கோவையில் நடைபெற்ற வேளாண் கண்காட்சி!

கோவையில் நடைபெற்ற வேளாண் கண்காட்சியை சுமார் 2 லட்சம் பேர் பார்வையிட்டனர். இதில் ரூ.60 கோடிக்கு வர்த்தக விசாரணை நடைபெற்று உள்ளது.

கோவை மாவட்ட சிறுதொழில் வளர்ச்சி கழகம், தமிழ்நாடு வேளாண் மை பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம், தூத்துக்குடி மீன்வள பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து தென்னிந்திய அளவிலான 15-வது வேளாண் கண்காட்சியை நடத்தியது. கோவை கொடிசியா வணிக வளாகத்தில் ‘அக்ரி இன்டெக்ஸ் 2015’ என்ற தலைப்பில் கடந்த 17-ந் தேதி தொடங்கிய கண்காட்சி நேற்று நிறைவு பெற்றது. கண்காட்சியில் 300-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

கண்காட்சியில் இடம் பெற்று இருந்த இஸ்ரேல் நாட்டில் வளரும் ஜெயின் திசு வாழை, விவசாயிகளை மிகவும் கவர்ந்தது. இந்த ரக வாழை தற்போது தமிழகத்தில் தேனி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. ஜீ-9 என்று அழைக்கப்படும் இந்த வாழை ஒரு ஏக்கரில் 1200 வரை சாகுபடி செய்யலாம். 12 அடி உயரம் வளரும் இந்த வாழையில் 260 காய்கள் வரை காய்க்கிறது.

அடுத்தபடியாக போயர் ரக ஆடு அனைவரின் கவனத்தை ஈர்த்தது. நீண்ட தாடியுடன் இருந்த இந்த ஆடு தென்னாப்பிரிக்காவை சேர்ந்தது. 1½ ஆண்டில் வளர்ந்து விடும் இந்த ஆடு சுமார் 100 கிலோ வரை எடை கூடும். இறைச்சிக்காக அதிகம் வாங்கப்படும், இந்த வகை ஆடுகள் பார்க்க அழகாக இருப்பதால் சிலர் வீடுகளில் ஆசையாக வளர்க்கலாம் என்றனர்.

தற்போதைய காலகட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறைக்காக சொட்டு நீர் பாசனம் விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தப்பட்டு பெரும்பாலானோர் அதை பயன்படுத்தி வருகின்றனர். இதில் தற்போது நவீனமாக்கப்பட்டு உள்ளது. அதாவது, சொட்டுநீர் பாசனத்தை செல்போன் மூலம் இயக்கும் கருவியாகும். இந்த முறையை ஏராளமான விவசாயிகள் பார்த்து, அதன் முறைகளை தெளிவாக கேட்டறிந்தனர். இந்த முறையை பயன்படுத்தும்போது நாம் எங்கு இருந்தாலும், செல்போனை இயக்கி தண்ணீர் பாய்ச்சவும், பழுது ஏற்பட்டால் நமக்கு தெரிவிக்கவும் ஏதுவாக அமைவதால் வறட்சி காலத்தில் மிகவும் பயனுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

நகர்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு தனியாக இடம் ஒதுக்கி வீட்டில் செடிகள் வளர்க்க முடியாது. அவர்களுக்கு பயன்தரும் வகையில் மாடித்தோட்டம் குறித்து கண்காட்சியில் இடம்பெற்றது. இதற்கான தொழில்நுட்பங்கள் குறித்து நகரவாசிகள் அதிகம் கேட்டறிந்தனர். வீட்டு மாடியில் சிறிய பிளாஸ்டிக் பையில் காய்கறி சாகுபடி செய்யும் முறை மற்றும் சிறிய ரக பழ மரங்களான கொய்யா, சப்போட்டா உள்ளிட்ட பழவகைகளும் சாகுபடி செய்யலாம் என்று விளக்கி கூறப்பட்டது. இதையடுத்து இந்த முறையில் சாகுபடி செய்ய அதற்கு தேவையான பொருட்களை வாங்கினர்.

இதுதவிர கரும்பு வெட்டும் கருவி, ஒற்றை நாற்று முறையில் நெல் நடவு செய்யும் எந்திரம், பாக்குமட்டை செய்யும் முறை, தென்னை வளர்ப்பு முறை, நிலத்தை உழும் கருவி, சொட்டுநீர் பாசன முறை, சூரிய மின்சக்தி மூலம் மோட்டார் இயக்குதல், பால் கறக்கும் இயந்திரம், வெண்பன்றி வளர்ப்பு என விவசாயம் மற்றும் கால்நடை தொடர்பான அனைத்துக்கும் மிகவும் பயன் உள்ளதாக இந்த கண்காட்சி அமைந்து இருந்தது.

கண்காட்சியில் இந்திய வேளாண்மையின் அடுத்த தலைமுறை 3-ம் பதிப்பு என்ற தலைப்பில் சர்வதேச வேளாண் கருத்தரங்கு, மண்சார்ந்த, விதை சார்ந்த, சொட்டுநீர்ப்பாசனம், கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கருத்தரங்குகள் நடைபெற்றன. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் குழுக்களாக வந்து கலந்து கொண்டு பார்வையிட்டு பயன் அடைந்தனர்.

இதுகுறித்து கண்காட்சி தலைவர் சசிகுமார் கூறுகையில், 4 நாட்கள் நடந்த இந்த வேளாண் கண்காட்சியில் வேளாண் உற்பத்திக்கான டிராக்டர்கள், மின்மோட்டார், நிலத்தை உழும் எந்திரங்கள் போன்றவை மூலம் ரூ.60 கோடிக்கு வர்த்தக விசாரணை நடைபெற்றது உள்ளது. தொழில் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் அதிக அளவில் கண்காட்சியை பார்வையிட்டனர். அவர்கள் தங்களின் தொழிற்சாலையிலேயே காய்கறி சாகுபடி செய்து அவற்றை பயன்படுத்துவதற்கான முறைகளை தெரிந்து கொண்டனர். இதேபோல், விவசாயிகள் தங்கள் நேரடி கொள்முதல் பொருட்களை சந்தைப்படுத்தினர். விவசாயிகள், விவசாயம் சார்ந்த தொழில்துறையினர், வேளாண் துறை மாணவர்கள், பொது மக்கள் என்று மொத்தம் 2 லட்சம் பேர் கண்காட்சியை பார்வையிட்டனர், என்றார்.

நன்றி: தினத்தந்தி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “கோவையில் நடைபெற்ற வேளாண் கண்காட்சி!

  1. robert kennedy says:

    வேளாண்மை கன்காட்சி ஒரு 20 நாட்களுக்கு முன் தெரிவித்தால் நன்றாக இருந்திருக்கும்

  2. selvamani ramasamy says:

    The stalls were arranged in a line process.it is applicable for engineering & civil,home appliances. But for a agri exhibition,there should be enough space between one stall to another.this time enormous crowd,we couldn’t collect required datas.

Leave a Reply to selvamani ramasamy Cancel reply

Your email address will not be published. Required fields are marked *