பார்த்தீனிய செடிகளை அழிப்பது எப்படி

“கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சாலையோரம் மற்றும் விவசாய நிலங்களில் பரவியுள்ள பார்த்தீனியம் செடிகளை, உழவியல் கட்டுப்பாடு, உயிரியல் கட்டுப்பாடு, ரசாயன கட்டுப்பாடு முறைகளை கடைபிடித்து கட்டுப்படுத்த வேண்டும்’ என, வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:

  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில், விவசாய நிலங்கள், வீட்டுத்தோட்டங்கள், சாலையோரங்கள் ஆகிய இடங்களில், ஆங்காங்கே பார்த்தீனியம் செடிகள் பரவியுள்ளது. இது, ஒரு வேகமாக பரவும் களையாகவும், கால்நடைகள் மற்றும் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் விஷச் செடியாகவும் உள்ளது. குறிப்பாக, மனிதனுக்கு பார்த்தீனிய செடியால் தோல் வியாதியும், சுவாச கோளாறும் ஏற்படுகிறது.
  • ஒவ்வொரு பார்த்தீனியம் செடியில் இருந்தும், 10 ஆயிரம் விதைகள் உற்பத்தியாகி, காற்று மூலம் வேகமாக பரவுகிறது. பார்த்தீனியம் செடியை, உழவியல் முறைப்படி இளஞ்செடிகளை கையால் வேரோடு பறித்து, எரித்துவிடலாம். பார்த்தீனியம் செடிகளை, பூப்பதற்கு முன், மக்க வைப்பதன் மூலம், விதைகளின் முளைப்பு திறனை அழிக்கலாம்.
  • மேலும், நிலப்போர்வை முறையில், நிலத்தின் மீது பாலித்தீன் போர்வை கொண்டு மூடுவதால், ஒளிச்சேர்க்கை கட்டுப்படுத்தப்பட்டு, இச்செடிகள் அழிக்கப்படுகிறது. மேலும், இதன் மூலம் நிலத்தில், ஈரப்பதத்தை நிலை நிறுத்துவதோடு மண்ணின் வளமும் அதிகரிக்கிறது.
  • சைகோகிராமா பைகளோரேட்டா என்ற பார்த்தீனியம் தழைகளை உண்ணும் மெக்சிகன் வண்டுகளை விடுவதன் மூலமும், அதேபோல், பக்சீனியா பூஞ்சானத்தை தெளிப்பதன் மூலமும், பார்த்தீனியத்தை கட்டுப்படுத்தலாம்.
  • மேலும், பயிரிடப்படாத இடங்களாக, வெட்ட வெளிகள், சாலை ஓரங்கள், வீட்டு சுற்றுவட்டாரங்கள் போன்ற இடங்களில், பார்த்தீனியத்தை கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 200 கிராம் வீதம் சமையல் உப்பை நன்கு கரைத்து, அத்துடன், இரண்டு மி.லி., ஒட்டு திரவம் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
  • ஒரு லிட்டர் தண்ணீருக்கு, எட்டு கிராம் சோடியம் உப்பை நன்கு கரைத்து, அத்துடன், இரண்டு மி.லி., ஒட்டு திரவம் கலந்து தெளித்தும், பார்த்தீனியத்தை கட்டுப்படுத்தலாம். முளைத்த பின் களைக்கொல்லியான மெட்ரிபூஜின், மூன்று கிராமை, ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து, பயிரில்லாத நிலையில் தெளிக்க வேண்டும். மேலும், விளை நிலங்களில், பயிருக்கு தகுந்தவாறு, ரசாயன களைக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தியும், பார்த்தீனியம் செடிகளை கட்டுப்படுத்தலாம்.
  • எனவே, அனைத்து விவசாயிகளும், இந்த ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகளை கையாண்டு, பார்த்தீனியம் களைச்செடிகளை கட்டுப்படுத்தி, பயன் அடையலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *