வெங்காய சாகுபடியில் விளைச்சலை அதிகரிக்க..

வெங்காயம் சாகுபடியில் விளைச்சல் பெருகுவதற்கான ஆலோசனைகளை சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

Courtesy: Dinamani
Courtesy: Dinamani

சின்ன வெங்காயம்:

  • இதை ஏப்ரல், மே மாதங்களில் பயிரிடலாம்.
  • நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் மிகவும் ஏற்றது. வெப்பமான பருவநிலை, போதுமான மண் ஈரப்பதத்தில் இப்பயிர் நன்கு வளரும்.
  • சின்ன வெங்காயத்தில் கோ 1 முதல் 5 வரை உள்ள ரகங்கள் மற்றும் மதுரை 1, பஞ்சமுகி ஆகிய ரகங்கள் உள்ளன.
  • ஏக்கருக்கு 400 கிலோ விதை வெங்காயம் தேவை.
  • அடியுரமாக கடைசி உழவில் ஏக்கருக்கு 10 டன் தொழு உரம், 12 கிலோ தழைச்சத்து தரவல்ல 27 கிலோ யூரியா, 24 கிலோ மணிச்சத்து தரவல்ல 150 கிலோ சூப்பர் பாஸ்பேட், 12 கிலோ சாம்பல் சத்து தரவல்ல 20 கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை இட வேண்டும்.
  • நன்கு உழுத நிலத்தில் 45 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைத்து, பாரின் இருபுறமும் 10 செ.மீ. இடைவெளியில் வெங்காயத்தை ஊன்ற வேண்டும்.
  • முளை விட்டபின் வாரந்தோறும் நீர் பாய்ச்ச வேண்டும்.
  • அறுவடைக்கு 10 நாள்களுக்கு முன்பு நீர் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும்.
  • விதைத்த 30-ஆம் நாள் ஏக்கருக்கு 12 கிலோ தழைச்சத்து தரவல்ல 27 கிலோ யூரியாவை மேலுரமாக இட வேண்டும்.

பெல்லாரி வெங்காயம்:

  • பெல்லாரி வெங்காயம் என்ற பெரிய வெங்காயம் பயிரிட மே, ஜூன் மாதங்கள் உகந்தது.
  • வடிகால் வசதியுள்ள மணற்சாரி வண்டல் மண் மற்றும் மிதமான தட்பவெட்பநிலை மிகவும் ஏற்றது.
  • பெல்லாரி வெங்காயத்தில் பெல்லாரி சிகப்பு,பூசாசிகப்பு, என்பி53, அர்காநிகேதன், அர்கா கல்யாண், அர்கா பிரகதி, அக்ரிபவுண்ட் வெளிர் சிகப்பு, அக்ரிபவுண்ட் அடர் சிகப்பு, அர்காபந்து ஆகிய ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை. ஏக்கருக்கு 4 கிலோ விதைகள் தேவை.
  • விதைகளை ஒரு கிலோ விதைக்கு 400 கிராம் அசோஸ் பைரில்லம் உயிர் உரத்தை ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து 30 நிமிஷம் நிழலில் உலர்த்தி, தொழு உரம் இட்டுத் தயாரிக்கப்பட்ட மேட்டுப்பாத்தி நாற்றங்காலில் விதைக்க வேண்டும்.
  • அடியுரமாக கடைசி உழவில் ஏக்கருக்கு 10 டன் தொழு உரம், 20 கிலோ தழைச்சத்து தரவல்ல 45 கிலோ யூரியா, 60 கிலோ மணிச்சத்து தரவல்ல 375 கிலோ சூப்பர் பாஸ்பேட், 30 கிலோ சாம்பல் சத்து தரவல்ல 50 கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை அடியுரமாக இட வேண்டும்.
  • மேலும் ஏக்கருக்கு 20 கிலோ துத்தநாக சல்பேட்டை இட வேண்டும்.
  • நன்கு உழுத நிலத்தில் 45 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைத்து 45 நாள் வயதுடைய நாற்றுக்களை பாரின் இருபுறமும் 10 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும். வாரம் தோறும் நீர் பாய்ச்ச வேண்டும்.
  • நாற்று நட்ட 30-ஆம் நாள் ஏக்கருக்கு 24 கிலோ தழைச்சத்து தரவல்ல 52 கிலோ யூரியாவை மேலுரமாக இடவேண்டும்.

நோய்கள்:

  • இலைப் புள்ளி நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு மாங்கோசெப் இரண்டு கிராம் அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு இரண்டரை கிராம் இவற்றில் ஒன்றை ஒட்டும் திரவமான டீப்பால் ஒரு லிட்டர் நீருக்கு அரை மி.லி. என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

மகசூல்:

  • சின்ன வெங்காயம் நடவு செய்த 70 முதல் 90 நாள்களில் 6 முதல் 7 டன் மகசூல் கிடைக்கும்.
  • பெல்லாரி வெங்காயம் நடவு செய்த 140 முதல் 150 நாள்களில் ஏக்கருக்கு 6 முதல் 7 டன் மகசூல் கிடைக்கும்.

எனவே, விவசாயிகள் இந்த தொழில்நுட்பங்களைக் கடைபிடித்து, மருத்துவப்பயன் கொண்ட வெங்காய சாகுபடியை மேற்கொண்டு,  உயர் மகசூலும், அதிக லாபமும் பெறலாம் என்றார் அவர்.

 

நன்றி:தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *