பசுமை குடிலில் வெள்ளரி பயிரிட்டு சாதிக்கும் விவசாயிகள்!

‘வேறு எந்தத் தொழிலிலுமே கிடைக்காத மனஅமைதி, விவசாயத்தில் கிடைக்கிறது’ என்பதை உணர்ந்திருப்பதால், வயற்காட்டுப் பக்கம் கால் வைத்திராத பலரும், இன்று விவசாயத்தை நோக்கி ஓடிக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக, தொழிலதிபர்கள் பலரும் வழக்கமான தொழிலோடு விவசாயத்தையும் இணைத்து வெற்றிநடை போட்டு வருகிறார்கள். இந்த வரிசையில் இடம்பிடிக்கும் திருப்பூர், சேகாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன், பழனிச்சாமி சகோதரர்கள், உள்ளாடைகள் உற்பத்தித் தொழிற்கூடத்தோடு… பசுமைக்குடில் விவசாயத்திலும் பட்டையைக் கிளப்பி வருகிறார்கள்!

கிராமத்தின் தோட்டத்தில் இந்தச் சகோதரர்களைச் சந்தித்தோம். பரந்து விரிந்து கிடக்கும் பசுமைக்குடிலின் உள்ளே, மீன்வலை நெடும் பந்தல்களில்… பச்சைநிற மணிகளைப் போல சரஞ்சரமாகத் தொங்கிக் கொண்டிருந்தன, வெள்ளரிப் பிஞ்சுகள். பந்தலின் வேர்ப்பகுதியில் அங்கும் இங்குமாய் சிரித்துக் கொண்டிருந்தன செண்டுமல்லிப் பூக்கள்.

”இது, எங்க சொந்த ஊர். கிணத்துப் பாசனத்துல ஏழு ஏக்கர் தோட்டமிருக்கு. தென்னை, வெங்காயம், புகையிலை, மக்காச்சோளம்னு கிடைக்கிற தண்ணியை வெச்சு வெள்ளாமை செஞ்சுட்டு வர்றோம். எங்க பகுதியில உள்ள விவசாயிங்கள்ல நிறையபேரு, விவசாயத்தோட சேர்த்து விசைத்தறித் தொழிலையும் செஞ்சுட்டு வர்றாங்க. நாங்களும் எங்க தோட்டத்தில நாப்பது தறிகளைப் போட்டு ‘பவர்லூம் ஃபேக்டரி’ நடத்திட்டிருக்கோம். அருள்புரத்துல சொந்தமா பனியன் ஏற்றுமதி நிறுவனமும் இருக்கு. ரெண்டு பிசினஸ்லயும் நல்ல வருமானம் கிடைச்சாலும்… ‘குடும்பத்தொழிலான விவசாயத்தை விட்டுடக்கூடாது’ங்கிறது எங்க எண்ணம். அதே சமயத்துல, ‘வழக்கமான விவசாயமா இல்லாம புதுமையா செய்யலாம்’னுதான், பசுமைக்குடில் அமைச்சோம்” என்று சொன்ன சாமிநாதன், தொடர்ந்தார்.

25% மானியம்!

”எங்களுக்கு இப்படியரு யோசனை வந்ததுக்குக் காரணமே… ‘பசுமை விகடன்’தான். முதல் இதழ்ல இருந்து ஒரு இதழ் விடாம படிச்சுட்டுருக்கோம். 2010-ம் வருஷத்துல, கோயம்புத்தூர், கொடீசியாவுல விவசாயக் கண்காட்சி நடக்கறது பத்தி பசுமை விகடன் மூலமா தெரிஞ்சுகிட்டு, அங்க போனோம். அப்பதான் பசுமைக்குடில் பத்தித் தெரிஞ்சுக்கிட்டோம். உடனடியா, ‘நிலத்துல போர்வெல் போட்டு, பசுமைக்குடில் அமைக்கலாம்’னு முடிவு பண்ணிட்டோம். தேசிய தோட்டக்கலை வாரிய அலுவலர்கிட்ட பேசி, எனக்கு 4 ஆயிரம் சதுர மீட்டர்ல (கிட்டத்தட்ட ஒரு ஏக்கர்) ஒரு பசுமைக்குடிலும், சகோதரர் பழனிச்சாமிக்கு அதே அளவு ஒரு பசுமைக்குடிலும் அமைச்சோம். இது ரெண்டுக்கும் சேர்த்து வங்கிக் கடன் வாங்கினோம். ஒரு பசுமைக்குடிலுக்கு 35 லட்ச ரூபாய் செலவு செய்தோம். அதுல 25% தொகை மானியம் கிடைச்சுது. பசுமைக்குடில் அமைச்சு, வெள்ளரி விவசாயம்தான் செஞ்சுட்டுருக்கோம். 120 நாள்ல வருமானம் கொடுக்குற பயிர்ங்குறதாலதான் இதைத் தேர்ந்தெடுத்தோம். இதுவரைக்கும் மூணு போகம் மகசூல் எடுத்துட்டோம்” என்று சாமிநாதன் நிறுத்த, வெள்ளரி சாகுபடி செய்யும் நுட்பங்களைப் பற்றி பேச ஆரம்பித்தார், பழனிச்சாமி. அது அப்படியே பாடமாக இங்கே…

ஏக்கருக்கு 7 ஆயிரம் விதைகள்!

‘பசுமைக்குடில் அமைக்கத் தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில், 25 டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி, நன்றாக உழுது, நிலத்தைச் சமப்படுத்த வேண்டும். பிறகு, 184 அடி நீளம், ஒரு அடி உயரம், 3 அடி அகலத்தில் மேட்டுப்பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திக்கும் அடுத்த பாத்திக்கும் இடையில் மூன்றடி இடைவெளிவிட வேண்டும். ஒரு ஏக்கர் பசுமைக்குடிலில் 80 பாத்திகள் அமைக்கலாம். ஒரு ஏக்கருக்கு

7 ஆயிரம் விதைகள் தேவைப்படும். பாத்திகள் மீது 2 அடிக்கு ஒரு விதை என்ற கணக்கில் ‘ஜிக் ஜாக்’ முறையில் நடவு செய்ய வேண்டும் (பசுமைக்குடில் அமைத்துக் கொடுக்கும் நிறுவனத்தினரே, குடில், சொட்டு நீர், நுண் நீர்ப் பாசனக் குழாய் எல்லாம் பொருத்திக் கொடுத்து விடுவார்கள்).

35-ம் நாள் அறுவடை!

பிறகு, ஒரு டன் வண்டல் மண்ணைப் பொடியாக்கி, அதனுடன் 500 கிலோ தொழுவுரம், 5 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் 3 கிலோ சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து, பாத்திகளின் மீது தூவ வேண்டும். இப்படிச் செய்வதால், விதைகள் ஊக்கமுடனும், முளைப்புத்திறன் குறையாமலும் ஒரே சீராகவும் வளரும். பிறகு, மீன் வலை அல்லது நைலான் கயிறுகளால் பின்னப்பட்ட வலையை ஏழரை அடி உயரம், எண்பது அடி நீளத்துக்கு பாத்திகளில் நெடும்பந்தல் போல அமைத்துக் கொள்ள வேண்டும். பத்து நாட்களுக்கு ஒரு முறை கொடியின் வேர்ப்பகுதியில் செழிம்பாக ஜீவாமிர்தக் கரைசலை ஊற்றி வர வேண்டும்.

நடவு செய்த 15-ம் நாளுக்குமேல் முளைத்து மேல் நோக்கி வரும் கொடிகளை, நெடும்பந்தலில் படர விட வேண்டும். 20-ம் நாள் கொடிகளில் பக்கக்கிளைகளை ஒடித்து கவாத்து செய்ய வேண்டும். 25-ம் நாளில் கொடிகளில் இளம் பிஞ்சுகளின் முனையில் பட்டுக்குஞ்சம் வைத்தது போல பொன்னிறப் பூக்கள் பளபளக்கும். இந்தச் சமயத்தில், தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கொண்ட பயோ உரக்கலவைகள், நுண்ணூட்டச் சத்து உரங்கள் ஆகியவற்றை பரிந்துரைக் கும் அளவுக்குக் கொடுக்க வேண்டும். இதனால், கொடிகளில் பூக்கள் உதிராமல் அனைத்திலுமே பிஞ்சுகள் பிடிக்கும். தொடர்ந்து, பயோ பாஸ்பரஸ், மற்றும் பொட்டாஷ் திரவ உரங்களையும் பரிந்துரைக்கும் அளவுக்குக் கொடுக்க வேண்டும்.

பசுமைக்குடிலை எப்போதும் மூடிய நிலையில் கவனமாகப் பராமரித்தால் பூச்சிகள் தாக்காது. ஆனால், செடிகளின் வேர்பகுதியில் நூற்புழுக்கள் தாக்க வாய்ப்புள்ளது. பாத்திகளில் பரவலாக செண்டுமல்லிச் செடிகளை நடுவதன் மூலம் இவற்றைத் தடுக்கலாம். வேறு பூச்சிகள் தாக்கினால், தேவையான அளவில் மூலிகைப் பூச்சிவிரட்டியைப் பயன்படுத்தலாம். 35-ம் நாளில் பிஞ்சுகள் முற்றி, அறுவடைக்குத் தயாராகி விடும். பசுமைக்குடிலில் வெள்ளரியின் மொத்த சாகுபடிக் காலம் 120 நாட்கள். விதைத்த 35-ம் நாளில் இருந்து தொடர்ந்து 85 நாட்கள் மகசூல் எடுக்கலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்து 50 டன் வரை மகசூல் எடுக்கலாம்.’

ஒரு போகத்துக்கு 35 டன்!

பழனிச்சாமி சாகுபடிப் பாடம் சொல்லி முடிக்க… வருமானம் பற்றிச் சொன்னார், சாமிநாதன்.

”ஒரு போகத்துல 35 டன்னுக்குக் குறையாம மகசூல் கிடைக்கும். அதிகபட்சமா 50 டன் கிடைக்கும். ஒரு கிலோ வெள்ளரிப்பிஞ்சு

20 ரூபாய்னு விலை போகுது. நாங்க, வெள்ளரிப்பிஞ்சுகளை அட்டைப்பெட்டிகள்ல அடைச்சு, கேரளாவுக்கு அனுப்பிட்டு இருக்கோம். அங்க இருந்து அரபு நாடுகளுக்குப் போகுது. ஏக்கருக்கு ஒரு போகத்துல 35 டன் மகசூல்னே வெச்சுக்கிட்டாலும்… ஏக்கருக்கு 7 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். செலவு போக கிட்டத்தட்ட நாலு லட்ச ரூபாய்க்கு குறையாம லாபம் கிடைக்கும்” என்றார்.

நிறைவாகப் பேசிய அந்த விவசாய சகோதர்கள், ‘விவசாயக் குடும்பத்தில பிறந்தாலும், வேற தொழிலுக்கு மாறிட்டோம். ஆனா, எங்களைத் திரும்பவும் விவசாயத்துக்கு இழுத்துட்டு வந்தது ‘பசுமை விகடன்’தான். அதுக்கு எங்களோட நன்றிகள்” என்றனர், ஒரேகுரலில்!

தொடர்புக்கு,
கே. சாமிநாதன், செல்போன்: 09842257548 .
கே. பழனிச்சாமி, செல்போன்: 09344986813 .

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “பசுமை குடிலில் வெள்ளரி பயிரிட்டு சாதிக்கும் விவசாயிகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *