டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்க நிறுவனம் மீண்டும் மனு

மீத்தேன் திட்டமென்ற பூதம் எப்படி தஞ்சை மாவட்டத்தை அழிக்கும் என்று முன்பே படித்தோம். இதை எதிர்த்து  தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடர பட்டுள்ள வழக்கில் இடை கால தடை கொடுக்க பட்டு  உள்ளது.இது ஒரு ஆரம்பமே. நீண்ட வழக்குக்கு நாம் தயார் செய்து கொள்ள .வேண்டும். இதை பற்றிய புதிய தகவல் இதோ —

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை மையப்படுத்தி சுமார் 766 சதுர கி.மீ. பரப்பளவுக்கு அரியவகை நிலக்கரி இருப்பதை கடந்த 20  ஆண்டுகளுக்கு முன்பு மத்திய இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய துறையினர் கண்டுபிடித்தனர்.  691 கி.மீ. சுற்றளவில் படர்ந்துள்ள மீத்தேன் வாயுவை  வணிக ரீதியாக  25 ஆண்டுகள் வரை எடுத்து விற்பனை செய்வதற்காக அரியானா மாநிலத்தை சேர்ந்த கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி என்ற தனியார்  நிறுவனத்துக்கு மத்திய அரசு 2011ம் ஆண்டு உரிமம் வழங்கியது.

பூமிக்கு அடியில் சுமார் 1500 அடியிலிருந்து 2,000 அடி வரை நிலக்கரி படிமம்  உள்ள பகுதி வரை துளையிட்டு அதன் இடுக்குகளில் உள்ள தண்ணீரை  வெளியேற்றினால்தான் நிலக்கரி படிமத்தின் மீது படர்ந்துள்ள மீத்தேன் வாயுவை வெளிக்கொண்டு வர முடியும். இதனை செயல்படுத்தினால் கடல்நீர்  புகுந்து நிலங்கள் பாதிக்கப்படும். இதனால், காவிரி டெல்டா பகுதிகளின் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலமும் அழிந்துவிடும் என்பதால் விவசாயிகள் கடும்  எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த திட்டத்துக்கு தமிழக அரசு கடந்த  2013ம் ஆண்டு இடைக்கால தடை அறிவித்தது. பின்னர் மத்திய  அரசும் ஜி.இ.இ.சி.எல்  நிறுவனத்திற்கு கொடுத்த உரிமத்தை ரத்து செய்தது. இதனால் மீத்தேன் திட்ட அச்சத்தின் பிடியிலிருந்த காவிரி படுகை மக்கள் சற்று  ஆறுதலடைந்திருந்தனர்.

இந்தநிலையில் ஜி.இ.இ.சி.எல். நிறுவனம், கடந்த மார்ச் 31ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளது. அதில்,  ‘மன்னார்குடியில் மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது. இந்த கடிதத்தை கடந்த ஜூலை 3ம் தேதி சுற்றுச்சூழல்  அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் மன்னார்குடி பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஜி.இ.இ.சி.எல் நிறுவனத்தின் மீது  ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள பிஆர்.பாண்டியன் கூறியது: முதலில் மீத்தேன்  திட்டத்தையும்,  தொடர்ச்சியாக நிலக்கரியையும் வெட்டி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அப்படி நிலக்கரி வெட்டி எடுக்கும்போது இங்கு வாழும் பல  லட்சக்கணக்கான மக்களை வெளியேற்ற வேண்டிய சூழல் உருவாகும்.  எனவே  காவிரி படுகையில் மீத்தேன் உள்பட கனிமவளங்களை வெட்டி எடுக்கும்  திட்டத்தை இனி  அனுமதிக்கமாட்டோம் என்று கொள்கை முடிவாக அறிவிக்கும் வரை  போரட்டங்களை நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தினகரன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்க நிறுவனம் மீண்டும் மனு

  1. நாகராஜ கிருஷ்ணன் says:

    மக்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *