மாடித்தோட்ட ‘கிட்’!

மாடித்தோட்டத்தில் பயிரிடும் முறை நகரங்களில் பெரும்பாலாகப் பரவி விட்டன. வீட்டில் உள்ள காலி இடங்களில் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளையும், பழ வகைகளையும் வளர்ப்பதற்குப் பெயர்தான் மாடித்தோட்டம் என்கிறோம். கிராமங்களில் நிச்சயம் வீட்டுக்குப் பலன் தரக்கூடிய செடி ஒன்றாவது இருக்கும். அதேபோல நகரங்களில் செய்ய முடியாமல் தவித்துக்கொண்டிருந்தவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்தான் ‘மாடித்தோட்டம்’. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மாடித்தோட்டம் அமைப்பதற்கென்றே தனித்திட்டம் கொண்டுவந்தார். அந்தத் திட்டம் ஆரம்பத்தில் அனைவராலும் வரவேற்கப்பட்டு இடையில் காணாமல் போனது. மாடித்தோட்ட திட்டம் நடைமுறையில் இருக்கிறதா, மாடித்தோட்டத்தில் தவிர்க்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மாடித்தோட்ட ஆர்வலர்களிடம் பேசினோம்.

மாடித்தோட்டம் அமைத்தல்

மாடித் தோட்டம் டிப்ஸ் ஆல்பம்

எக்ஸ்னோரா அமைப்பைச் சேர்ந்த ‘பம்மல்’ இந்திரகுமார் பேசும்போது, “தமிழ்நாட்டில் பொதுவாக ஏப்ரல், மே மாதங்களைத் தவிர அனைத்து மாதங்களிலும் விதைக்கலாம். பாலிதீன் விரிப்பின் மேல் தொட்டிகளை வைத்தால், ஈரக்கசிவைத் தடுக்கலாம். நடவு செய்யும்போது மண்ணுடன் மாட்டுச் சாணத்தை கலந்து விதைக்க வேண்டும். மாடித்தோட்டத்தில் முக்கியமானது, விதைகள் பராமரிப்புதான். நாம் விதைக்கும் விதைகள் கடைகளில் வாங்குவதைத் தவிர்த்து, விவசாயிகளிடமோ அல்லது மாடித்தோட்டம் அமைக்கும் ஒருவரிடமோ வாங்கலாம். விதைகளை நடும்போது வேப்ப இலைக் கரைசலில் நனைத்து தொட்டிகளில் நடலாம்.

முடிந்தவரை நாட்டு விதைகளைப் பயன்படுத்துவது நல்லது. காலையிலும் மாலையிலும் சரிவர கவனித்து வந்தால் மாடித்தோட்டம் தயாராகிவிடும். மேலும், குழாய் மூலம் தண்ணீர் விடுவதைத் தவிர்த்து, பூவாளியில் ஊற்றலாம். இதனால் தண்ணீர் செலவும், உரச்சத்துகள் வெளியேறுவதும் குறையும். தேவைப்பட்டால் செடிகளுக்கு பஞ்சகவ்யா கொடுக்கலாம். அறுவடை முடிந்த பிறகு ஒரு வாரம் தொட்டியைக் காய விட்டு மீண்டும் நடவு செய்ய வேண்டும். ரசாயன உரங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அறுவடை செய்த காய்கறி விதைகளைப் பாதுகாப்பது மிக அவசியம். விதைகளை மாட்டுச் சிறுநீரில் ஊறவைத்து கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைக்கலாம். சுரைக்குடுக்கையிலும் விதைகளைப் போட்டு வைக்கலாம். பிளாஸ்டிக் பாட்டிலில் எக்காரணம் கொண்டும் விதைகளைச் சேமித்து வைக்கக் கூடாது. இயற்கை பூச்சி விரட்டித் தயாரித்து அதில் விதைகளை நனைத்து, காயவைத்துச் சேமிக்கலாம்.

வீட்டுத்தோட்டம் அமைப்பது என்பது, ஒவ்வொருவரின் அனுபவம், ஆர்வத்துக்குத் தக்கப்படி மாறுபடும். விதைகளை மண்ணில் விதைத்த நாள் முதல் இயற்கையை உன்னிப்பாகக் கவனித்து வந்தால், நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். இப்படிக் கற்றுக்கொள்வதன் மூலம், மாடித்தோட்ட விவசாயத்தில் நீங்களே நிபுணராகி விடுவீர்கள். முயற்சியும், அதைச் சார்ந்த கற்றுக்கொள்ளும் பயிற்சியுமே நம்முடைய தேவை. இதற்காக மாடித்தோட்ட பொருள்கள் தோட்டக்கலைத் துறையில் மலிவு விலையில் கிடைக்கிறது” என்றார்.

மாடித்தோட்ட ஆர்வலரான கனகராஜ் பேசும்போது, “மாடித்தோட்டத்தில் இரண்டு முக்கிய விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலில் வெயில் படுமாறு மாடிப்பகுதி இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். வெயில்படும் இடங்களில்தான் செடிகள் வளரும். இரண்டாவது, மாடியில் தண்ணீர் வீட்டுக்குள் புகாதவாறு மாடித்தோட்டம் அமைக்க வேண்டும். மாடித்தோட்டம் அமைத்த பிறகு அதிக கனகராஜ்

வெயிலால் செடிகள் வாடாமல் வளர பசுமைக்குடில் அமைக்கலாம். மாடியில் அமைக்கும் தோட்டத்தில் பைகள், வாளிகள் என எல்லாவற்றிலும் வளர்க்கலாம். ஆனால், அதற்கென உருவாக்கப்பட்ட பைகளில் வளர்ப்பது நன்மை தரும். பைகள் ஒரே வடிவத்தில் இருப்பதால் அதிக அளவு வேர்பிடிக்கும். தொட்டியை வைக்கும்போது முக்கால் அடிக்கு முக்கால் அடி இடைவெளி விட்டு வைக்கலாம். கேரளா, இஸ்ரேல்-களில் எல்லாம் பசுமைக்குடில் தொழில்நுட்பம் வழக்கத்தில் உள்ளது.

விதைகள் தேர்வு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். முடிந்தவரை நாட்டு ரகங்கள், வீரிய ரகங்கள் என இரண்டையும் பயிரிடலாம். மண்வகைகளில் செம்மண்ணில் அதிகப் பயிர்கள் வளரும் என்பதால் மாடித்தோட்டத்துக்கு ஏற்றது. அதிகமான காய்கறிப் பயிர்களைப் பயிரிடலாம். தக்காளி, மிளகாய், வெங்காயம், முட்டைக்கோஸ், காளிபிளவர் ஆகிய பயிர்களை நாற்று விட்டு நட வேண்டும். மண்ணுடன் மண்புழு உரம், தொழு உரமிட்டு விதைகளை நடவேண்டும்.

தண்ணீர் ஊற்றும்போதுதான் அதிகப்பேர் தவறு செய்துவிடுகின்றனர். அதிகத் தண்ணீர் ஊற்றினால் அதிகமாகச் செடிகள் வளரும் என்ற தவறான நோக்கில் தண்ணீரை அதிகமாக ஊற்றுகிறார்கள். உரங்களைப் பொறுத்தவரையில் மண்புழு உரம், அமிர்த கரைசல் அளவாக இடலாம். மேலும், நோய்த் தாக்குதலுக்கு பஞ்சகவ்யா, பூச்சி விரட்டிப் போன்றவற்றை பயன்படுத்தலாம். புடலை, பாகற்காய் விதைகளைச் சாணியில் புதைத்து வறட்டிபோல செய்து விதைகளைச் சேமித்துக்கொள்ளலாம். கத்தரி, தக்காளி, வெள்ளரி விதைகளைத் தவிடு அல்லது சாம்பலில் தண்ணீரை ஊற்றிப் பிசைந்து வைத்துக்கொள்ளலாம். சுரைக்காய், பூசணிக்காய் ஆகியவை குடுக்கைகளாக மாறித் தானாகவே விதைகள் உருவாகிக் கொள்ளும்” என்றார்.

மாடித்தோட்டம்

மாடித் தோட்டம் டிப்ஸ் ஆல்பம்

அரசின் மாடித்தோட்ட திட்டத்தை பற்றிப் பேசிய நாமக்கல் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் புவனேஷ்வரி, “குறைந்த அளவு இடம் கூட இல்லாதவர்கள், வீட்டின் முன்பக்கம், ஜன்னல்கள், தொங்குதோட்டம் எனப் பல வழிகளில் மாடித்தோட்டம் அமைக்கலாம். தமிழக அரசு மாடித்தோட்டத்தை ஊக்குவிப்பதற்காக 40 சதவிகிதம் மானியத்துடன் மாடித்தோட்ட பொருள்களை வழங்குகிறது. இவை தமிழ்நாடு முழுவதும் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.

இதில் 10 வகையான விதைகள், மாடித்தோட்ட பைகள், தேங்காய் நார் கட்டிகள் உள்ளிட்டவை வழங்கப்படும். வீட்டுத் தோட்டத்தில் மிளகாய், கீரை, கொத்தமல்லி, புதினா போன்ற பயிர் வகைகள் வேகமாக வளரும். மாடித்தோட்டத்தில் தண்ணீர் செலவு குறையும். நாற்றுவிட்டு வளர்க்கக் கூடிய செடிகளை நாற்றுவிட்டு வளர்க்க வேண்டும். அதற்குக் கடைகளில் கிடைக்கும் குழித்தட்டுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நாட்டு விதையை அதிகம் பயன்படுத்தலாம். மாடித்தோட்ட செடிகளுக்கு செயற்கை உரங்களுக்குப் பதிலாக வெங்காயத்தோல், காய்கறி கழிவுகள் ஆகியவற்றை உரமாகக் கொடுக்கலாம். மேலும், பூச்சிகளின் தாக்கம் இருந்தால், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை 50 கிராம் என்ற விகிதத்தில் கலந்து பூச்சி தாக்கிய செடிகளுக்குத் தெளிக்கலாம். இதுதவிர, வேப்பஎண்ணெயும் ஸ்பிரே செய்யலாம். விதைகள் நடவு செய்யும்போது, அடி மண்ணில் வேப்பம் புண்ணாக்கு கலந்திருந்தால் நோய்த்தாக்கும் வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கும். இந்தச் சூழல் மாடித்தோட்டத்துக்கு மிகவும் ஏற்றது” என்றார்.

இத்திட்டம் பற்றி, தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை அதிகாரியிடம் விசாரித்தோம். “மாடித்தோட்ட திட்டத்தின் மூலமாக மாடித்தோட்ட பொருள்கள் அடங்கிய ‘கிட்’ வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தோட்டக்கலை துறை அலுவலகங்களிலும், மாடித்தோட்ட பொருள்கள் கிடைக்கும். தமிழகத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவகத்தில் கிடைக்கவில்லை எனில் 04428524643 என்ற தோட்டக்கலைத்துறை தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.

மாடித்தோட்டம் அமைக்க ஏதுவான காலமும் இதுதான். மாடித்தோட்ட பொருள்களும் தோட்டக்கலைத்துறை அலுவலகங்களில் குறைந்த விலையில் கிடைக்கிறது. மாடித்தோட்டத்தில் ஆர்வமுள்ளவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளும் சரியான தருணம் இது.

நன்றி: பசுமை விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “மாடித்தோட்ட ‘கிட்’!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *