72 வயதில் விருது வாங்கிய விவசாயி !

ஆண்டுதோறும் ஜனவரி 26 அன்று நடைபெறும் குடியரசு தினவிழாவில், பல்வேறு துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில்  மாநில விருதுகள்  வழங்கப்பட்டு வருகின்றன.  இந்த வரிசையில், வேளாண் துறையில் சாதனை புரிந்த விவசாயி ஒருவருக்கும் முதலமைச்சர் கையால் வழங்கப்படுவதுதான் ‘வேளாண் செம்மல் விருது’. தமிழக வேளாண் துறை நடத்தும் மாநில அளவிலான விளைச்சல் போட்டியில் கலந்து கொண்டு, திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் எடுக்கும் விவசாயிக்கு இது வழங்கப்படுகிறது.

தமிழக அரசு சின்னம் பொறித்த தங்கப்பதக்கத்துடன், 5 லட்ச ரூபாய் பணமும் கொண்ட இந்த விருதை, கடந்த ஆண்டு நசியனூர் நெல் விவசாயி பரமேஸ்வரன் பெற்றார். இந்த ஆண்டு கொடுமுடி வட்டாரம், அஞ்சூர் ஊராட்சி தாதராக்காடு பகுதியைச் சேர்ந்த கே.பி.துரைசாமி, பெற்றிருக்கிறார்.
ஒரு முற்பகல் நேரம், அஞ்சூர் கிராமப் பஞ்சாயத்துத் திடலில், ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் எம். செல்வராஜ், கொடுமுடி வட்டார வேளாண் உதவி இயக்குநர் ஆர். சாவித்திரி ஆகியோர் முன்னிலையில், உள்ளூர் விவசாயிகள் புடை சூழ, கே.பி.துரைசாமிக்கு சிறிய பாராட்டு விழா நடந்தது. கூட்ட முடிவில், அவருக்கு நாமும் வாழ்த்துகளைச் சேர்ப்பித்ததோடு…. வேளாண்மை அலுவலர் குழுவுடன் விருது விவசாயிகள் வயல்வெளிக்கும் சென்று விவரங்களைச் சேகரித்தோம்.

இணை இயக்குநர் செல்வராஜ் பேசும்போது, “எனக்குச் சொந்த ஊர், திருவாரூர் மாவட்டம். நன்னிலம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இங்கு பணிபுரிகிறேன். மற்ற மாவட்ட விவசாயிகளை விட, மூன்று மடங்கு கூடுதல் மகசூலை எடுத்துக் காட்டுகிறார்கள் இந்தப் பகுதி விவசாயிகள். இதற்கு முக்கியக் காரணம், புதிய தொழில்நுட்பமான திருந்திய நெல் சாகுபடிதான். மேலும், இந்தச் சாதனை விவசாயி, வேளாண் துறை அறிவுறுத்தும் அனைத்துத் தொழில்நுட்பங்களையும் அச்சுப்பிசகாமல் கடைப்பிடித்துள்ளார். புதிய யுக்திகளையும் கையாண்டு கூடுதல் வெ்றறி பெற்றிருப்பதுடன், மற்ற விவசாயிகளுக்கும் அந்த நுட்பங்களைக் கொண்டு சேர்த்து வருகிறார். இத்தகைய உழைப்புதான், இந்த 72 வயதிலும் விருது வாங்க வைத்துள்ளது என்று பாராட்டினார்.

அடுத்து பேசி உதவி இயக்குநர் ஆர்.சாவித்திரி, “போட்டியில் பங்கேற்க ஆர்வமுடன் துரைசாமி விண்ணபத்திருந்தார். அரசு வகுத்திருக்கும் போட்டி விதிகள் அனைத்தும் இவருக்குப் பெருந்தியதால், இவரது வயலைத் தேர்வு செய்தோம். பசுந்தாள் விதைப்புத் தொடங்கி, பயிர் அறுவடை வரையிலான வேளாண் தொழில்நுட்பங்களையும், இடுபொருள், நீர்மேலாண்மை, பயிர் மேலாண்மை உள்ளிட்டவற்றையும் துளியும் பிசகாமல் கடைப்பிடித்தார். இவருக்கு 10 ஏக்கர் நிலம் இருந்தாலும், 50 சென்ட் பரப்பளவை மட்டுமே போட்டிக்கான சாகுபடி வயலாக நிர்ணயம் செய்தோம். அன்றிலிருந்து எங்கள் துறை அலுவலர்களின் தொடர்பணி மற்றும் உயர் அலுவலர்களின் தொடர் கண்காணிப்பில் வயலைக் கொண்டு வந்தோம். சி.ஆர்.1009 என்கிற ஒடிசா மாநிலம் கட்டாக், நாட்டு ரக நெல்லைத்தான் இவர் நடவு செய்திருந்தார். ஏக்கருக்கு 3 கிலோ விதைநெல் போதுமானது.

நடுவர்களான திருப்பூர் மாவட்ட வேளாண்மை இயக்குநர், ஈரோடு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், ஈரோடு வேளாண்மை இணை இயக்குநர், முன்னோடி விவசாயி ராசிபுரம் சதாசிவம் ஆகியோர் முன்னிலையில் அறுவடை நடைபெற்றது. 50 சென்டில் 3,065 கிலோ கிடைத்தது. என்கிற விவரம், மாநில வேளாண் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல் மொத்தம் 30 மாவட்டங்களில் இருந்தும் அனுப்பப்பட்ட மகசூல் விவரங்களின் முடிவில், விவசாயி கே.பி.துரைசாமி வெற்றி பெற்றார் என்று சொன்னார்.

சந்தனமாலை கமகமக்க… தங்கப்பதக்கம் கழுத்தில் மினுமினுக்க முகமலர்ந்து பேசிய கே.பி.துரைசாமி, “நான் எடடர் வகுப்புவரைதான் படித்திருக்கிறேன். சின்ன வயதிலிருந்தே விவசாயத்தில் ஆர்வம். திருச்சி வானொலியில் விவசாயிகளுக்கான  நிகழ்ச்சியில் கலந்து பலமுறை பேசியிருக்கிறேன். ‘விளைச்சல் விருது’ வாங்குவது புதுசு இல்லை. பல முறை வாங்கியிருக்கிறேன். 1968 -69 ல் ஐ.ஆர்.-8 நெல்சாகுபடியில் ஒருங்கிணைந்த கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஏக்கருக்கு 4,847 கிலோ மகசூல் எடுத்து, அப்போதைய கவர்னர் கே.கே.ஷா வசம் 2,000 ரூபாய் பரிசு வாங்கியிருக்கிறேன். 1969-70ம் ஆண்டிற்கான மகசூல் போட்டியில் கலந்து கொண்டு ஐ.ஆர்-8 நெல் மகசூல் ஏக்கருக்கு 4,618 கிலோ எடுத்து, மாநில விருதை அன்றைய முதல்வர் மு.கருணாநிதியிடம் வாங்கினேன். 1970-71 தமிழக அரசோட சிறந்த விவசாயிக்கான வேளாண் செம்மல் விருதும் வாங்கியிருக்கிறேன்.

எனக்கு ஒரு மகன், ஒரு மகள் என்று இரண்டு வாரிசுகள், மகள் திருமணம் முடிந்து கரூரில் வசிக்கிறாங்க.. மகனுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. அவர் அமெரிக்காவில் பொறியாளர். ‘இந்த வயதில் எதற்கு இந்த போட்டியெல்லாம் ஓய்வெடுங்க என்று இரண்டு பேரும் சொன்னார்கள். ஆனால், விவசாயி ஓய்வெடுக்கக்  கூடாது என்று சொல்லிவிட்டு இந்த வருடமும் போட்டியில் கலந்துக் கொண்டேன். விருது வாங்கிவிட்டேன். இதில் பஞ்சகவ்யாவை அதிகமாக பயன்படுத்தினதும் என் வெற்றிக்கு ஒரு காரணம் என்றார்.

இதோடு நிற்கப் போவதில்லை.. தேசிய விளைச்சல் போட்டியிலும் கலந்து கொண்டு ஜனாதிபதி கையால் இந்தியாவோட சிறந்த விவசாயி விருது வாங்கப் போகிறேன். எனக்கென்ன வயசா ஆகிவிட்டது.. 72 வயசுதானே என்று கேட்கிறார் சிரித்துக் கொண்டே… இந்த தன்னம்பிக்கை உழவன்.

விருது சாகுபடி !

விருது பெற்ற விவசாயியின் சாகுபடி விவரங்களை வரிசைப்படுத்திய உதவி இயக்குநர் சாவித்திரி… “நெல் விவசாயத்தைப் பொறுத்தமட்டில் முக்கிய தேவை பசுந்தாள் உரம். அந்தக் காலத்தில் குளம், குட்டை, ஏரி புறம்போக்கு நிலங்களில் தானாக வளர்ந்து கிடக்கும் கொழிஞ்சி, எருக்கு இலை, நொச்சி உள்ளிடட செடிகளைப் பிடுங்கி வண்டி வண்டியாக ஏற்றி வந்து, சேற்று வயலுக்குள் போட்டு மிதித்து அமுக்கி உழவு செய்வார்கள். பயிருக்குத் தேவையான தழைச்சத்துக் கூடுதலாகக் கிடைக்க, இந்த பசுந்தாள் உரம் அவசியமானது. ஆனால், இது தேவையான அளவு இப்போது கிடைக்க வாய்ப்பில்லை. அதனால், அதற்கு மாற்றாக தக்கைப்பூண்டு 15 கிலோ அளவில் விதைத்து, தொடர் பாசனம் செய்து வளர்ந்து நிற்கும். அவற்றை 45-வது நாளில் மடக்கி உழவு செய்ய வேண்டும்.

நாற்றங்கால் பாத்தியில் விதை விடும் முன்பு, விதை நெல்லை நேர்த்தி செய்ய வேண்டும். அசோஸ்பைரில்லம் உயிர் உரம் 200 கிராம், ஆறிய அரிசிக் கஞ்சி 500 மில்லி இவற்றுடன் நாட்டுச் சர்க்கரை 100 கிராம் சேர்த்து, விதை நெல்லைப் பிசைந்து 40 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி வைக்க வேண்டும்.

நாற்றங்கால் !

நாற்றங்காலுக்கு 6 சென்ட் நிலம் தேவை. 6 அடி நீளம், 3 அடி அகலம் என்ற அளவில் தயார் செய்த மேட்டுப்பாத்தியில் அடியுரமாக 100 கிலோ மட்கிய தொழுவுரத்துடன் 2 கிலோ அசோஸ்பைரில்லத்தைக் கலந்து பாத்தியில் இறைத்து விட வேண்டும். தொடர்ந்து விதைநெல்லைத் தூவி விட வேண்டும். விதைத்த 14-வது நாளில் வளர்ந்த நாற்றுகளைப் பறித்து, 60 லிட்டர் தண்ணீரில் 1 கிலோ அசோஸ்பைரில்லத்தைக் கலந்து, இதில் முக்கி எடுத்து நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.

தொழுவுரம் இறைக்கப்பட்ட 50 சென்ட் நிலத்தில் நாற்றுக்கு நாற்ற 23 சென்டி மீட்டர் இடைவெளியில் ‘மார்க்கர்’ கொண்டு திருந்திய நெல் சாகுபடி முறையில் நடவு செய்ய வேண்டும். அதாவது ஒரு குத்துக்கு ஒரு நாத்து. முன்னதாக நடவு வயலில், ஆறிய கோழி எர 3 டன்னுடன், 6டன் தொழுவுரத்தைக் கலந்து அடியுரமாகக் கொடுக்க வேண்டும். கூடவே, தழை, மணி, கந்தகம் கலந்த 50 கிலோ ரசாயன உரம், 30 கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றை அடியுரமாகக் கொடுக்க வேண்டும்.

உர மேலாண்மை

பயிரின் மொத்த வயது 135 நாட்கள். நடவு செய்த 15-வது நாளில்… ஜிங் சல்பெட் 10 கிலோ, 20 வது நாளில் சூடோமோனாஸ் 2 கிலோவை 50 கிலோ தொழுவுரத்துடன் கலந்து கொடுக்க வேண்டும். 30-வது நாளில் 17:17:17 என்.பி.கே உரம் 30 கிலோவை இறை்கக வேண்டும். 35-வது நாளில்… பொட்டாஷ் 30 கிலோவை 60 கிலோ தொழுவுரத்துடன் கலந்து இறைக்க வேண்டும்.

பாசனத்தைப் பொறுத்தவரை பாய்ச்சலும் காய்ச்சலுமான முறையில் நீர்பாய்ச்ச வேண்டும். சமச்சீர் தழைச்சத்திற்காக 60-வது நாளில் 15 கிலோ யூரியாவைக் கொடுக்க வேண்டும். 75-வது நாளில் நெல் பூட்டை வாங்கும். இந்தச் சமயத்தில் 10 லிட்டர் தண்ணீரில் 250 மில்லி பஞ்சகவ்யாவை கலந்து தெளிக்க வேண்டும். 400 லிட்டர் தண்ணீரில் 10 லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்து பாசன வழியாகக் கொடுக்க வேண்டும். இது பயிர் ஊக்கியாகக் கொடுக்க வேண்டும். இது பயிர் ஊக்கியாக செயல்பட்டு தரமான விளைச்சல் பெருக்கியாகச் செயல்புரியும்.

100-வது நாளில் 2 கிலோ திரவ வடிவிலான 18:18:18 என்.பி.கே உரத்தை பாசன நீரில் கலந்து கொடுக்க வேண்டும். தொடர்ந்து 110- வது நாளில் 400 லிட்டர் தண்ணீரில் 10 லிட்டர் பஞ்சகவ்யாவை பாசனநீர் வழியாகக் கொடுக்க வேண்டும். தொடர்ந்து பொட்டாஷ் 20 கிலோவுடன், 10 கிலோ அமோனியம்-சல்பேட் கலந்து பாசன நீரில் கொடுக்க வேண்டும்.

பூச்சி மேலாண்மையைப் பொறுத்தவரை பூச்சி தென்படும் போது பூட்டைப் பருவத்தில் இரண்டு முறை 150 மில்லி டைத்தேன் பூச்சிக்கொல்லி மருந்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு முறையும், அதே அளவு மோனோகுரோட்டோஃபாஸ் பூச்சிக் கொல்லியை ஒரு முறையும் தெளிக்க வேண்டும். 15, 30, 45 மற்றும் 60 –வது நாட்களில் கோனோவீடர் பயன்படுத்தி களைகளை அழுத்திவிட வேண்டும்.

தொடர்புக்கு
கே.பி.துரைசாமி,
செல்போன் : 09443430335
சாவித்திரி (கொடுமுடி) 04204222070

நன்றி: தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்/பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *