வாழையைத் தாக்கும் கூன் வண்டை கட்டுப்படுத்தும் வழிகள்

வாழையை கோடை காலங்களில் கூன் வண்டு எனப்படும் பூச்சி வகைகள் அதிகம் தாக்குகின்றன.

இந்த வண்டுகளை இனக்கவர்ச்சி பொறி மூலம் அழிக்கலாம்.

இதன் தாக்குதல் பற்றியும், இதை கட்டுப்படுத்தும் வழிகள் பற்றியும் பெருந்தலைவர் காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பூச்சியியல் துறை வல்லுநர் விஜயகுமார் கூறியது:

  • தற்போது நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக வாழையில் கூண் வண்டு தாக்குதலை ஏற்படுத்தி வாழையின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்.இதனால் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பும் ஏற்படும்.
  • இந்த கூண் வண்டு கிழக்குக் கூண் வண்டு என்றும் அழைக்கப்படுகிறது.    இந்த கூன் வண்டு கருமை நிறத்தில், நீளமான மூக்கைக் கொண்டிருக்கும்.
  • பகல் நேரங்களில் இலையுறை இடுக்குகளிலும், தண்டின் அடிப்பகுதியைச் சுற்றிலும் மறைந்துக் கொண்டிருக்கும்.
  • இரவு நேரங்களில் பெண் கூண் வண்டுகள் தமது மூக்கு போன்ற பகுதியால் துளையிட்டு கிழங்கை சேதப்படுத்தும்.
  • சில நேரங்களில் தண்டையும் துளைத்து உள்ளே செல்லும்.
  •  இந்த கூன் வண்டால் தாக்கப்பட்ட கிழங்கின் நாலாப்பக்கங்களிலும் ஓட்டைகள் அல்லது குழிகள் ஏற்படும்.
  • அதிகம் தாக்கப்பட்ட கிழங்குகள், அழுகி விடுகின்றன.
  • கிழங்கில் ஏற்பட்ட பாதிப்பினால் மரங்களுக்கு சத்து செல்வது தடைப்பட்டு, இலைகள் பழுத்து, உதிர ஆரம்பிக்கும்.    குருத்து இலையும் வாடிவிடும்.பக்கக் கன்றுகள் காய்ந்து விடும்.
  • அதிகம் பாதிக்கப்பட்ட தோப்புக்களில், சீப்புகளின் எண்ணிக்கை குறைந்து, பழங்கள் சிறுத்து காணப்படும்.
  • இக் கூன் வண்டின் தாக்குதலைத் தொடர்ந்து பாக்டீரியாவின் தாக்குதலால் கிழங்கு அழுகிவிடுகிறது.
  • மேலும் சற்றே காற்றடிக்கும் போது, மரம் அடியோடு சாய்ந்து விடுகிறது.
  •  இக் கூண் வண்டின் முட்டைப் பருவம் – 5-8 நாள்கள். புழுப்பருவம் – 25 நாள்கள், கூட்டுப்புழு பருவம் – 5-6 நாள்கள், வளர்ந்த வண்டுகள் – 12 முதல் 21 மாதங்கள் வரை உயிர் வாழக் கூடியது.
  • கிழங்கு கூண் வண்டு, கிழங்குகளின் மூலம் பரவுவதால் நடுவதற்கு பயன்படுத்தப்படும் கிழங்குகளும், கன்றுகளும் தரமானதாகவும், பூச்சித் தாக்காத தாய்க் கன்றுகளிலிருந்து கன்று தேர்வு செய்ய வேண்டும்.
  •  விதைக்கன்றுகளின் வேரை நீக்கி, மேற்புரம் சீவிவிட்டு பின்பு நட வேண்டும்.
  • வண்டுகள் அடுத்தடுத்து மரங்களுக்குப் பரவுவதைத் தடுக்க வெட்டப்படாமல் உள்ள பழைய வாழை மரங்கள், கழிவுகள், களைகள் மற்றும் காய்ந்த சருகுகளை அப்புறப்படுத்தி தோட்டத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
  • தரைமட்டத்தில் வெட்டப்பட்ட பழைய மரங்களின் வெட்டப்பட்ட பகுதியைக் களிமண் கொண்டு பூசிவிடுதல் மிகவும் நல்லது.
  • இதனால் பெண் வண்டுகள் முட்டையிடுவதைத் தடுக்கலாம்.
  •  அறுவடை முடிந்தவுடன் தரைமட்டம் வரை தண்டை நீக்கி சுத்தம் செய்து மேற்பரப்பில், 2 கிராம் கார்பரில் மருந்து கரைசலை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து இடுவதன் மூலம் வண்டுகள் தண்டிலும், கிழங்கிலும் முட்டையிடுவதைத் தவிர்க்கலாம்.
  • நடவுக்கு முன்னால் கன்றுகளை ஒரு லிட்டர் தண்ணீரில் 14 மி.லி. மோனோகுரோட்டோபாஸ் கலந்த கரைசலில் நனைத்து நடவுக்குப் பயன்படுத்த வேண்டும்.
  • நடுவதற்கு முன் குழிக்கு கார்போபியூரான் 3 சதவீதம் உள்ள குருணை மருந்து 25 கிராம் மற்றும் 3, 5, 7-ம் மாதங்களில் 100 கிராம் வேப்பம் புண்ணாக்கு இட்டும் தாக்குதலை குறைக்கலாம்.
  • ஒரு அடி நீளமுள்ள வாழை மரத்தின் துண்டுகளை நீளவாக்கில் இரண்டாகப் பிளந்து, பிளவுபட்ட பகுதியின் தரையை நோக்கி இருக்குமாறு வாழை மரங்களுக்கு அருகே ஒரு ஏக்கருக்கு 40 வாழை மரப் பொறிகள் என்ற அளவில் வைத்து வண்டுகளின் நடமாட்டத்தை கண்டறியலாம்.
  •  வண்டுகள் இருப்பின் தொடர்ச்சியாக வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழித்து விடலாம். அல்லது மரப்பொறிகளின் மேல் நன்மைப் பூஞ்சாணமான பெவேரியா பேஸியானாவை தடவி வைக்க வேண்டும்.
  • கவரப்பட்ட வண்டுகள் இப் பூஞ்சாணத்தால் தாக்கப்பட்டு, நோய் வாய்ப்பட்டு நாளடைவில் இறந்து விடும்.
  •  கிழங்கு கூன் வண்டுகளை கண்காணித்து கட்டுப்படுத்த காஸ்மோலியூர் என்ற கிழங்கு கூண் வண்டு இனக்கவர்ச்சிக் பொறிகளை ஒரு ஏக்கருக்கு 2 என்ற அளவில் பயன்படுத்தி வண்டுகளைக் கவர்ந்து கட்டுப்படுத்தலாம் என்றார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *