விருதுநகர் சிவஞானபுரம் ஊராட்சி கருப்பசாமி நகர் மற்றும் ரோசல்பட்டி ஊராட்சி பாண்டியன் நகர் பகுதிகளில் உள்ள கருவேலம் மரங்களை தனி மனிதர் ஒருவர் அகற்றி வருகிறார்.
விருதுநகர் மாவட்டம் வறட்சி மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது. அதற்கு காரணமே மாவட்டம் முழுவதும் உள்ள கருவேலம் மரங்களே என ஆய்வு கூறுகிறது. விருதுநகரில் உள்ள கருப்பசாமி நகர் மற்றும் பாண்டியன் நகர் பகுதிகளில் கருவேலம் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன . இதனால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு உடல் சார்ந்த பிரச்னைகள் மற்றும் சுற்றுசூழல் பாதிப்புகள் ஏற்படுகிறது.
தேடி, தேடி அகற்றம்இதைதொடர்ந்து கருவேலம் மரங்களுக்கு எதிராக, பாண்டியன் நகரை சேர்ந்த காளிதாஸ், 60 ,என்பவர் “பட்ஸ் டிரஸ்ட்’ எனும் அமைப்பை துவங்கினார். அவ்வமைப்பில் தன் மகன் உட்பட நண்பர்கள் சிலரை சேர்த்து கொண்டார். அதன் மூலம் கிடைக்கும் நிதியை கொண்டு கருப்பசாமி நகர் மற்றும் பாண்டியன் நகர் பகுதிகளில் உள்ள கருவேலம் மரங்களை தேடி தேடி அகற்ற ஆரம்பித்தார். தற்போது 12 ஏக்கர் பரப்பளவில் உள்ள கருவேலம் மரங்களை முழுமையாக அகற்றி உள்ளார்.இதற்காக மண் அள்ளும் இயந்திரங்களை வாடகைக்கு வாங்கி இவற்றை அகற்றும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார் .
மக்கள் ஒத்துழைப்பு
அவர் கூறுகையில், “”கருவேலம் மரங்களின் பாதிப்பு எவ்வளவு அதிகம் என்பது தெரிந்ததும்,நம்மை சுற்றி இத்தகைய பாதிப்புள்ள உயிர்கொல்லி மரங்கள் இருக்கின்றனவா என தோன்றியது. இதை ஒழிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் “பட்ஸ்’ அமைப்பை துவக்கினேன். தற்போது கருப்பசாமி நகரில் உள்ள கருவேலம் மரங்களை அகற்றி வருகிறோம். இப்பகுதி மக்களின் ஒத்துழைப்பு நன்றாக உள்ளதால் அகற்றும் பணி எளிதாக உள்ளது.
மனதிற்கு மகிழ்ச்சி
கருவேலம் மரங்களில் வேர்களை ஒரு அடி வரை எடுத்தால் கூட போதும் திரும்ப வளராது. கருவேலம் மரங்களை ஒழித்தால் தான் சுத்தமான காற்று , நிலத்தடிநீர் கிடைக்கும். ஏறையநாயக்கர் ஊரணியில் உள்ள கருவேலம் மரங்களை அகற்றி, தற்போது அதில் தண்ணீரை பார்க்கும்போது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.
சுற்றுசூழல்
விருதுநகர் முழுவதும் கருவேலம் மரங்களை அகற்றி வேம்பு, புங்கை மரங்களை நடும் பணியில் ஈடுபட்டால் தான் சுற்றுசூழல் பாதுகாக்கப்படும். அதற்கான பணியை தற்போதுதான் துவக்கி உள்ளோம். இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது,” என்றார்.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்