்சியைப் பயன்படுத்துகின்றனர். நொச்சியில் பல ரகங்கள் இருந்தாலும் வெண்ணொச்சிதான் பல இடங்களில் வளர்கிறது. இதில் வேதிப் பொருள்களான ஆண்ட்ரோக்ராஃபோலைடு, பியுனாய்டு டை டெர்ப்பீன் கஃபியிக், க்ளோரோ ஜினிக், செறிவற்ற லாக்டோன், சைட்டோ ஸ்டீரால் போன்றவை காணப்படுகின்றன.

நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் அதிகமான பயன் கிடைக்கும்.

காய்ந்த இலைகளின் புகையானது, தலைவலி மற்றும் சளி அடைப்பினை நீக்கும் நாள்பட்ட புற்றுநோய் புண்களில் இருந்தும், துர்நாற்றமுள்ள சீழ்ப் பகுதிகளை சரி செய்யவும் மற்றும் பூச்சிகளை ஒழிக்க இலையின் சாற்றைப் பயன்படுத்துகின்றனர்.

இது ஒரு காய கற்ப மூலிகை மற்றும் ரசவாத மூலிகை என்று அழைக்கப்படுகிறது. கை கால்களில் ஏற்படும் ஓயாத குடைச்சலை குணமாக்கும். மேலும் நீர்ப்பினிச்சம், மண்டை குத்தல் குணமாகும். கை கால் செயலிழந்தால் இந்த நொச்சி இலை அமிர்த சஞ்சீவி போல் உதவும். கருநொச்சி இலைகளின் உயிர்ச்சாறு, சீதப்பேதி, உடல் பலவீனம், அஜீரணம், மந்தமாகச் செயல்படும் ஈரல், நரம்பு வலி, செரிமானம், ஆகியவற்றுக்குப் பயனளிக்கிறது. ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றின் சாற்றினைக் கலந்து செய்யப்படும் மாத்திரைகள் குழந்தைகளின் அஜீரணத்தைப் போக்கும்.

கருநொச்சி வேர்

Photo – Snapdeal 

கருநொச்சி தைலமானது ஜுரம் தடுக்கும் மற்றும் வாய் குழறுதலைத் தடுக்கும். மார்புச் சளிக்கு நல்ல மருந்து. நீரிழிவு நோய், மேகவெட்டை நோய் குணமாகும். நொச்சி இலையைக் கசக்கி தலையில் வைத்துக் கட்டினால் தலைப்பாரம் குறையும். இதன் இலையை வதக்கி வீக்கங்களுக்கும் கட்டிகளுக்கும் கட்ட அவை கரைந்து போகும். இன்றைக்கும் கிராமங்களில் இந்த வழக்கம் இருந்துதான் வருகிறது. இதன் இலையை வதக்கி துணியில் வைத்து தாங்கக் கூடிய சூட்டில் ஒத்தடம் கொடுத்தால் கைவிரல், கால்விரல் கணுக்களின் வீக்கங்கள் குறையும். இது நன்கு மருத்துவக் குணங்கள் நிறைந்தது. நொச்சி இலைச்சாறு கால் லிட்டர், பொடுதலைச்சாறு கால் லிட்டர், நல்லெண்ணெய் கால் லிட்டர் எடுத்து தைலம் காய்ச்சி, மூக்கில் நுகரச் செய்தால் கண்டமாலை என்னும் கொடிய நோய் குணமாகும்.

இதன் வேரின் அடர்ந்த கசாயம் குடலை இளக்கி உணர்ச்சியூட்டி, உடல் அசதியைப் போக்கும். இது வயிற்றிலுள்ள பூச்சிக் கொல்லியாகப் பயன்படுகிறது. இதன் கசப்பான கசாயம் விட்டு விட்டு ஏற்படும். நொச்சி இலையை இடித்துச் சாறு எடுத்து நல்லெண்ணெயைச் சேர்த்து காய வைத்து தைலம் தயாரிக்கலாம். இதைக் காயங்களின் மேல் தடவ காயம் குணமடையும். இந்த எண்ணெய்யைத் தடவி ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளித்து வந்தால் தலைவலி மற்றும் தலை நோய்கள் அனைத்தும் குணமாகும். கருநொச்சி எண்ணெய்யை அதிகாலையில் வைத்துக் குளிப்பது மிகவும் நல்லது. ஆனால், அன்றைய தினம் புளியைக் குறைத்து சாப்பிட வேண்டும். எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாளில் பகலில் தூங்கக் கூடாது. பொதுவாக இயற்கையில் அதிக மருத்துவக் குணமுடைய தாவரங்களாக  இருந்தாலும், இதில் அதிக மருத்துவக் குணம் உள்ளதால் மருத்துவத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.

நன்றி: விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *