மண்ணின் உயிரிகள்

மண்ணின் மேற்பரப்பு, உண்மையில் உயிர்களின் தோட்டம் போன்றது. மண்ணுக்கு அடியில் செல்லச் செல்ல உயிரிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறது. கண்ணால் காண முடியாத உயிரிகளான குச்சிலங்கள் (பாக்டீரியாக்கள்) பூஞ்சாளங்கள், கதிர்க் காளான்கள் (ஆக்டினோமைசிஸ்) முந்துடலிகள் (புராட்டோசோவா) போன்றவை தவிர, கண்ணால் கண்டறியக்கூடிய பல உயிரினங்கள் மண்ணை வளப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அவற்றைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

மண்ணில் மண்புழுக்கள், கரையான்கள், மரவட்டைகள், பூரான்கள் என்று பலவும் உள்ளன. குறிப்பாகக் கரையான்களைப் பற்றி ஒரு தவறான கருத்து உள்ளது. அதாவது கரையான்கள் செடிகளைத் தின்றுவிடும் என்று பல உழவர்களே கூறுவது உண்டு. அது மட்டுமல்ல; கரையான்களைக் கொல்வதற்கு டன் கணக்கில் மண்ணில் நஞ்சைக் கொட்டி வருகிறோம். உண்மையில் கரையான்கள், இறந்த தாவர உடலங்களைத்தான் உண்ணுகின்றன.

குப்பை மேட்டை தடுக்கும்

உயிருள்ள செல்களை உண்பதற்குரிய வாயமைப்பு கரையான்களுக்குக் கிடையாது. ‘தழைத்தேம்’ (செல்லுலோஸ்) எனப்படும் தாவரங்களின் இறந்த உடலப் பொருளை அரைத்து உண்ணும் முறையிலேயே கரையான்களின் வாயமைப்பு உள்ளது.

கரையான்கள் எறும்புக் குடும்பத்தைச் சேர்ந்தவையல்ல; அவை கரப்பான் பூச்சிக் குடும்பத்துக்கு நெருக்கமானவை. எறும்புகளைப் போல் கூட்டமாக வாழும் தன்மை கொண்டவை. கூட்டுக் குடும்ப வாழ்விலும் கூட்டுறவுச் செயல்பாட்டிலும் இயங்குபவை. தனித்து வாழ இயலாதவை. இவை இல்லாவிட்டால் இந்த உலகமே முழுமையான குப்பை மேடாக மாறியிருக்கும்.

காடுகளில் விழுகிற மரங்களும் இலைகளும் எங்கு பார்த்தாலும் குவிந்தே கிடக்கும். பட்டுப்போன மரத்துண்டுகளில் இருந்து காய்ந்த சருகுகள் வரையான அனைத்து மட்கும் பொருள்களையும் கரையான்கள் தின்று, அதாவது மறுசுழற்சி செய்து புவிப்பந்தை உயிரோட்டத்துடன் வைத்துள்ளன.

கரையான்களில் அரசர்களும் அரசிகளும் உண்டு. இந்த இரண்டு பேரும் பணியாளர் கரையான்களை உருவாக்குகின்றன. இந்தப் பணியாளர்களில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒரு பிரிவு உணவைத் தேடுவது, கொண்டு வந்து சேர்ப்பது போன்ற பணிகளைச் செய்கிறது. மற்றொரு பிரிவு படைவீரர்களாகச் செயல்பட்டு கூட்டத்தைக் காக்கிறது. இப்படி ஒரு கூட்டு வாழ்க்கை நடத்தும் கரையான்கள் வேளாண்மையில் முக்கிய இடத்தை வகிக்கின்றன. அதாவது மண்ணை வளப்படுத்தும் பணியில் இவை பெரிதும் ஈடுபடுகின்றன. கரையான்களின் பணி கடல்போல் பெரியது.

முழு தாவர உணவு

மண்ணில் துளை இட்டு காற்றோட்டம் ஏற்படக் கரையான்கள் வழிவகுக்கின்றன. நீரை மண்ணுக்குள் செலுத்த உதவுகின்றன. பெரிய கரையான் புற்றுகளைக் காணும்போது, அவற்றின் சிறப்பு நமக்குப் புரியும். புற்று மண் உடல்நலத்துக்கு முதன்மையான பங்கை வகிக்கிறது. மண் குளியல் எனப்படும் இயற்கை மருத்துவ சிகிச்சைக்கு அடிப்படை இந்தப் புற்றுமண் என்றால் மிகையாகாது.

மண்வளத்தைப் பொறுத்த அளவில் தாவரக் கழிவுகளை நொதித்தல் முறையில், அதாவது வாயில் உள்ள நொதிகளின் உதவியோடு வளமான மட்காக கரையான்கள் மாற்றுகின்றன. இன்னும் நுட்பமாகக் கூற வேண்டுமானால், மிகவும் நுண்ணிய உயிர்கள் இருக்கும் இடத்தில் அதிக அளவில் உயிர்மக் கரிமம் உண்டாகும் (organic matter). ஆனால், மட்கு ஆவதில் அது ஒரு குறிப்பிட்ட நிலைதான், அதையும் தாண்டிச் செல்ல வேண்டும்.

அதற்குக் கரையான்கள், மண்புழுக்கள் போன்ற சற்றே பெரிய உயிரினங்கள் தேவைப்படுகின்றன. அதாவது இலை தழைகளை, மரத்துண்டுகளைக் குச்சிலங்களும் பூஞ்சாளங்களும் ஒரு கட்டத்துக்குச் சிதைக்கின்றன. அவற்றை முழுமையாகத் தாவர உணவாக மாற்றுபவை கரையான்கள், மண்புழுக்கள், மரவட்டைகள் போன்றவை.

அழிக்க நஞ்சு வேண்டாம்

மண் வளத்தில் கரையான்கள் பல முன்னேற்றங்களைச் செய்திருப்பதை பர்கினோபாசோ, சகேல் போன்ற இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக மண்ணின் வேதியியல் தன்மைகூட உயர்ந்துள்ள நிலையை தாகுயா அபே, டேவிட் பிக்நெல், கிகாஷி (Takuya Abe, David Edward Bignell, Masahiko Higashi, T Higashi) போன்ற மண்புழு ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இது தவிர பண்ணையில் கோழிகளுக்கு, குறிப்பாக வளர் இளம் குஞ்சுகளுக்குக் கரையான்கள் மிகச் சிறந்த தீனி. ஒரு பானையில் சிறிது கிழிந்த சாக்கு, துணிகளைப் போட்டு கொஞ்சம் சாண நீரையும் ஊற்றி மண்ணில் கவிழ்த்து வைத்தால் ஒரு வாரத்தில் பானைக்குள் ஏராளமான கரையான்கள் வளர்ந்திருக்கும். அவற்றைக் கொடுத்தால் குஞ்சுகள் மிக வேகமாக வளர்ச்சி பெறும்.

வீடுகளில் கரையான்கள் நமக்கு இடைஞ்சலாக இருக்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்த எளிய முறைகளைப் பின்பற்றலாம். நஞ்சுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. தார் எண்ணெய், முந்திரி எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தி விரட்டலாம்.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *