சுற்று சூழலை வணங்கும் பிஷ்னோய்கள்

ராஜஸ்தான் மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் வசிப்பவர்கள் பிஷ்னோய் சமூகத்தினர். மரங்கள், காட்டுயிர் பாதுகாப்பைத் தங்களுடைய தார்மீகக் கடமையாகக்கொண்டு வணங்கும் வித்தியாசமான சமூகம் இது. ‘மனித உயிர்கள் மட்டுமல்ல மற்ற உயிரினங்கள், தாவரங்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும்’ என்ற முக்கியமான கொள்கையைக் கொண்டவர்கள் இந்தச் சமூகத்தினர்.

ஆனால், இவர்களைப் பற்றி இப்படி விலாவாரியாகச் சொல்வதைவிட, சிங்காரா வகை மானை வேட்டையாடிச் சிக்கிய பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது காட்டுயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் காரணமாக இருந்தது இந்தச் சமூகம்தான் என்றால் சட்டெனப் புரிந்துவிடும்.

29-ஐ மதிக்கும் சமூகம்

சுமார் 527 வருடங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் தோன்றிய சமூகம், பிஷ்னோய். தூய்மை, அன்பு, அகிம்சை, உயிரினங்களின் மீது நேசம், மரங்கள் மீது பாசம் என மொத்தம் 29 நல்வழிகளைத் தார்மீகக் கடமையாகக்கொண்டு உருவானது. ‘பிஷ்‘ என்றால் இருபது, ‘னோய்‘ என்றால் ஒன்பது என அர்த்தம் கொண்டதால், அதற்குப் பிஷ்னோய் எனும் பெயர் வந்தது. முஸ்லீம்கள் 786 எனும் எண்ணைப் புனிதமாகக் கருதுவதைப் போல், பிஷ்னோய்கள் 29 எனும் எண்ணை மிகவும் புனிதமாக மதிக்கிறார்கள்.

1485-ம் ஆண்டில் இந்தச் சமூகத்தை உருவாக்கிய குரு ஜம்பேஷ்வர் பிஷ்னோய், அந்தச் சமூகத்தின் கடவுளாகக் கருதப்படுகிறார். ராஜஸ்தானில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜோத்பூர் பகுதியில் பிஷ்னோய் மக்கள் அதிகம் வாழ்கின்றனர். ஜோத்பூரில் இருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில் சல்மான் கான் மான் வேட்டையாடியதாகக் கூறப்படும் கங்காணி காடு உள்ளது. பெரும்பாலும் பொட்டல் காடான இங்கு, ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் வயல்வெளியைப் பார்க்கலாம். இங்கு மயில்கள், சிங்காரா மான், வெளிமான், நீல்காய் போன்றவை பதற்றம் இன்றி மேய்ந்து கொண்டிருப்பதையும் பார்க்கலாம்.

மான்களுக்குத் தாய்ப்பால்

இங்குள்ள வீடுகள், தெருக்களில் சிங்காரா மான்கள், பிஷ்னோய் சமூகத்தினரின் வீட்டுவிலங்குகளைப் போல் நடமாடிக் கொண்டிருக்கும். இவர்களில் கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள் இடையே அதிசயமான ஒரு வழக்கம் உள்ளது. தங்கள் குழந்தைகளுக்கு இணையாகச் சிங்காரா மான்குட்டிகளுக்கும் இவர்கள் தாய்பால் ஊட்டுவதைப் பார்க்கலாம்.

பிஷ்னோய் சமூகம் தொடங்கிய காலத்தில் இருந்து மான்குட்டிகளுக்குத் தாய்பால் தரும் வழக்கம், இப்பெண்களிடம் உண்டு. தாய்மான் சில காரணங்களால் இறந்துவிடும்போது, ஆதரவற்ற குட்டிகளை வாழ வைக்கப் பிஷ்னோய் பெண்கள் தம் பிள்ளைகளைப் போலவே மான்களைப் பாலூட்டி வளர்க்கிறார்கள். அதிகபட்சமாக மூன்று மாதத்துக்குத் தாய்பால் ஊட்டிய பின், சிங்காரா மான்கள் இரை தேடக் கற்றுக்கொள்கின்றன. அதன் பிறகு சிங்காரா மான்குட்டிகள் கங்காணி காட்டின் நடுவில் உள்ள பிஷ்னோய் சமூகத்தின் குரு ஜம்பேஷ்வர் கோயிலில் விட்டுவிடப்படுகின்றன.

வீட்டு விலங்குகளைப் போல் சிங்காரா மான்களும் பிஷ்னோய் இன மக்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் குணம் கொண்டவை. இந்த மான்களின் மேய்ச்சலுக்காக வயலின் ஒரு பகுதியை அறுவடை செய்யாமல் பிஷ்னோய்கள் விட்டுவைப்பதும் உண்டு. இங்கு விலங்குகளை வேட்டையாட வருபவர்கள் யாராக இருந்தாலும், பிஷ்னோய்களின் கண்களில் இருந்து தப்புவது கடினம். கடந்த அக்டோபர் 1998-ல் கங்காணி காடுகளில் இந்தி படப்பிடிப்பு நடைபெற்றபோது சல்மான் கான் மற்றும் நடிகர்கள் மான் வேட்டை காரணமாகச் சிக்கினர். இதுபோல், மான்வேட்டையைத் தடுக்கப் போய், இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட பிஷ்னோய் மக்கள் தங்கள் உயிரையே இழந்துள்ளனர்.

தியாக வரலாறு

உயிரினங்கள், மரங்களைப் பாதுகாக்கத் தம் உயிரையும் இழப்பது பிஷ்னோய்களுக்குப் புதிதல்ல. இப்படி அவர்கள் செய்த தியாகம் வரலாற்றில் முக்கிய அங்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1731-ல் மார்வாரின் மன்னராக இருந்த அபய் சிங், ஜோத்பூர் கோட்டையைக் கட்டுவதற்காக அருகில் உள்ள கேச்சாட்லி கிராமத்தில் இருந்த வன்னி மரங்களை வெட்டி வரும்படி கிரிதாரி தாஸ் ஹக்கீம் எனும் தளபதிக்கு உத்தரவிட்டார். இதற்காக அங்கே சென்ற தளபதிக்கு, அங்கிருந்த அம்ருதாதேவி பிஷ்னோய் என்ற பெண்ணின் தலைமையில் அக்கம், பக்கம் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பிஷ்னோய் பெண்கள், குழந்தைகள் கூடிக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மரங்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டு வெட்ட விடவில்லை. ஆனால், வன்னி மரங்களைக் கட்டி அணைத்தபடி நின்றிருந்த 363 பேரையும் வெட்டிவிட்டு, மரங்களை அறுத்துச் சென்று விட்டார் அந்தத் தளபதி. அதன் பிறகு தன் தவற்றை உணர்ந்த மன்னர் அபய் சிங், அதற்காகப் பிஷ்னோய் சமூகத்தினரிடம் மன்னிப்பு கேட்டதுடன், அப்பகுதியில் உள்ள காடு, உயிரினங்களைப் பாதுகாப்பதற்கும் உத்தரவிட்டார். இப்படி மரங்களைப் பாதுகாக்கப் பிஷ்னோய் சமூகத்தினர் உயிரையும் கொடுத்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் நினைவாக ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான பெண்கள் ஜோத்பூரின் அருகில் உள்ள கேச்சாட்லி எனும் கிராமத்தில் கூடுகின்றனர். இந்த விழாவில் பலியானவர்களின் பெயர்கள் நினைவுகூரப்படுகின்றன. இது ராஜஸ்தான் மட்டுமில்லாமல் வட இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் வாழும் பிஷ்னோய் சமூகத்தினருக்கான முக்கியமான விழாவாக இருக்கிறது. இந்தச் சமூகத்தினர் மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ஒடிசா, கர்நாடகத்திலும் உள்ளனர்.

மரங்களைக் காக்க உயிர் துறந்த அம்ருதாதேவியின் பெயரில் மத்திய வனத்துறை அமைச்சகம் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் சார்பில் சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர்களைப் பாதுகாப்பவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுவதை இங்கே கட்டாயம் நினைவுகூர வேண்டும்.

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “சுற்று சூழலை வணங்கும் பிஷ்னோய்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *