‘தேயிலைத் தோட்டத்தில் யானைகள் அட்டகாசம்’, ‘யானை தாக்கி முதியவர் பலி’, ‘காட்டு எல்லையில் யானைகள் முகாம் இட்டிருக்கின்றன’ மேற்குத் தொடர்ச்சி மலை தொடர் அடிவாரப் பகுதிகளிலிருந்து இப்படிப்பட்ட தலைப்புகளுடன் செய்திகள் வருவதைப் பார்த்திருப்போம். இதற்கெல்லாம் தீர்வே கிடையாதா, ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும்.
வால்பாறை ஆராய்ச்சி
காட்டு யானைகள் – மனிதர்கள் இடையிலான எதிர்கொள்ளல் தொடர்பாக வால்பாறையில் ஆராய்ச்சி செய்து, மனித உயிரிழப்புக்குத் தீர்வும் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர் ஆனந்தகுமாரின் முகம் தமிழகத்தில் பரவலாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், பிரிட்டனைச் சேர்ந்த விட்லீ ஃபார் நேச்சர் அமைப்பு, அவருடைய பணியின் மதிப்பை உணர்ந்திருக்கிறது. இயற்கை பாதுகாப்புக்கு அந்த அமைப்பு உலக அளவில் வழங்கி வரும் ‘விட்லீ விருது’ இந்த ஆண்டு ஆனந்தகுமாருக்குக் கிடைத்துள்ளது. பசுமை ஆஸ்கர் என்று அழைக்கப்படும் இந்த விருதைப் பெற்ற ஏழு பேரில் இவரும் ஒருவர்.
“மனித – விலங்கு எதிர்கொள்ளலை (Human – Animal conflict) தடுக்க, காட்டுயிர்களை விரட்டுவது, மக்களை வெளியேற்றுவது ஆகிய இரண்டுமே தீர்வாகாது. காட்டுயிர்களின் நடமாட்டம் குறித்து முன்கூட்டியே மக்களுக்கு எச்சரித்தால் உயிரிழப்புகளைக் குறைக்க முடியும்” என்கிறார் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (Nature conservation foundation) சார்பாகப் பணிபுரிந்துவரும் ஆனந்தகுமார்.
எச்சரிக்கை அமைப்பு
கோவை மாவட்டத்தில் ஆனைமலை புலிகள் காப்பகம், பரம்பிகுளம் புலிகள் காப்பகம் எனத் தமிழக – கேரளக் காட்டுப் பகுதிகள் நெருங்கியுள்ள பகுதியில் அமைந்துள்ள வால்பாறையில் காட்டுயிர் நடமாட்டமும், மனித – விலங்கு எதிர்கொள்ளலும் அதிகம். இங்கே யானைகளால் ஏற்படும் உயிர்ச்சேதம், பொருட்சேதங்களைக் குறைக்கும் வகையில் பொதுமக்கள், தமிழக வனத்துறையுடன் இணைந்து இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தொலைக்காட்சி செய்தி, குறுஞ்செய்திகள், முன்னெச்சரிக்கை விளக்குகள் ஆகியவற்றின் மூலம் யானைகளின் நடமாட்டம் குறித்து மக்களுக்குத் தெரிவிக்கும் விரிவான ஏற்பாடு வால்பாறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், மனித – விலங்கு எதிர்கொள்ளலால் ஏற்படும் உயிரிழப்பு கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்துவருகிறது.
சிவப்பு விளக்கு
2004-ம் ஆண்டு முதல் யானைகள் நடமாட்டம் குறித்து உள்ளூர் அலைவரிசைகளில் இந்த அமைப்பு தினசரி அறிவித்துவருகிறது. 2011-ம் ஆண்டிலிருந்து யானைகள் நடமாட்டம் குறித்து உள்ளூர் மக்களுக்குச் செல்போன் குறுஞ்செய்திகளும் அனுப்பப்படுகின்றன. இதில் யானைகள் முகாமிட்டுள்ள பகுதி, அடுத்தடுத்த நாட்களில் அந்த யானைகள் கூட்டம் நகரும் பகுதி கணிக்கப்பட்டு, அந்தந்தப் பகுதி மக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
அது மட்டுமில்லாமல் யானைகள் நடமாட்டத்தை மக்களுக்கு எளிதில் உணர்த்த, செல்போன் மூலம் இயக்கப்படும் சிவப்பு எச்சரிக்கை விளக்குகளையும் 24 இடங்களில் இந்த அமைப்பு அமைத்துள்ளது. ஒரு பகுதியில் யானைகள் நடமாட்டம் இருந்தால், செல்போன் அழைப்பு மூலம் இந்த விளக்குகளை எரியவைக்கவும், அணைக்கவும் முடியும். இதன் மூலம் தொலைவிலிருந்தும்கூட யானைகள் நடமாட்டம் இருப்பதை மக்கள் அறிந்துகொள்ள முடியும்.
இந்த அறிவியல்பூர்வமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உருவாக்கியதற்காகத்தான் தற்போது அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
பூர்வீகம் தேடி
‘வால்பாறையில் 1850-களில் காடுகளை அழித்து எஸ்டேட்கள் அமைக்கப்பட்டன. அப்போது இங்கு ஏராளமான யானைகள் இருந்துள்ளன என்று சி.ஆர்.டி. காங்கிரீவ் என்பவர் எழுதிய ‘தி ஆனைமலைஸ்’ நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. யானைகளின் பூர்வீகமாக வாழும் துண்டாடப்பட்ட 40 சோலைகள், தற்போதும்கூட இங்கே உள்ளன.
வசிப்பிடத்தை இழந்த யானைகள், பூர்வீக இடத்தைத் தேடி வரும்போது, அங்குள்ள மக்களை எதிர்கொள்வதால் பொருட்சேதமோ, எதிர்பாராத தருணத்தில் உயிர்சேதமோ ஏற்படுகிறது. யானைகளை விரட்டுவதோ, மக்களை வெளியேற்றுவதோ இதற்குத் தீர்வல்ல; அது சாத்தியமும் அல்ல. யானைகளின் நடமாட்டத்தை முன்கூட்டியே எச்சரிப்பதன் மூலம் உயிர்ச்சேதத்தைத் தடுக்கலாம்.
உயிர்ச்சேதம் குறைவு
வால்பாறையில் கடந்த 20 ஆண்டுகளில் யானைகள் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 41. அவர்களில், யானைகள் முகாமிட்டிருக்கும் இடத்தை அறியாமல் இறந்தவர்கள் 36 பேர். யானைகள் இருக்கும் இடத்தைத் தெரிவிப்பதன் மூலம், உயிரிழப்பைப் பெருமளவு குறைக்கலாம். அறிவியல்பூர்வமான இந்த முயற்சியில் மக்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது.
யானைகள் நடமாட்டம் தெரிய வரும்போது பெரும்பாலும் மக்களே எச்சரிக்கை விளக்குகளை எரியச் செய்கின்றனர், எங்களுக்கும் தகவல் தருகின்றனர். இதனால் கடந்த சில வருடங்களில் பொருட்சேதம் 50% ஆகவும், உயிர்ச்சேதம் 0% ஆகவும் குறைந்துள்ளது. சிங்கோனா, டான் டீ போன்ற சில பகுதிகளைத் தவிர, மற்ற இடங்களில் யானைகளால் ஏற்படும் சேதம் வெகுவாகக் குறைந்துவிட்டது.
வால்பாறை முழுமைக்கும் இந்தச் சேவைகளை விரிவுபடுத்த வேண்டும். யானைகள் நடமாட்டம் உள்ள கிராமங்களில், செல்போன் மூலம் குரல் வடிவில் எச்சரிக்கை செய்தி (out bound voice calls) அனுப்புவது குறித்துத் தற்போது ஆலோசித்து வருகிறோம்” என்கிறார்.
நன்றி ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
One thought on “காட்டு யானை பிரச்சினைக்குத் தீர்வு கண்ட ஆராய்ச்சியாளருக்குப் பசுமை ஆஸ்கர்”