சீமைக் கருவேல மரங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

சீமைக் கருவேல மரங்களை அகற்ற ஒருங்கிணைந்த  செயல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

 தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்தக் கோரி சென்னை  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதிமுக பொதுச் செயலர் வைகோ தாக்கல் செய்த மனு விசாரணையில் இருந்து வருகிறது.

 இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வனத்துறை முதன்மைச் செயலரின் அறிக்கையை  கூடுதல் தலைமை முதன்மை வனப் பாதுகாவலர் எஸ்.எம்.அப்பாஸ் தாக்கல் செய்தார்.

 பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான 2.72 லட்சம் ஹெக்டேரில் சீமைக் கருவேல மரங்கள் இருந்தன. இதில் 26,746 ஹெக்டேரில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. எஞ்சியவற்றை அப்புறப்படுத்த ரூ.1021.29 கோடி செலவாகும், பணியை முடிக்க 2 ஆண்டுகள் ஆகும்.

 ஊரக வளர்ச்சித் துறைக்குச் சொந்தமான 1.51 லட்சம் ஹெக்டேரில், 59,610 ஹெக்டேர் அளவுக்கு சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மீதம் உள்ள பகுதியில் மரங்களை அகற்ற ரூ.368.57 கோடி செலவாகும். பணி முடிக்க 3 ஆண்டுகள் தேவைப்படும்.

 வனத்துறையின்கீழ் உள்ள நிலங்களில் 55 ஆயிரத்து 900 ஹெக்டேரில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்ற வேண்டும். இதற்கான நிதியை நாட்டு கருவேல மரங்கள் ஏலம் விடுவதன் மூலம் சரிசெய்யத் திட்டமிட்டுள்ளோம். வருவாய்த் துறைக்குச் சொந்தமான இடங்களில் 19 ஆயிரத்து 713 ஹெக்டேர் பரப்பில் இந்த மரங்கள்  உள்ளன. இவற்றை அகற்ற ரூ.85.51 கோடி செலவாகும். இவற்றை அப்புறப்படுத்த 2 ஆண்டுகள் ஆகும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மேற்கொள்ள வேண்டும் என்று மனுதாரரான வைகோ  வாதிட்டார்.

 மேற்குத் தொடர்ச்சி மலையை பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. ஆகவே, இப் பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சீமைக் கருவேல மரங்களுக்குப் பதிலாக லாபம் தரக்கூடிய மரங்களை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

 சீமைக்கருவேல மரங்களை அகற்ற அனைத்து நடவடிக்கைகளும் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் கோவிந்தன் தெரிவித்தார்.

  இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதில் ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். டெங்கு, மலேரியா ஒழிப்பில் தீவிரம் காட்டியதைப்போல, இதற்கும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். மனுதாரர் வைகோ தெரிவித்துள்ள ஆலோசனைகளையும் பரிசீலித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

 சீமைக் கருவேல மரங்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனவரி இறுதி வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *