வறட்சி பகுதியில் மிளகு சாகுபடி செய்து சாதனை!

குளிர் பிரதேசங்களிலும், மலை பிரதேசங்களிலும் மட்டுமே விளையக்கூடிய மிளகை, வறட்சி மாவட்டமான புதுக்கோட்டையில் விளைவித்து, விவசாயி சாதனை படைத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், வாழை, நெல், கரும்பு, சோளம், கடலை, பூக்கள் உட்பட, பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. வறட்சி பகுதியாக இருப்பதால் ஆறு, குளங்கள் இல்லாமல், 1,000 அடி வரை, ஆழ்குழாய் கிணறு அமைத்து விவசாயம் செய்யப்படுகிறது.

வடகாடு அருகே வடக்குப்பட்டியை சேர்ந்த விவசாயி பால்சாமி, 52, என்பவர், அதிக லாபம் தரக்கூடியதும், மலை பிரதேசங்களிலும், குளிர் பிரதேசங்களிலும் விளையும் என கூறி வந்த மிளகு விவசாயத்தை செய்ய முடிவெடுத்தார். இதற்காக அவர், கேரளா சென்று, மிளகு செடிகளை வாங்கி, 1991ல் நடவு செய்தார்.

மிளகில், 36 வகைகள் இருந்த போதும், அதில் எந்த ரகம் இங்கு விளையும் என சோதனை செய்தார். அதில், கரிமுண்டா, காவேரி, வயநாடா ஆகிய ரக மிளகு தான் இங்கு நன்றாக விளையும் என தேர்வு செய்து, அவற்றை, தென்னை மற்றும் காபி தோட்டங்களில், ஊடுபயிராக பயிரிட்டுள்ளார்.

தற்போது, ஒரு ஏக்கருக்கு, மிக குறைந்த செலவில், இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் மிளகு விற்பனை செய்து வருகிறார்.

Courtesy: Dinamalar

ஒருமுறை பயிர் செய்யப்படும் மிளகு கொடி, பயிரிட்ட, மூன்றாவது ஆண்டு முதல் பலன் கொடுக்க துவங்கும். இதுவே, ஐந்து ஆண்டுகள் கடந்தால், ஒரு கொடியில், 2 முதல், 5 கிலோ வரை மிளகு கிடைக்கும். ஒருமுறை நடவு செய்யப்படும் பயிர், 30 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும் என்பதால், இது, விவசாயிகளுக்கு அதிக லாபம் தரக்கூடிய பயிராக உள்ளது.

பூச்சி தாக்காது :

பால்சாமி கூறியதாவது:

  • ஏற்றுமதி தரத்திற்கு வடக்குப்பட்டியில் மிளகு விளைகிறது.
  • தென்னை, காபி தோட்டத்தில் ஊடுபயிராக, 15 ஏக்கரில் மிளகு பயிரிட்டுள்ளேன்.
  • 28 அடிக்கு குறையாமல், இடைவெளி உள்ள இரண்டு தென்னை மற்றும் காப்பி மரங்களுக்கு இடையில், 10 அடிக்கு ஒன்று என்ற முறையில் நடவு செய்தால், ஒரு ஏக்கருக்கு, 250 கொடிக்கு மேல் நடவு செய்யலாம்.
  • மிளகு கொடியை, ஏதேனும் ஒரு மரத்தில் படர விட்டால் தான் மிளகு காய்க்கும். எனவே, அதற்கு ஊன்று கோலாக, உயிருள்ள மரங்களையோ அல்லது கனமான பைப்புகளை, கான்கிரீட் அமைத்து ஊன்றியோ கொடியை படர விடலாம்.
  • மிளகு கொடியின் இலைகள் கூட, காட்டமாக இருப்பதால் பூச்சி தாக்காது.
  • தமிழக அரசு, மிளகு பயிர் செய்ய, மானியத்துடன் வங்கிக்கடன் கொடுக்கிறது. ஆகையால், எந்த ஒரு விவசாயத்திலும் கிடைக்காத லாபம், மிளகு விளைச்சலில் கிடைக்கிறது.
  • ஆண்டில், எப்போதும் விற்பனை செய்வதில் பிரச்னையே இல்லாத பயிராக மிளகு உள்ளது. இங்கு விளைந்த மிளகு, ஏற்றுமதிக்கு, ஏற்றதாக உள்ளதால், அதிகளவு லாபம் ஈட்டலாம்.
  • இன்னும் சிலர், இப்பகுதியில் மிளகு சாகுபடி சரியாக வராது என்ற எண்ணத்திலேயே உள்ளனர்.
  • எனவே, சந்தேகம் உள்ளவர்கள் என் தோட்டத்திற்கு வந்தால், தேவையான ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்குவேன்.
  • மேலும், மிளகு கொடிக்கு பதிலாக, மிளகு செடியிலேயே காய் காய்க்க புதிய முறையை கண்டுபிடித்து உள்ளேன். இதை அனைவரும், குறைந்த அளவுள்ள மண் தோட்டம் முதல், மாடி தோட்டம் வரை பயிரிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *