விவசாயத்திற்கு அச்சுறுத்தலான மீத்தேன் வாயு திட்டம்

காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயத் தொழிலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பெருமளவு நிலக்கரி படிமம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலக்கரி படுகைகளைச் சுற்றிலும் பெருமளவு மீத்தேன் வாயு உள்ளது. நிலத்துக்குக் கீழேயுள்ள நீரின் அழுத்தம் காரணமாக இந்த மீத்தேன் வாயு அதே இடத்தில் நிலையாக உள்ளது. ஆகவே, மேலே அழுத்திக் கொண்டிருக்கும் நீரை வெளியேற்றினால் மட்டுமே, மீத்தேன் வாயுவை வெளியில் கொண்டு வர இயலும்.

இந்நிலையில், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நிலக்கரி படுகைகளுக்கு இடையே உள்ள மீத்தேன் வாயுவை சோதனைக் கிணறுகள் அமைத்து தேடுதல் மற்றும் வணிக ரீதியான அதன் உபயோகம் பற்றி ஆய்வு நடத்துவதற்காக கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனத்துக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் கடந்த 2010-ம் ஆண்டு உரிமம் வழங்கியது.

இந்தத் திட்டம் தொடர்பாக முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழக அரசுக்கும், அந்த தனியார் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தத் திட்டத்துக்கு கடந்த செப்டம்பர் மாதம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில் இந்தத் திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட துணைச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.

திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த 667 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த இரண்டு மாவட்டங்களிலும் சுமார் 1 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ள இடத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் பெருமளவு நிலத்தடி நீர் வெளியேற்றப்படும். இதனால் விவசாய சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்படும். அதேபோல் பூமிக்கடியில் இருந்து வெளியேற்றப்படும் நீரில் சோடியம், மெக்னீசியம் போன்ற ரசாயனங்கள் பெருமளவில் கலந்திருக்கும். அத்தகைய தண்ணீரால் மண் மாசடைந்து, விவசாய உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்படும்.

மேலும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு சட்ட விதிகளின்படி, நிலக்கரி படுகைகளுக்கு இடையேயுள்ள மீத்தேன் வாயுவை எடுப்பதற்கான உரிமம் அளிக்க முடியாது. இந்நிலையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள உரிமமே சட்ட விரோதமானது. ஆகவே, இந்தத் திட்டத்தை செயல்படுத்த நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் பாண்டியன் கோரியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் எம். ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார். அப்போது, மனு மீதான விசாரணையை ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *