ஆகாய தாமரை அரக்கனை அழிக்கும் புதிய வழி

pond

 

ஆகாய தாமரை பார்த்தேனியம் போன்று ஒரு  அரக்கன். நீர்நிலைகளை அழிக்கும் இந்த தாவரத்தை பற்றி பல தகவல்களை ஏற்கனவே படித்து  உள்ளோம். கற்பூர வள்ளி இலை மூலம் கட்டுப்படுத்தலாம் என்று ஆய்வு மூலம் தெரிகிறது. இப்போது இதை கட்டுப்படுத்த இன்னொரு வழி –  அதை பற்றிய -தகவல் தினமணியில் இருந்து …

ஆகாய தாமரை அரக்கனை அழிக்கும் புதிய வழி

ஆகாயத் தாமரையை அழிக்கக் கூடிய இயற்கை முறை கரைசலைப் பயன்படுத்தி பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட அதிகாரிகள் முதல்முறையாக சோதனை செய்துவருகின்றனர்.
குளம், ஏரி, ஆறு, நீர்த்தேக்கங்கள் என அனைத்து இடங்களிலும் ஆகாயத் தாமரை பரவியுள்ளது. தென் அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டது ஆகாயத் தாமரை.
பிற நாடுகளில் அழகுக்காக வளர்க்கப்பட்ட ஆகாயத் தாமரையின் அதிவேக வளர்ச்சியால் உலகத்தில் உள்ள நீர்நிலைகள் மாசுபட்டுவருகின்றன. இதனால், தண்ணீரில் பிராணவாயுவின் அளவு குறைந்து, நீர்வாழ் உயிரினங்களான மீன் உள்ளிட்டவை உயிரிழக்கின்றன. நீர் ஓட்டத்தின் வேகத்தையும் இவை தடுப்பதுடன், துர்நாற்றத்தையும் ஏற்படுத்துகின்றன.
ஆகாயத் தாமரையைக் கட்டுப்படுத்த இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் பல முயற்சிகளை செய்துவருகின்றன. தற்போது, இதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த, ஆள்கள் மூலம் அப்புறப்படுத்துவது, படகு மூலம் அப்புறப்படுத்துவது, ரசாயனம் தெளித்து கட்டுப்படுத்துவது போன்ற முறைகள் கையாளப்படுகின்றன. ரசாயனம் தெளிப்பது என்பது மனிதர்கள், விலங்குகள் பயன்படுத்தாத நீரில் மட்டுமே செயல்படுத்தமுடியும். ரசாயனம் தெளிக்காமல் அப்புறப்படுத்தப்பட்ட இடத்தில் சில மாதங்களில் அவை மீண்டும் அடர்த்தியாக வளர்ந்துவிடுகின்றன.
ஆகாயத் தாமரையைக் கட்டுப்படுத்தும் இயற்கை முறை தெளிப்புக் கரைசலை ஹைதராபாதை சேர்ந்த ஏ.ஜி. பயோ சிஸ்டம் அமைப்பின் நிர்வாகியும், ஆராய்ச்சியாளருமான லட்சுமிநாராயணா கண்டுபிடித்துள்ளார்.

இதை தமிழகத்தில் உள்ள ஈகோ பயோசைட்ஸ் அன்டு பொட்டானிகல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தில் அறிமுகப்படுத்த உள்ளனர்.
முதல்கட்டமாக பொள்ளாச்சி பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட அதிகாரிகள் சோதனை முறையில் இதைப் பரிசோதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இயற்கை முறை கரைசல் மூலம் ஆகாயத் தாமரையைக் கட்டுபடுத்தும் முறை இதுவரை தமிழகத்தில் இல்லை.
பொள்ளாச்சி பிஏபி அலுவலகத்தில் ஆகாயத் தாமரையை பிளாஸ்டிக் பக்கெட்டில் வைத்து அதில் தண்ணீர் நிரப்பி சோதனையைத் துவக்கினர். இக்கரைசல் தெளிக்கப்பட்ட அரை மணி நேரத்திலேயே ஆகாயத் தாமரை செடிகள் கருகத் துவங்கின.
இதுகுறித்து பிஏபி கண்காணிப்புப் பொறியாளர் இளங்கோவன் கூறியதாவது:
ஆகாயத் தாமரைச் செடியைக் கட்டுப்படுத்த இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட கரைசலை சோதனை அடிப்படையில் தெளித்து, தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
கரைசல் தெளித்த அரை மணி நேரத்தில் செடிகள் கருகிவிட்டன. இந்தக் கரைசலால் மாசு ஏற்படுகிறதா அல்லது தண்ணீரில் வேறு ஏதேனும் மாற்றம் ஏற்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.
தண்ணீர் மாசுபடாமலும், நீரின் தன்மை மாறாமலும் இருந்தால், ஆகாயத் தாமரை படர்ந்துள்ள ஆழியாற்றில் ஆனைமலைப் பகுதியில் சோதனை நடத்தப்படும். சோதனை வெற்றிபெற்றால், இந்தக் கரைசல் குறித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார்.

ஏ.ஜி. பயோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் லட்சுமிநாராயணா கூறுகையில், பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, இயற்கை முறை கரைசலைக் கண்டுபிடித்து ஆகாயத் தாமரையை அழிக்கப் பயன்படுத்திவருகிறோம். இந்தக் கரைசலால் நீர் மாசுபடாது. நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படாது. செடிகள் உள்ள அடர்த்திக்குத் தகுந்தவாறு கரைசல் அளவைப் பயன்படுத்த வேண்டும். ஒரு பகுதியில் ஒரு வார இடைவெளியில் இரண்டு முறை தெளித்தால் செடிகள் முழுவதும் காய்ந்துவிடும்.
செடிகள் மீண்டும் முளைப்பதும் 80 சதவீதம் கட்டுப்படுத்தப்படும். பல்வேறு மேலை நாடுகளில் இந்தக் கரைசல் மூலம் ஆகாயத் தாமரையை அழிக்கும் பணியை செய்து வருகிறோம்.

தற்போது தமிழகத்தில் அறிமுகப்படுத்த உள்ளோம் என்றார்.

நன்றி:  தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “ஆகாய தாமரை அரக்கனை அழிக்கும் புதிய வழி

  1. Poornima says:

    இந்த செய்முறை அவசியம் தேவை… அது போல பல நீர்நிலைகள் குப்பை கூளங்களாக மாறி விட்டன… அவைகளை மீட்டெடுக்க வேண்டும்….

  2. Ptasanth says:

    இந்த முறையை கண்டறிந்தவர் M. பிரசாந்த் அவர் 2012 ஆம் ஆண்டு கடலூரில் உள்ள பெரியார் கலை கல்லூரியில் நடந்த மாநில அறிவியல் கண்காட்சியில் முதன் முறையாக இதனை கண்டுபிடித்து மக்களுக்கு விளக்கம் அளித்தார் பின்பு தாவரவியல் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றினார் அவர் பணியாற்றிய பள்ளி மாணவர்களுக்கு இதனை பற்றி கற்று கொடுத்து 2017 ஆம் ஆண்டு கரூரில் நடந்த மாநில அளவிலான கண்காட்சிக்கு சென்று தனது மாணவர்களையும் வெற்றி 🏆 பெற செய்தார் கடைசி வரை அவர் பெயரும் புகழும் மறைந்துவிட்டன அவருக்கு தான் தெரியும் என்ன அமிலம் உள்ளது என்று எப்படி அழியும் என்று கரூரில் நடந்த போட்டியில் கல்வி துறை அமைச்சர் அய்யா செங்கோட்டையன் அவர்களிடம் பாராட்டு பெற்றார் அவரை பாராட்டு வோம்

Leave a Reply to Danvanth Cancel reply

Your email address will not be published. Required fields are marked *