உலகின் மிகப் பெரிய குகை

மாமல்லபுரம் அருகே புலிக் குகை, திருச்சி மலைக் கோட்டையில் பல்லவர் காலத்துக் குகையைப் பற்றியெல்லாம் பாடப் புத்தகங்களில் படித்திருப்பீர்கள். இவையெல்லாம் மனிதர்கள் உருவாக்கிய குகைகள். ஆனால், மலைத்தொடர்களில் இயற்கையாகவே அமைந்த குகைகள் நிறைய நாடுகளில் உள்ளன. அவற்றில் வியட்நாம் நாட்டில் உள்ள ஒரு குகைக்குத் தனிச்சிறப்பு உள்ளது. ஆமாம், இந்தக் குகைதான் உலகிலேயே மிகப் பெரியது.

குவாங் பின்க் மாகாணத்தில் ட்ராக் என்ற இடத்தில் அடர்ந்த காடு உள்ளது. இந்த இடத்தில்தான் இக்குகை உள்ளது. இதற்கு ‘சான் டூங்’ என்று பெயர். யாருடைய கண்களுக்கும் தட்டுப்படாத, இந்த அதிசயக் குகை 20 ஆண்டுகளுக்கு முன்பு 1991-ம் ஆண்டில்தான் வெளிச்சத்துக்கு வந்தது. பிரிட்டிஷ் குகை ஆராய்ச்சி யாளர்கள் இக்குகையைக் கண்டு பிடித்தார்கள், ஆனால், அதற்கு முன்பே உள்ளூர்வாசி ஒருவர் குகையின் வாசல் வரை சென்றார். ஆனால், குகையில் இருந்து வந்த மர்மமான ஒலியைக் கேட்டுப் பயந்து ஓடி வந்துவிட்டார். அதன்பிறகு யாரும் அந்தக் குகைப் பக்கம் தலைவைத்துக்கூட படுக்கவில்லையாம்.

Courtesy: Hindu
Courtesy: Hindu

இந்தக் குகையின் நீளம் 5 கிலோ மீட்டர். உயரம் 80 மீட்டர், அகலம் 80 மீட்டர். சுமார் 150 தனித்தனிக் குகைகளால் ஆன ஒரு பிரம்மாண்டக் குகை இது. ஏறக்குறைய 50 லட்சம் ஆண்டுகளாக மலைக்கு அடியில் ஓடிய ஆறால், இந்தக் குகை உருவானதாகக் குகை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாகவே ‘மழை ஆறு’ என்று அர்த்தம் கொண்ட ‘சான் டூங்’ என்ற பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

Courtesy: Hindu
Courtesy: Hindu

இதில் சுவாரசியமான ஒரு விஷயமும் இருக்கிறது. குகையின் கூரையில் ஒரு பகுதி‌ உடைந்துவிட்டது. அந்த இடம் அடர் சோலைவனம் போலக் காட்சியளிக்கிறது. இதை ‘கார்டன் ஆஃப் ஈடன்’ என்று அழைக்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக, இங்குள்ள மணல் துகள்களின் மீது படிந்த தண்ணீர் துளிகளால், இந்தக் குகை முழுவதும் பல அழகிய படிமானங்கள் உருவாகியிருக்கின்றன.

Courtesy: Hindu
Courtesy: Hindu

சலசலவென ஓடும் சிறிய ஆறு, திரும்பும் பக்கமெல்லாம் பச்சைப்பசேல் எனப் போர்வை போர்த்தியது போல் காணப்படும் புல்வெளிகள், அடர்ந்த மரங்கள், பேரிரைச்சலுடன் விழும் அருவி என இந்தக் குகை பேரழகுடன் காணப்படுகிறது. நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு 5 ஆண்டுகளுக்கு முன்பு சான் டூ குகை உலகின் பெரிய குகையாக அறிவிக்கப்பட்டது.

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *