வீட்டிலேயே மூலிகை தோட்டம்!

இன்றைய நவீன யுகத்தில், விரவியிருக்கும் அசுரத்தனமான நோய்களிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளவேண்டியது அவசியம். செயற்கை வாழ்வியல் முறையில் பயணித்துக்கொண்டிருக்கும் நாம், மீண்டும் இயற்கையை நோக்கி திசை திரும்ப வேண்டும் என்பது மனித உடலின் அன்பான உத்தரவு. உத்தரவுக்கு மதிப்புக் கொடுக்கும்விதமாக உடனடியாக இயற்கையின் படைப்புகளான மூலிகைத் தாவரங்களை, நம் உணவு மற்றும் வாழ்வியல் முறைக்குள் விருந்தோம்பும் பண்புடன் வரவேற்பதே தெளிவு.

மூலிகைத் தோட்டம்

`உணவே மருந்து’, என்ற கோட்பாடுடைய பாரம்பர்ய சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் பல வகையான நோய்களைப் போக்கும் மூலிகைகளின் குறிப்புகள் பொதிந்துள்ளன. மேலும், மூலிகைகளைக் குறித்து மிகுந்த அறிவுகொண்ட பல்வேறு மக்கள் நம்மைச் சுற்றியே வாழ்ந்துகொண்டிருக்கிறர்கள். மருத்துவ குணமுள்ள மூலிகைகளின் பயன்களை வெளிக்கொணரும்விதமாக, மூலிகைத் தாவரங்களை வீடுதோறும் வளர்க்க ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். மூலிகைத் தோட்டத்தில் இடம்பெறவேண்டிய தாவரங்களும் அவற்றின் பயன்களும் என்னென்ன? தெரிந்துக்கொள்வோம்!

மூலிகைத் தோட்டம்

மாத்திரைகள் வேண்டாம்… தாவரங்களை நாடுவோம்!

எந்த ஒரு நோயாகட்டும், அதை விரட்டுவதற்கு எடுத்த எடுப்பில் மூலிகைகளை நாடிய மரபு நம்முடையது. ஆனால், மரபு சிதைந்து மூலிகைகளின் இடத்தை மாத்திரைகள் பிடித்துவிட்டன. மாத்திரைப் பித்தர்களின் கூட்டமாக மாறிவிட்டது இன்றையச் சமுதாயம். நமக்கு உண்டாகும் நோய்களுக்கு, மாத்திரைகளை சார்ந்திருப்பதற்கு பதிலாக, மூலிகைகளை சார்ந்திருக்கத் தொடங்கினால், இயற்கை முறையில் நோய்களை வெல்லலாம்.

இட வசதியைப் பொறுத்து மூலிகைகளின் எண்ணிக்கைகளை அமைத்துக்கொள்ளலாம். வாய்ப்பிருந்தால் நேரடியாக நிலத்தில் தாவரங்களைவைத்துப் பராமரிப்பது சிறந்தது. இல்லையேல், தொட்டிகளிலாவது மூலிகைகளுக்கு அடைக்கலம் கொடுத்து வளர்க்கலாம். அதையும் தாண்டி மாடித் தோட்டம்வைத்தும் தேவையான பயன்களைப் பெறலாம்.

மூலிகைத் தோட்டம்

கப நோய்களை விரட்டும் மூலிகைகள்!

ஒவ்வொரு நோய்க்கும் பல்வேறு வகையான மூலிகைகள் நம்மிடையே இருக்கின்றன. அவ்வப்போது ஏற்படும் சளி, இருமல் போன்ற கப நோய்களை எதிர்த்துப் போரிட கற்பூரவள்ளி, தூதுவளை, நொச்சி, திருநீற்றுப்பச்சிலை, கண்டங்கத்திரி, தும்பை, துளசி வகைகளை வளர்க்கலாம். தினமும் குடிக்கும் நீரில் துளசி இலைகளைப் போட்டுக் கொதிக்கவைத்து குடித்துவரலாம். குளிர்காலங்களிலும் மழைக்காலங்களிலும் தூதுவளையைத் துவையலாகவும் குடிநீராகவும் தேவைக்கேற்பப் பயன்படுத்தலாம்.  கண்டங்கத்திரி, கற்பூரவள்ளி போன்றவை கப நோய்களுக்கு எதிராகச் செயல்படும் அற்புத மூலிகைகள். குறிப்பாக, குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமலை குணமாக்க, கற்பூரவள்ளி இலையை இடித்துச் சாறெடுத்து, சிறு தீயில் சுண்டவைத்து சுரசமாக அரை டீஸ்பூன் அளவுக்குக் கொடுக்கலாம். திருநீற்றுப்பச்சிலை, நொச்சி இலைகளைக்கொண்டு வேது பிடிப்பது (ஆவிப் பிடித்தல்) நோய்களைப் போக்க உதவும். தலைபாரத்துக்கு உடனடியாக பலன் தரக்கூடியது ஆவிப்பிடித்தல் முறை.

தோல் நோய்கள் மற்றும் செரிமானத் தொந்தரவுகளுக்கு…

தோல் நோய்களைக் கட்டுப்படுத்த குப்பைமேனியும் கஸ்தூரி மஞ்சளும் சிறந்த மூலிகைகள். உடலில் அரிப்பு ஏற்படும்போது, குப்பைமேனியுடன் சிறிது மஞ்சள்/கஸ்தூரி மஞ்சள் சேர்த்தரைத்துப் பூசலாம். குப்பைமேனி அனைத்து இடங்களிலும் சாதாரணமாக வளரக்கூடியது. வயிற்றுப் புழுக்களை வெளியேற்ற, மூன்று முதல் ஐந்து குப்பைமேனி இலைகளை அரைத்து, சிறிது விளக்கெண்ணெய் சேர்த்துக் கொடுப்பது பாரம்பர்ய வழக்கம். வயிற்று நோய்களை சாந்தப்படுத்தும் மூலிகைகளாக பிரண்டை, மணத்தக்காளியின் ஆதரவு தேடலாம். `சாப்பிட மாட்டேன்’ என அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு பிரண்டைத் துவையல்/நல்லெண்ணெய் காம்போ சிறந்த பலனளிக்கும். பிரண்டை, எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும். கொடியாக மேலேறும் பிரண்டையின் வளர்ச்சியை ரசித்து மகிழ்வது அலாதியான அனுபவம். மணத்தக்காளிக்கீரையை பருப்புச் சேர்த்து, கடைந்து சாப்பிட்டால், வயிற்றுப் புண்கள் ஆறும்.

முடக்கத்தான்

வாத நோய்களுக்கு…

வாத நோய்களுடன் போராட நொச்சி, முடக்கறுத்தான், மூக்கிரட்டை போன்ற மூலிகைகள் உதவும். குறிப்பாக, வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டுவலிக்கு, முடக்கறுத்தான் கீரையை அடையாகச் செய்து சாப்பிடலாம். முடக்கறுத்தான் கீரையை முட்டை வெண்கருவுடன் சேர்த்தரைத்து, மூட்டுகளில் பற்றுப் போடலாம். ஒற்றடமிடப் பயன்படும் மூலிகைகளில் நொச்சியும், முடக்கறுத்தானும் முக்கியமானவை. மூக்கிரட்டையை உணவுகளில் சேர்த்து வந்தால் வாத நோய்கள் குணமாகும்.

ரத்த அணுக்களை அதிகரிக்க உதவும் கறிவேப்பிலை, கரிசாலை, மாதுளை மற்றும் கீரை வகைகளை வளர்க்கலாம். இரும்புச்சத்து டானிக் மற்றும் மாத்திரைகளின் வியாபாரத்தை ஒழிக்க இவை போதும். மனதை அமைதிப்படுத்தவும், முடிவளர்ச்சிக்காகவும் செம்பருத்தி, மருதாணிச் செடிகளுக்கு உயிர் கொடுக்கலாம். உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள செம்பருத்தியும் மருதாணியும் அவசியம். கூந்தலுக்குச் சாயமாக மட்டுமல்ல, வேனிற் காலங்களில் மருதாணி, செம்பருத்தி கலந்த பேஸ்ட்டைத் தலைக்கு தடவி, வெந்நீரில் குளித்துவந்தால், பல கோடைகால நோய்களைத் தவிர்க்க முடியும்.

டெங்கு போன்ற ஜுர நோய்களைப் போக்கும் நிலவேம்பு, மாதவிடாய்க் கோளாறுகளைப் போக்கும் கற்றாழை, சிறுநீரக நோய்களைத் தடுக்கும் சிறுபீளை, நெருஞ்சில் போன்ற மூலிகைகளையும் தோட்டத்தில் உறுப்பினராக்கலாம். வீடுகளின் அழகை மெருகேற்றுவதற்காகப் பயன்படும் குரோட்டன் வகைகள், மருத்துவ குணமற்ற கொடியினங்களுக்கு மாற்றாக பசலைக் கொடிகளைப் பயன்படுத்தலாம். சிவந்த நிறத்தில் கொடியாக மேலேறி, அழகான தோற்றத்தைத் தருவது மட்டுமன்றி, மலமிளக்கியாகவும், பித்த நோய்களை அழிக்கும் மருந்தாகவும் பசலைக் கொடிகள் செயல்படுகின்றன. மூலிகைச் செடிகளன்றி, சில வகை மரங்களையும் வளர்க்க முன்வரலாம்!

கரிசலாங்கண்ணி

மனதை உற்சாகமாக்கும் தோட்டம்!

நாம் விரும்பி, உயிர் கொடுத்த மூலிகைத் தோட்டம், மருந்தாகப் பயன்படுவது மட்டுமல்லாமல், நச்சுத்தன்மையுடைய காற்றைப் புனிதமாக்கி, வாழும் வீட்டைச் சுற்றி இயற்கையான மூலிகை வாசனையைப் பரப்பி, நம் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். வெளியேறும் தாவர சுவாசத்துடன், நம் சுவாசமும் தங்கு தடையின்றி உறவாடுவதன் காரணமாக, உடலிலும் மனதிலும் உள்ள பல நோய்கள் ஆகாயத்தோடு சலனமின்றிக் கலந்துவிடும்! தினமும் சிறிது நேரம் தாவரங்களுடன் செலவிடுவதன் மூலம், சோர்வடைந்த மனமும் உடலும் புத்துணர்ச்சி அடைவது உறுதி.

`தாவரங்களின் வளர்ச்சி, மனதின் ரணங்களை மெளனமாக்கும்’ என்பது உண்மை! ’தோட்டப் பராமரிப்பு என்பது மனஅழுத்தத்தைக் குறைக்கும்’ என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவித்த வண்ணம் இருக்கின்றன. அதற்காகத் தோட்டம் என்றால், நகரின் ஒதுக்குப்புறத்தில், சொகுசான பண்ணை வீட்டில் இருக்கும் தோட்டம் என்பதல்ல. நம்மைச் சுற்றி சிறியதாக ஒரு தாவரச்சூழலை அமைத்து, பராமரித்தால் போதும். மனம் சார்ந்த நோய்கள் உருவாக வாய்ப்பில்லை. நாமே மூலிகைகளையும், தேவைப்படும் காய்களையும் வளர்த்து பராமரிப்பதன் மூலம், பூச்சிக்கொல்லி மருந்துகளோ, ரசாயன உரங்களோ பயன்படுத்தாமல் அவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் தவிர்த்து ஆரோக்கியமாக வாழலாம்.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள மூலிகைகளைத் தவிர இன்னும் பல நோய்ப் போக்கும் மூலிகைகள் இருக்கின்றன. மூலிகைத் தோட்டம் அமைப்பதற்கும், மூலிகைகள் பற்றிய பல தகவல்களைத் தெரிந்துகொள்ளவும் பதிவுபெற்ற சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள், அறம் சார்ந்த பாரம்பர்ய மருத்துவர்கள், அருகிலுள்ள அரசு மருத்துவமனை மற்றும் அரசு சுகாதர நிலையங்களில் செயல்படும் சித்த மருத்துவப் பிரிவுகளில் பணிபுரியும் சித்த மருத்துவர்களை அணுகலாம்.

நன்றி: பசுமை விகடன் 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “வீட்டிலேயே மூலிகை தோட்டம்!

  1. Annu Agrawal says:

    Can I please get the above translation in English. I really want to know what is 3rd picture plant from above as I have it and I don’t onow the use

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *