மொட்டை மாடியில் பச்சை காய்கறித் தோட்டம்

“என்னடா ஆச்சு…? ஏன் இப்படி வாடிப் போயிருக்கே…? தாகமா இருக்கா?…பூச்சி ஏதாவது கடிச்சிருச்சா…? இதோ இப்ப தண்ணி ஊத்துறேன்…’ பீளமேட்டை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் பாலகிருஷ்ணன் இப்படி பேசுவது, குழந்தைகளுடன் அல்ல… காய்கறி செடிகளுடன்.

விளை நிலங்கள் அத்தனையும் “கான்கிரீட் காடுகள்’ ஆக மாறி விட, காய்கறி, பழங்களை விளைவிக்க மண்ணில் இடமில்லை. இதனால் ஆசை ஆசையாக காய்கறி சமைத்து சாப்பிட முடியாத நிலை. ஆனால், பேராசிரியர் பாலகிருஷ்ணனுக்கு இது குறித்தெல்லாம் கவலை இல்லை. தனது வீட்டின் மொட்டை மாடியையே அழகான விளைநிலம் ஆக மாற்றி, தினமும் “ப்ரெஷ்’ ஆன பச்சைக் காய்கறிகள், கீரைகளை ஆசை தீர சமைத்து சாப்பிட்டு வருகிறார்
கத்தரிக்காய், கீரை, தக்காளி, பச்சை மிளகாய், பீட்ரூட், காரட், தட்டைப் பயறு…இப்படி நீள்கிறது இவரது மாடி வீட்டுத் தோட்டத்தின் பச்சைக் காய்கறி பட்டியல். பீளமேடு சர்வஜனா பள்ளியின் தலைமை ஆசிரியராக ஓய்வு பெற்ற பின், இப்போது கணியூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஆங்கில பேராசிரியர் ஆக பணிபுரிகிறார் பாலகிருஷ்ணன். இவரது மனைவியும், ஒரு கல்லூரியில் பேராசிரியை ஆக பணிபுரிகிறார்.

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

 

 

 

 

 

 

 

 

காய்கறித் தோட்டத்துக்கு மண்ணுக்கு பதிலாக தேங்காய் நார் கழிவைதான் பயன்படுத்துகின்றனர். மண்ணில் வளர்வதை விட அதிக செழிப்பாக காட்சியளிக்கின்றன, காய்கறிகள். அவரைக்காய், பாகற்காய் போன்ற சிலவகை காய்கறிகளுக்கு தேவையான பந்தலும் மொட்டை மாடியிலேயே ரெடி. பந்தலில் படர்ந்து ஆரோக்கியமாக சிரிக்கின்றன பச்சைக் காய்கறிகள்.

பேராசிரியர் பாலகிருஷ்ணன் கூறுகையில் – 

“”இன்று காய்கறிகளை ப்ரெஷ் ஆக வாங்க முடிவதில்லை. பல்வேறு உரங்களும் பயன்படுத்தப்படுவதால் உடல் நலன்தான் கெடுகிறது. விலையும் அதிகமாக உள்ளது. மொட்டை மாடியில் சிறிது இட வசதியுள்ள எவரும் இது போல் காய்கறித் தோட்டம் அமைக்கலாம். மொட்டை மாடியில் மண்ணை கொட்டினால், கட்டுமானம் பாதிக்கப்படும். அதற்கு பதிலாக பச்சை நிற தார்பாலின் பைகளை பயன்படுத்துகிறேன். சிறிதும் பெரிதுமாக நியாயமான விலையில் கிடைக்கிறது. இதில் மண்ணுக்கு பதிலாக தென்னை நார் கழிவுகளை கொட்டி காய்கறி நாற்று நடலாம். தென்னை நார் கழிவுகளுக்கு மண்ணைப் போல் எடையில்லை. அங்குமிங்கும் எளிதாக தூக்கிச் செல்லலாம். நார்க் கழிவில் உள்ள நார்கள் காய்கறி செடியின் வேர்களை இறுக்கிப் பிடித்துக் கொள்வதால், மண்ணில் வளர்வதைப் போல் செடிகள் “ஸ்ட்ராங்’ ஆக வளர்கின்றன.

“”இதன் அடிப்பகுதி ஓரங்களில் துளை உள்ளதால், ஊற்றும் தண்ணீரால் வேர்கள் அழுகுவதில்லை. காய்ந்த மாட்டுச் சாணம் மற்றும் வீட்டு சமையலறையில் மீதமாகும் காய்கறிக் கழிவுகள்தான் உரம். இதனால் ஒரு செடியில் 15 கத்தரிக்காய் வரை கிடைக்கிறது. இயற்கையான முறையில் விளைவிப்பதால் சுவைக்கும் குறைவில்லை. நமக்குத் தேவையான காய்கறிகளை நாமே விளைவித்து சாப்பிடுவதில் கிடைக்கும் திருப்தியும், சந்தோஷமும் தனிதான்,” என சிரிக்கிறார்

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *