வேளாண் அறிஞர் தேவிந்தர் சர்மா பேட்டி

ல்லாவற்றையும் நிறுவனமயமாக்கிவிட வேண்டும்… எல்லாவாற்றிலிருந்தும் லாபம் ஈட்டிவிட வேண்டும்… எல்லா அரசுகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று ஏகாதிபத்திய வெறியுடன், வாயில் ரத்தம் ஒழுகும் ஓநாயாய்த் திரியும் நிறுவனங்களின் ஒரே குறி ‘விதைகள்’ தான். விதைகளைக் கட்டுக்குள் கொண்டுவருவது என்பது, நிலத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவது… அதன்மூலமாக மக்களைக் கட்டுக்குள் கொண்டுவருவது. இதற்காக நிறுவனங்கள் என்னென்ன தகிடுதத்தங்கள் செய்கின்றன… அதற்கு நம் அரசுகளும், அரசியல் புரியாமல் நாமும் எப்படி உடந்தையாக இருக்கிறோம் என்று விரிவாக விவாதிக்கப்பட்டது தேசிய விதை பன்மய திருவிழாவில். குறிப்பாக இந்த விதை விழாவில் வேளாண் பொருளியல் அறிஞர் தேவேந்திர் சர்மா எழுப்பிய கேள்விகள் அனைத்தும் அதிமுக்கியமானவை.

அவர் குறிப்பாகத் தனி மனிதனுக்கும், பருவநிலை மாற்றத்துக்கும் உள்ள தொடர்புகளை உணர்வுநிலையில் நின்று பேசினார். அவரது உரை, கேள்வி பதில்கள் வடிவத்தில்…

” ‘விதைகளைக் கட்டுப்படுத்த நிறுவனங்கள் நினைக்கின்றன… அதற்கு நம் அரசு துணைபோகிறது’ என்கிறீர்கள். ஆனால், அந்த நிறுவனங்கள் அளித்த வீரியமான, அதிக விளைச்சலைத் தரக்கூட விதைகள்தானே நம்மை உணவுப் பஞ்சத்திலிருந்து காத்திருக்கிறது… பெருகிவரும் மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு உணவளிக்க அந்த விதைகள் அவசியம்தானே…?”

”இது எந்த ஆய்வுமற்ற குற்றச்சாட்டு. உண்மையில் நாட்டு விதைகளைக் கொண்ட பாரம்பர்ய விவசாய உற்பத்தி முறையினால் விளைச்சல் எல்லாம் குறையவில்லை. அந்த முறை எல்லாருக்கும் ஆரோக்கியமான உணவைத்தான் வழங்கிவந்தது. நமது பிழை, உற்பத்தி முறையில் இல்லை; பங்கீடு முறையில்தான் இருக்கிறது. ஒரு பக்கம் டன் கணக்கில் உணவுப் பொருள்கள் வீணாக்கப்படுகின்றன. வீணாக்கப்படும் உணவுகளை  செங்குத்தாக அடுக்கி வைத்தால், நிலாவை முட்டும்.  இன்னொரு பக்கம், பெரும்பான்மையான மக்கள் ஒருவேளை உணவுகூட இல்லாமல் பசியோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள். மனதில் ஈரம் உள்ள அரசாங்கம், மக்கள் நலனில் அக்கறைகொண்ட அரசாங்கம் சரி செய்ய வேண்டியது விநியோக முறையில் உள்ள இடைவெளிகளை. அதைச் செய்யாமல் விதைகள் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல அனுமதிப்பது, பி.டி விதைகளை அனுமதிப்பது தம் மக்களுக்குச் செய்யும்… மனிதக் குலத்துக்குச் செய்யும் மிகப்பெரிய தீங்கு. இதுதான், அழிவைத் தரும் சூழலியல் கேடுகளுக்கும் காரணமாகப் போகிறது.”

விதை

”ஹூம்… விநியோக முறையில் உள்ள சிக்கல்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இது எப்படிச் சூழலியல் கேடுகளுக்குக் காரணமாகும்…?”

”இவர்கள் பி.டி பருத்தியை அறிமுகப்படுத்தும்போது என்ன சொன்னார்கள்…? ‘பூச்சித் தாக்காது’ என்றார்கள். அப்படி நடந்ததா என்ன…? பூச்சித் தாக்கியது; வீரியமான பூச்சி மருந்துகளை, களைக்கொல்லிகளைத் தெளிக்கக் காரணமானது. இப்போதெல்லாம் அந்தப் பூச்சிகள் மருந்துகள் அடித்தும் சாவதில்லை. பூச்சிகள் வீரியமடைந்துகொண்டே போகின்றன. இது, சூழலியல் கேடு இல்லையா…?”

”நீங்கள் பேசும்போது தனி மனிதனுக்கும், பருவநிலை மாற்றத்துக்கும் உள்ள தொடர்பைச் சொன்னீர்கள். அதுகுறித்து கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா…?”

”முன்பெல்லாம், தாம் வசிக்கும் பகுதியில் அறுவடை செய்த உணவுதான் ஆரோக்கியமான உணவு எனக் கருதப்பட்டது. ஆனால், கலாசார மாற்றம் நம் நிலத்தில், நம் விவசாயிகள் விளைவித்த உணவுகள் குறித்து ஒரு தாழ்வு மனப்பான்மையை உணடாக்கியது. அதிக தண்ணீர் தேவைப்படாத சிறுதானியங்களை உண்பது இழிவானது, பதப்படுத்தப்பட்ட உணவுகள்தான் மேன்மையானது, அதை உண்பதுதான் சமூக அந்தஸ்து தரும் எனக் கருதத் தொடங்கினோம். இந்தப் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அனைத்தும் அதிக தண்ணீரை நுகரக்கூடியவை. இதன் உற்பத்தி முறையிலும் ஆயிரம் கேடுகள் இருக்கின்றன. அதனால்தான் நம் உணவுத்தட்டுக்கும், பருவநிலை மாற்றத்துக்கும் தொடர்பு இருக்கிறது.”

” ‘பிளாஸ்டிக் அரிசி’ என்கிறார்கள்… புதிது புதிதாக நோய்கள் வருகின்றன… என்னதான் தீர்வு…?”

”இந்தத் தலைமுறை மருத்துவமனைக்குப் போவதைத்தானே பெருமையாக.. பெருமிதமாகக் கருதுகிறது. பின், புதிய புதிய நோய்கள் வரத்தான் செய்யும். நீங்கள் புதிய கேட்ஜெட்ஸ் வாங்க எவ்வளவு சிரமப்படுகிறீர்கள். அந்தச் சிரமத்தைத் தவிர்க்க என்றாவது தரமான உணவுப் பொருள்கள் வாங்க நினைத்திருக்கிறீர்களா… பிழை நம்மிடம்தானே இருக்கிறது. ‘பின், பிளாஸ்டிக் அரிசி குறித்துதானே கேட்டீர்கள்…?’ இங்கு எல்லாருக்கும் குடும்ப மருத்துவர்கள் இருக்கிறார்கள்தானே…? சரி… எங்கே போனார்கள் நம் குடும்ப விவசாயிகள்…? உங்களுக்கான குடும்ப விவசாயியைத் தேர்ந்தெடுங்கள்… அவரிடம் உணவுப் பொருள்களை வாங்குங்கள். அவருடன் ஓர் இணக்கத்தை வளருங்கள். அப்போதுதான் பிளாஸ்டிக் அரிசி குறித்து எல்லாம் அச்சப்படாமல் ஆரோக்கியமான உணவை உங்களால் உண்ண முடியும்.”

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *