செடி முருங்கை பயிர் இடுவது எப்படி?

இரகங்கள் : பிகேஎம் 1. கேஎம் 1, பிகேஎம் 2

மண் மற்றும் தட்பவெப்பநிலை :

  • செடி முருங்கை எல்லா வகை மண்ணிலும் வளரும்.
  • இருப்பினும் மணல் கலந்த செம்மண் பூமி அல்லது கரிசல் பூமி மிகவும் ஏற்றது, மண்ணின் கார அமிலத்தன்மை 6.0 முதல் 7.5 வரை இருக்கவேண்டும்.

பருவம் : ஜீன் – ஜீலை, நவம்பர் – டிசம்பர்

விதையளவு : எக்டருக்கு 500 கிராம் விதைகள்

நிலம் தயாரித்தல்

  • நிலத்தை நன்கு உழுது சமன் செய்த பின்பு 2.5 மீ  x 2.5 மீ இடைவெளியில் 45  x 45 x 45 செ.மீ நீளம். அகலம், ஆழம் உள்ள குழிகள் எடுக்கவேண்டும்.
  • தோண்டிய குழிகளை ஒரு வாரம் ஆறப்போட்டு விட்டு, பிறகு குழி ஒன்றிற்கு நன்கு மக்கிய தொழு உரம் 15 கிலோ வாரம் ஆறப்போட்டு விட்டு, பிறகு குழி ஒன்றிற்கு நன்கு மக்கிய தொழு உரம் 15 கிலோ மற்றும் மேல் மண் ஆகியவற்றை சம அளவில் கலந்து குழிகளை நிரப்பவேண்டும்.
  • குழிகளைச் சுற்றி சுமார் 60 செ.மீ அகலத்திற்கு நீர் பாய்ச்சுவதற்கேற்ற வாய்க்கால்கள் அமைக்கவேண்டும்.

விதையும் விதைப்பும்

  • மூடப்பட்ட குழிகளின் மத்தியில் சுமார் 3 செ.மீ ஆழத்தில் விதைகளை விதைக்கவேண்டும்.
  • ஒரு குழியில் ஒன்று அல்லது இரண்டு விதைகளை விதைக்கவேண்டும்.
  • விதைத்த ஏழு முதல் பத்து நாட்களுக்குள் விதைகள் முளைக்கும்.
  • விதைகளை பாலித்தீன் பைகளில் விதைத்து 30 நாட்கள் வயதுடைய செடிகளை நடுவதற்கு பயன்படுத்தலாம்.
  • விதைகள் முளைக்காத குழிகளில் பாலித்தீன் பைகளில் வளர்ந்த செடிகளை நட்டு செடி எண்ணிக்கையைப் பராமரிக்கலாம்.

நீர் நிர்வாகம்

விதைப்பதற்கு முன் மூடிய குழிகளில் நீர் ஊற்றவேண்டும். விதைத்த மூன்றாம் நாள் மீண்டும் நீர்ப் பாய்ச்சவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

  • முருங்கையில் நல்ல விளைச்சல் பெற செடி ஒன்றுக்கு 45 கிராம் தழைச்சத்து 16 கிராம் மணிச்சத்து, 30 கிராம் சாம்பல் சத்து ஆகியவற்றை விதைத்த மூன்றாவது மாதத்தில் இட்டு நீர் பாய்ச்சவேண்டும்.
  • மேலும் ஆறாவது மாதத்தில் தழைச்சத்து மட்டும் ஒரு செடிக்கு 45 கிராம் என்ற அளவில் இடவேண்டும்.

களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

களையெடுத்தல் :

  • விதைத்து இரண்டு மாதங்கள் வரை நிலத்தை களையின்றி பராமரிக்கவேண்டும்.
  • செடிகள் மூன்றடி உயரம் வளர்ந்த பிறகு மாதம் ஒரு முறை அல்லது தேவைப்படும் போது களையெடுக்கவேண்டும்.

நுனிகிள்ளுதல் :

  • செடிகள் சுமார் 1 மீட்டர் உயரம் வளர்ந்தவுடன் நுனியைக் கிள்ளிவடவேண்டும்.
  • இவ்வாறு செய்வதனால் பக்கக் கிளைகள் அதிகமாகத் தோன்றும்.

ஊடுபயிர்:

  • தனிப்பயிராக முருங்கை சாகுபடி செய்யும் பொழுது ஊடுபயிராக தக்காளி, வெண்டை, தட்டைப்பயிறு போன்ற குறுகிய காலப் பயிர்களைப் பயிர் செய்யலாம்.
  • பழத்தோட்டம் மற்றும் தென்னந்தோப்புகளில் முருங்கையை ஊடுபயிராகப் பயிரிடும் பொழுது மரங்களின் இடைவெளியை அனுசரித்து குழிகள் எடுத்து வைக்கவேண்டும்.

மறுதாம்புப் பயிர் :

  • ஒரு வருடம் கழித்து காய்ப்பு முடிந்த பிறகு செடிகளை தரைமட்டத்திலிருந்து சுமார் ஒரு மீட்டர் உயரத்தில் வெட்டிவிடவேண்டும்.
  • இதனால் புதிய குருத்துக்கள் வளர்ந்து மீண்டும் 4 முதல் 5 மாதங்களில் காய்க்கத் தொடங்கும்.
  • இதுபோல ஒவ்வொரு காய்ப்புக்குப் பிறகும் செடியை வெட்டிவிட்டு மூன்று ஆண்டுகள் வரை மறுதாம்புப் பயிராக பராமரிக்கலாம்.
  • ஒவ்வொரு முறை கவாத்து செய்த பிறகு பரிந்துரை செய்யப்பட்டுள்ள தழை, மணி, சாம்பல் சத்து உரங்களோடு மக்கிய தொழு உரம் இட்டு நீர் பாய்ச்சவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

பழஈக்கள் :

  • பழு ஈக்களின் குஞ்சுகள் காயைத் தின்று சேதப்படுத்துதல், இதனைக் கட்டுப்படுத்த பாதிக்கப்ட்ட காய்களை சேகரித்து அழித்துவிடவேண்டும்.
  • பென்தியான்ஈ டைக்குளோர்வாஸ், மானோகுரோட்டோபாஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒரு மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு மிலி என்ற விகிதத்தல் கலந்து தெளிக்கவேண்டும்.
  • மருந்து தெளிப்பதற்கு முன் காய்களைப் பறித்துவிடவேண்டும். மருந்த தெளித்தபின் 10 நாட்களுக்கு அறுவடை செய்யக்கூடாது.

பூ மொட்டுத் துளைப்பான் :

  • பூக்கள் தோன்ற ஆரம்பித்தவுடன் டைக்குளோர்வாஸ் அல்லது எண்டோசல்பான் ஒரு மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவேண்டும்.

கம்பளிப்பூச்சிகள் :

  • இப்பூச்சிகள் இலைகளைத் தின்று சேதம் விளைவிக்கும்.
  • வளர்ச்சி பெற்ற  கம்பளிப் புழுக்களை மருந்து தெளித்து அழிப்பது மிகவும் கடினம்.
  • எனவே வளர்ந்த புழுக்களைக் கட்டுப்படுத்த நெருப்புப் பந்தங்களைக் கொண்டு புழுக்களின் மேல் தேய்க்கவெண்டும்.

நோய்கள்

தூர் அழுகல் நோய் :

  • இது பிஞ்சுக் காய்களின் தோல் பகுதியில் உண்டாகும் காயங்கள் மூலம் பூசணம் நுழைந்து அழுகலை உண்டாக்குகிறது.
  • காய்களின் வெளிப்பரப்பில்  பழுப்புநிறப் புள்ளிகள் முதலில் தோன்றும். பின்பு அதிக அளவில் கறுப்புப் புள்ளிகளாக மாறிவிடும்.
  • நோய் முற்றிய றிலையில் பிசின் போன்ற திரவம் வடியும்.
  • இந்நோய் பழ ஈயின் பாதிப்புடன் சேர்ந்து காணப்பட்டால் பெருஞ்சேதம் உண்டாக்கும்.
  • இதனைக் கட்டுப்படுத்த பிஞ்சுப் பருவத்தில் கார்பன்டாசிம் ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் அல்லது மேன்கோசெப் ஒரு லிட்டர் நீருக்கு இரண்டு கிராம் என்ற அளவில் தெளிக்கவேண்டும்.
  • காய்கள் வளர்ச்சியடையும் போது மறுபடியும் ஒரு முறை தெளிக்கவேண்டும்.

அறுவடை

விதைத்த ஆறு மாதங்களில் காய்கள் அறுவடைக்கு வரும்.

மகசூல் : ஓர் ஆண்டில் ஒரு மரத்திலிருந்து சுமார் 220 காய்கள் வரை அறுவடை செய்யலாம். ஆண்டொன்றிக்கு ஒரு எக்டருக்கு 50-55 டன் வரை காய்கள் கிடைக்கும்.

நன்றி: தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *