தோட்டங்களை அமைத்து தரும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்!

கரூரைச் சேர்ந்தவர் ஹரிஹரசுதன். சென்னையில் கம்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்தவர். அங்கேயே வேலை தேடிக் கொண்டவர்.

ஒரு விபத்து காரணமாக சொந்த ஊருக்கு திரும்பியவர் திரும்ப அமெரிக்கா செல்லவில்லை. ஊர்மணம் செல்லவிடவில்லை.

இப்போது வீட்டுத் தோட்டம் உருவாக்கித் தரும் பெரிகாளி என்கிற நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். கூடவே கைவல்யம் என்கிற நர்சரி பண்ணையும் சென்னை அண்ணா நகரில் வைத்துள்ளார். இவரது அனுபவம் இந்த வாரம் இடம் பெறுகிறது.

கலிபோர்னியாவில் கம்ப்யூட்டர் சயின்சில் எம் எஸ் படித்தேன். மீண்டும் அமெரிக்கா செல்ல பல வாய்ப்புகள் அமைந்தும் போக மனம் வரவில்லை. விருப்பமாகவும் இல்லை.

இங்கேயே ஒரு தொழில் தொடங்கிக் கொண்டு செட்டிலாகலாம் என யோசித்தேன். அதன் பிறகு நானும் எனது நண்பரும் சேர்ந்து கமாடிட்டி டிரேடிங் தொழில் மேற்கொண்டோம். இதற்கிடையே எனது உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, ஓய்வெடுத்த காலத்தில் இயற்கை தோட்டங்கள் கொடுத்த அமைதி என்னை இழுத்துக் கொண்டே இருந்தது. அதனால் நர்சரி தொழில் தொடங்கினால் வருமானமும் கிடைக்கும், மன அமைதியும் கிடைக்கும் என்பதால் கமாடிட்டி தொழிலில் எனது பங்கை நண்பரிடம் விற்றுவிட்டு இந்த தொழிலை தொடங்கினேன்.

Courtesy: Hindu
Courtesy: Hindu

ஆனால் இந்த தொழில் வெளியிலிருந்து பார்ப்பதுபோல சாதாரணமானது அல்ல என்பதை தொழிலில் இறங்கியதும் தெரிந்து கொண்டேன். இந்த உலகம் ஒரு தனி உலகம். ஒவ்வொன்றுக்கும் தனித் தனி நுணுக்கங்கள் வேண்டும். சாதாரணமாக ஒரு செடி என்று பொதுவாக சொல்லிவிடலாம். ஆனால் அதற்கு பின்னே அழகுக்காக, வாஸ்து, காய்கறி, ஆர்கிட் என பல வகைகள் உள்ளன. வீட்டுக்கு உள்ளே, வீட்டுக்கு வெளியே, வெயில் தாங்கும், நிழலில் வைப்பது, பாரமரிப்பு சார்ந்து ஒவ்வொன்றும் ஒரு விதமானது. இதற்காக நான் முழுமையாக தயாராக வேண்டும் எனத் திட்டமிட்டேன்.

நர்சரி தொடங்கி நடத்திக் கொண்டிருக் கும்போதே இது தொடர்பாக பல பயிற்சி களுக்கும் செல்லத்தொடங்கினேன். தோட்டக்கலைத்துறை மற்றும் பிற தனியார் அமைப்புகளின் பயிற்சிகளுக்குச் சென்றேன். இதற்காக பெங்களூரு, சிங்கப்பூர் என துறை சார்ந்து பயிற்சி பட்டங்கள் பெற்றேன். நர்சரி தொடங்கி சுமார் 4 ஆண்டுகள் அனுபவம் மற்றும் பயிற்சிக்கு பிறகு தொழில்முறையாக தோட்டம் அமைத்து கொடுக்கும் பெரிகாளி நிறுவனத்தை தொடங்கினேன். வீடுகளில் மாடித்தோட்டம், புல்வெளிகள், ஹோட்டல்கள், ஓய்வு இல்ல பூங்கா அமைப்பது என தொழில் வாய்ப்புகள் கிடைத்தன. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்பவும், இடத்துக்கேற்பவும் இப்போது தோட்டங்களை அமைத்துக் கொடுத்து வருகிறேன்.

வாடிக்கையாளர்களின் இடத்துக்குச் சென்று இடத்தை பார்வையிட்டு தோட்டத்தை எப்படி அமைக்கலாம் என்கிற வடிவமைப்பை அவருக்குக் காட்டுவோம். அவர்களின் தேவை வேறொன்றாக இருந் தாலும், இடத்துக்கு பொருத்தமானதை எடுத்துச் சொல்லுவதுதான் இந்த தொழிலில் முக்கியமானது. ஏனென்றால் அவர்கள் ஒன்று கேட்கிறார்கள் என்று அமைத்துக் கொடுத்துவிட முடியாது. அதிலிருந்து கிடைக்கும் பலன் சார்ந்த விஷயங்கள்தான் அவர்கள் கொடுக்கும் பணத்துக்கான மதிப்பு என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

இப்போது பழ மரங்கள், காய்கறி செடிகள், கொடி வகைகள், அழகு செடிகள் தவிர போன்சாய், ஆர்கிட் என பல வகைகளிலும் தயார் செய்கிறோம். ஆனால் மரம், செடி,கொடிகள் என எல்லா வகைகளையும் நாங்களே உற்பத்தி செய்வதில்லை. செடி, கொடி வகைகளை தேவைக்கேற்ப வெளியிலிருந்தும் வாங்கிக் கொள்கிறோம். மர வகைகளை உருவாக்க ஆழியாறு பக்கத்தில் ஒரு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்துள்ளோம். அங்கிருந்து அவ்வப்போது தேவைக்கு ஏற்ப கொண்டு வருகிறோம். தற்போது 12 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை இதன் மூலம் உருவாக்கியுள்ளேன். ஆர்டர்களுக்கு ஏற்ப அவ்வப்போது வேலை ஆட்களை கூடுதலாக அழைத்துக் கொள்வது உண்டு.

இந்த தொழிலை மேற்கொள்வதற்கு அடிப்படை விஷயம் இதை தொழிலாக மட்டும் பார்க்கக்கூடாது. இது நாம் ஒவ்வொருவரும் இயற்கைக்கு செலுத்த வேண்டிய கடமை. ஆனால் இதை எல்லோரும் செய்வதில்லை என்பதால்தான் லாபம்தரும் தொழிலாக மாறியுள்ளது. ஒவ்வொரு தோட்டம் அமைத்த பிறகும், பராமரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு சொல்லிக் கொடுத்தாலும் குறிப்பிட்ட காலத்துக்கு பராமரிப்பு வேலைகளையும் நாங்களே மேற்கொள்கிறோம். ஏனென்றால் செடிகள் செழிப்பாக வளர்வது வாங்கியவருக்கு மட்டுமல்ல, எனக்கும் சந்தோஷம் தருகிறது.

நன்றி: ஹிந்து 

மேலும் விவரங்களுக்கு:

இணைய தளம் : http://www.perikali.com/

J- 862, new# J- 85,
13th Main Road,
Anna Nagar
Chennai, TN 600 040

தொலைபேசி எண் : 04465516416      emailperikali_trading@yahoo.co.in

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “தோட்டங்களை அமைத்து தரும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்!

  1. ஞானம்கார்த்திகேயன் says:

    மி கவும் நல்லது செடிகளை பார்க்கும் சந்தோஷம் தனிதான் வாழ்த்துக்கள் என்னிடம் அதிகம் அடினீயம்செடிகள் ஜாதிமுல்லை செம்பருத்தி இன்னும் பல செடிகள்
    விற்பனைக்குஇருக்கிறது. தேவைப்பட்டால் அனுகவும்

Leave a Reply to ஞானம்கார்த்திகேயன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *