குறுவை நெல் விலை வீழ்ச்சி

வேறு எந்த வியாபாரத்திலும் இல்லாத முறையாக, உற்பத்தியாளர்களுக்கு 7 ரூபாய் கொடுத்து விட்டு, நுகர்வோருக்கு 30 ரூபாய் வரை விற்று இடை தரகர்கள்  லாபம் பெரும் ஒரே தொழில் விவசாயம் தான்.

இந்த அக்கிரமம் ஒழிய ஒரே வழி, விவசாயிகள் நேரடியாக தங்கள் உற்பத்தியை நுகர்வோருக்கு விற்பது தான். இந்த முறை மேற்கத்திய நாடுகளில் Local Farmer’s market என்று கூற பட்டு புகழ் பெற ஆரம்பித்து உள்ளது. இங்கும் இந்த முறை வந்தால் நல்லது. அது வரை, இடை தரகர்களின் அக்கிரமம் ஓயாது

குறுவை நெல் விலை வீழ்ச்சி

கடலூர், செப். 26: கடலூர் மாவட்டத்தில் குறுவை நெல் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் குறுவை சாகுபடியும், ஏனைய ஆழ்குழாய்க் கிணற்றுப் பாசனப் பகுதிகளில் சொர்ணவாரி சாகுபடியும் முடிந்து, இப்போது நெல் அறுவடை நடந்து வருகிறது.  குறுவை மற்றும் சொர்ணவாரி சாகுபடி, கடலூர் மாவட்ட விவசாயிகளை காலை வாரிவிட்டது என்கிறார்கள் பெரும்பாலான விவசாயிகள்.

சொர்ணவாரி, குறுவை பயிரிடப்பட்ட பகுதிகளில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என்றும், சில விவசாயிகள் கேட்ட பகுதிகளில் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளன என்றும் வேளாண் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

கடலூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை சின்னப்பொன்னி, ஐ.ஆர்.50, ஏ.டி.டி. 43 போன்ற ரக நெல் சராசரியாக, மூட்டை (75 கிலோ) ரூ.550-க்குக் தனியார் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. அதாவது கிலோ நெல் ரூ.7.50. ஆனால் அரசு கொள்முதல் விலை சன்ன ரகம் ரூ. 11. ஏனைய ரகங்கள் கிலோ ரூ. 10.

திங்கள்கிழமை கடலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு,நெல் விற்பனை செய்ய வந்த விவசாயி பி.வடுகப்பாளையம் பன்னீர்செல்வம் கூறுகையில், ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்துக்கு வியாபாரிகளே வருவதில்லை. அவர்கள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு, ஓரிரு இடைத் தரகர்களை மட்டுமே அனுப்புகிறார்கள். விலை சரிவுக்கு இதுவும் ஒரு காரணம் என்றார்.

மாநில பா.ஜ.க. விவசாய அணித் தலைவர் காட்டுமன்னார்கோயில் கண்ணன் கூறுகையில், குறுவை சொர்ணவாரி நெல் சாகுபடியில், விவசாயிக்கு கிடைத்த விலை கிலோவுக்கு ரூ. 7 மட்டுமே. நெல் விலை இதுவென்றால், அரிசி கிலோ ரூ.15-க்குத்தான் விற்க வேண்டும். ஆனால் சந்தையில் அரிசி விலை ரூ.30 முதல் ரூ. 35 வரை விற்கப்படுகிறது. கடந்த 10 நாள்களில் மட்டும் அரிசி விலை, கிலோவுக்கு ரூ. 5 உயர்ந்து இருக்கிறது. தமிழக நெல் விவசாயத்தில் வியாபாரிகளும் இடைத் தரகர்களும்தான் லாபம் அடைகிறார்கள். விவசாயிகள் ஆண்டுதோறும் நஷ்டம் அடைகின்றனர்.

இந்த நிலையைப் போக்க, ஆந்திர மாநில விவசாயிகளைப்போல், ஓராண்டுக்கு நெல் பயிரிடுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *