ஐ.டி வேலையைத் துறந்து வேளாண்மையில் இறங்கிய தம்பதி!

“நானும் என் கணவரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க. ஆனாலும், அவர் வீட்டிலும் சரி என் வீட்டிலும் சரி, நம்ம பிள்ளைங்க படிச்சு கை நிறைய வருமானம் கிடைக்கும் வேலைக்குப் போகணும்னு எதிர்பார்த்தாங்க. பார்த்தசாரதி ஹெச்.சி.எல் நிறுவனத்தில் வேலை பார்த்துட்டிருந்தார். நான் எம்.பி.ஏ முடிச்சுட்டு ஹெச்.பி நிறுவனத்தில் வேலை பார்த்துட்டிருந்தேன். இப்போ, ரெண்டுப் பேருமே ஐ.டி வேலையை விட்டுட்டு விவசாயத்தில் இறங்கியிருக்கிறோம்” என்கிறார் ரேகா. அந்தப் பயணத்தின் அனுபவத்தைப் பகிர்கிறார்…

ரேகா பார்த்தசாரதி

“நல்ல சம்பளத்தோடு வசதியான வாழ்க்கைதான். ஆனால், ரெண்டு வருஷத்திலேயே என் கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் கிட்டதட்ட கோமா மாதிரி ஆகிடுச்சு. ஆரம்பத்தில் ஸ்ட்ரோக்னு நினைச்சு பயந்தோம். ‘இது தைராய்டினால் உண்டாகும் பிரச்னை. சரி செஞ்சிடலாம்’னு டாக்டர் நம்பிக்கை கொடுத்தாங்க. அவர் ஸ்போர்ட்ஸ் பர்சன். ஆரோக்கியமான உணவு வகைகளையே சாப்பாட்டுக்கு எடுத்துப்பார். அப்படிப்பட்டவருக்கு ஏன் இப்படி ஆச்சுன்னு யோசிச்சேன். இதுக்கு நடுவில் என் பையனுக்கும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்துச்சு. நாங்க சாப்பாட்டில் அதிகமா கீரையை எடுத்துப்போம். நம்ம ஊர்களில் 20 நாள்களில் கீரைகளை விளையவைக்கிறதுக்காக ரசாயனத்தை அதிகமா யூஸ் பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டோம். பிரசவ நாள்களில் ஹெல்த்தின்னு கீரையைத்தான் அதிகமா எடுத்துக்கிட்டேன். நாம எது நல்லதுன்னு நினைச்சோமோ அதுலதான் கேடு இருந்திருக்குன்னு புரிஞ்சதும், ஆர்கானிக் கடைகளைத் தேடிப்போய் காய்கறிகள் வாங்க ஆரம்பிச்சோம்” என்கிற ரேகா, அங்கும் தனக்குக் கிடைத்த அனுபவத்தைச் சொல்கிறார்.

ஐ.டி விவசாயம்

“ஆர்கானிக் ஷாப் விஷயத்திலும் நாம விழிப்பு உணர்வோடு இருக்கணும். இது ஒரு ட்ரெண்ட் இதைச் சரியா யூஸ் பண்ணி தொழில் பாக்கலாம்னுதான் பல இடங்களில் அதிக விலைகளில் விற்கிறாங்க. அதுக்கு அப்பறம்தான் நம்ம நிலத்தில் நாமே விவசாயம் பண்ணலாம்னு முடிவு பண்ணி களத்தில் இறங்கிட்டோம். ஆல்ரெடி எங்க வீட்டு நிலத்திலும் கெமிக்கல் உரங்களைப் போட்டுத்தான் விவசாயம் பண்ணிட்டிருந்தாங்க.

முதல்ல இயற்கை விவசாயத்துக்கு மாறுவோம்னு முடிவு பண்ணி, கீரையை விதைக்க ஆரம்பிச்சோம். அது நல்ல பலன் கொடுத்துச்சு. படிப்படியா மற்ற பாரம்பர்ய உணவுப் பொருள்களைப் பயிரிட ஆரம்பிச்சோம். இதுக்கு இடையில் ரெண்டுப் பேரில் ஒருத்தர் வேலையை விட்டுட்டு ஃபுல் டைமா விவசாயத்தில் இறங்க திட்டமிட்டோம். 2011-ம் வருஷம் அவர் வேலையை ரிசைன் பண்ணிட்டார். பெண்கள் கர்ப்ப காலத்தில் சாப்பிடுவதற்கான பூங்கார் ரக சிவப்பு அரிசி போன்ற ஊட்டச்சத்துகள்கொண்ட ரகங்களைப் பயிர் பண்ண ஆரம்பிச்சோம்” என்கிற ரேகா முகம் புல்லில் பூத்த பனித்துளியாகப் பிரகாசிக்கிறது.

இயற்கை விவசாயம்

விவசாயத்தில் நன்றாகக் காலூன்றிய பிறகு ரேகாவும் வேலையை விட்டுவிட்டு கணவரோடு சேர்ந்து முழு நேரமும் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கிறார். இயற்கை விவசாயம் செய்பவர்களைக் கண்டறிந்து அவர்களிடமிருக்கும் விளைபொருள்களை வாங்கி, சரியான முறையில் வாடிக்கையாளர்களிடம் கொண்டுசென்றுள்ளார்கள்.

“தினமும் வயலில் இறங்கி வேலை பார்க்க ஆரம்பிச்சதும் எங்க வாழ்க்கையில் ஆரோக்கியம் தேடி வந்துச்சு. பெரிய கம்பெனியில் லட்சங்களில் சம்பாதிச்சு, கார், பெட்ரோல் செலவு, ஈ.எம்.ஐ, பையனைப் பார்த்துக்க கேர், டேகேர் தேவையில்லாததுக்கெல்லாம் காசு செலவழிக்கிறோம். ஆனால், இப்போ என் பையன் சித்தார்த்தை நாங்களே கவனிச்சுக்கிறோம். என் பையனின் ஸ்கூலில் நடந்த ஃபங்க்ஷனில் ஸ்டூடண்ட்ஸ் எல்லோருக்கும் பர்கர், பீட்சான்னு கொடுத்திருக்காங்க. அப்போ இவன் டீச்சர்கிட்ட இதெல்லாம் சாப்பிடக் கூடாது. உடம்புக்கு நல்லது இல்லைன்னு சொல்லியிருக்கான். எல்லோரும் ஆச்சர்யப்பட்டு பாராட்டியிருக்காங்க. இப்பவே அவன் இயற்கைப் புரட்சியை ஆரம்பிச்சுட்டான்னு நினைச்சு சந்தோஷப்படறோம்” எனப் புன்னகைக்கிறார் ரேகா.

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “ஐ.டி வேலையைத் துறந்து வேளாண்மையில் இறங்கிய தம்பதி!

  1. Ganesh says:

    6 ஏக்கர் விவசாய நிலம் சென்னைக்கு அருகில் வளமான செம்மண் பூமி உள்ளது. இயற்கை விவசாயம் செய்ய முதலீடு பங்குதாரர்கள் தேவை. Call: 9514851991

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *