குரங்குகளை விரட்ட பாம்பு பெயின்டிங்!

குரங்குகளின் அட்டகாசத்தால் விவசாயம் செய்ய முடியாமல், நொந்துபோய் நொடிந்துபோய் மனவேதனையில் இருக்கும் விவசாயிகளுக்கு,  குறைந்த செலவில் புதிய யுக்தியைக் கண்டுபிடித்து குரங்குகளை மனவேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறார் ஒரு விவசாயி.

 

ஓடுவன்பட்டி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா ஒடுவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வீரணன். இவருக்கு நான்கு ஏக்கர் நிலம் இருந்தாலும் அதில் சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தில் 200 தென்னை மரங்களை வைத்திருக்கிறார். இந்தப் பகுதியில் தென்னை விவசாயம் அதிகம். ஆனாலும் சோளம், கம்பு, நிலக்கடலை விவசாயம் வானம் பார்த்த பூமியாக அமைந்துள்ளது. வானம் பொழிந்தால் இந்த விவசாயிகளின் வாழ்க்கை செழிக்கும். இப்படி இருக்கையில் அந்த விவசாயத்தை குரங்குகளிடம் இருந்து காப்பாற்ற முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள். இந்நிலையில், புதிய முயற்சியாக வீரணன் குரங்குகளை பயமுறுத்த கண்டுபிடித்த புதிய யுக்தி, அவர் தென்னைமரங்களில் பாம்பு படத்தைப் பெயின்டால் அவரே வரைந்து வைத்திருப்பதுதான். இதுபற்றி அவரே பேசுகிறார்….

”எங்கள் ஊரைச்சுற்றி பிரான்மலை மற்றும் எசறி மலை இருக்கிறது. ஆனால், மலைக்குரங்குகளால் எங்கள் விவசாயத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஊர் சுத்தி குரங்குளால்தான் எங்களுக்கு அதிகமான பாதிப்பு இருக்கிறது. இந்தக் குரங்குகள் கூட்டமாக தென்னைத் தோப்புக்குள் புகுந்து ஒவ்வொரு மரத்திலும் ஏறி விடும். தென்னைமரங்களில் தளிர்விடும் பூக்கள் பாலை குறுத்து ஆகியவற்றை கடித்துத் தின்றுவிடும். தின்றது போக மீதி இருப்பதையும் தேவையில்லாமல் காலி செய்துவிடும். இதை விரட்ட நாங்கள் எவ்வளவு முயற்சி எடுத்தும் பலனில்லை. வானம் அதாவது வெடி வெடிப்போம். அந்த நேரத்தில் பின்னங்கால் பிடரியடிக்க அனைத்துக் குரங்குகளும் ஓடிவிடும். அரை மணிநேரத்தில் திரும்பவும் கேங்கோடு வந்து மீண்டும் நாசம் செய்துவிட்டுப் போகும். நாங்கள் வெடி வைத்து விரட்டுவோம். பிறகு குரங்குகள் ஊருக்குள் போயிடும். வீடுகளுக்குள் புகுந்து சட்டி பானை சோறு குழம்பு எல்லாத்தையும் நாசம் செஞ்சுட்டு அது பாட்டுக்கு ஓடிப்போயிரும். இதுவே எங்களுக்கு மிகுந்த மனவேதனையாக இருக்குகிறது.

சிங்கம்புணரி விவசாயியின் தென்னை மரங்கள்

குரங்குகளை பிடிக்க பணவிரயம் :

துவரங்குறிச்சியில் இருந்து குரங்குகளைப் பிடிப்பதற்காக ஆள் தயார் செய்து அழைத்து வந்தேன். அவர்கள் குரங்குகளைப் பார்த்துவிட்டு பதினைந்தாயிரம் ரூபாய் செலவாகும் என்று சொன்னார்கள். நானும் கொடுத்தேன். பிடித்த குரங்குகளை கூண்டில் அடைத்து என்னிடமே கொடுத்துவிட்டார்கள். நாங்கள் கொண்டு போனால் பக்கத்தில் விட்டுவிட்டோம் என்று சொல்லுவார்கள். ஆகையால் நீங்களே கொண்டு போய் விட்டுவிடுங்கள் என்று அவர்கள் சொன்னார்கள். நானோ குட்டியானை வண்டியை வாடகைக்கு பிடித்து மதுரை பக்கமுள்ள வெள்ளிமலையில் கொண்டு போய்விட்டேன். ஆனால், அந்தக் குரங்குகள் என்னை முட்டாள் ஆக்கியது. திரும்பவும் வந்துவிட்டது. ஏன்டா தென்னை விவசாயம் செய்றோம்னு நினைச்சு நொந்த நாள்கள் தான் அதிகம். தென்னை மரம் வைப்பதற்கு முன்பே இப்படி குரங்குகளின் அட்டகாசம் இருந்திருந்தால்  தென்னை விவசாயமே செய்திருக்க மாட்டேன். நாங்க வேறு தொழில் செய்து வருமானமே இல்லாத தென்னைக்கு அதுவும் குரங்கு விரட்ட செலவு பண்ண வேண்டி இருக்கிறது.. அந்த அளவுக்கு இந்த தென்னை மரங்களால் நான் அடைந்த லாபத்தைவிட பண விரயமும் மனவேதனையும் தான் அதிகம்.

குரங்குகளின் டெக்னிக்:

தென்னை மரத்துமேல குரங்குகள் ஏறியிருச்சுனா இளம் இளநீர் இருக்கும் காயை மட்டும் பறிக்கும். அதுக்கு இருக்கிற சிங்கப்பல்லால் கடித்து தண்ணீரை குடித்துவிட்டு அதன் கைகளால் அழகாக உள்ளே இருக்கும் வழுக்கையை சாப்பிட்டு விடும். அதே நேரத்தில் தேங்காய் பருவத்துக்கு வந்த இளநீரை கடிக்காது. பிடுங்கி கீழே போட்டுவிடும். ரொம்ப விவரமாகவும் டெக்னிக்காகவும் அறிவை பயன்படுத்தும் குரங்கு. தேங்காய் விலை இன்றைக்கு மார்க்கெட்டில் அதிகமாக விற்பனையாகிறது. இந்த நேரத்தில் எங்களுக்கு குரங்குகள் தொல்லை அதிகமாக இருப்பதால் எங்கள் வருமானத்தை இழந்து நிற்கிறோம்.

குரங்குகளை விரட்ட பாம்பு படம்

விவசாயி கண்டுபிடித்த நியூ டெக்னிக்:

இப்படி குரங்குகள் நம்மல தென்னை விவசாயம் செய்ய விடமாடேங்குதேனு நாங்க பேசிட்டு இருக்கும்போது பேச்சு வழக்குல வந்தது பாம்பு விஷயம். குரங்குகளுக்கு பாம்புனா பயம். பாம்ப பார்த்தா குரங்கு கொல்லாம விடாது. குரங்கு முதல்ல பாம்பு கழுத்து பகுதியதான் பிடிக்கும். அப்படியே கவ்விக்கிட்டே கீழ விடாம அந்த பாம்பு செத்து அழுகிப் போற வரைக்கும் வாய்ல வச்சுக்கிட்டே திரியும். இதுதான் குரங்கோட குணம்னு சொன்னாங்க. அப்பதான் எனக்கு ஒரு யோசனை வந்துச்சு . ஏன் நம்மளோட தென்னை மரங்களில் பாம்பு படம் வரையக்கூடாது. அப்ப எழுந்த கேள்விதான் தென்னை மரங்களில் பாம்புப் படம் வரையுறது. இன்னைக்கு சுமார் என்பது தென்னை மரங்களில் பாம்புப் படம் வரைந்திருக்கிறேன். இதுக்கு ஒன்னும் பெரிய செலவு இல்லைங்க. நான் நல்லா படம் வரைவேன். ஒரு லிட்டர் கறுப்புப் பெயின்ட், ஒரு லிட்டர் வெள்ளை பெயின்ட் வாங்குனேன். நானே பாம்புப் படம் வரைஞ்சேன். குரங்குகளின் அட்டகாசத்தைப் பார்த்துப் பயந்து, மனசு நொந்துபோன நான் இன்னைக்கு நிம்மதியாக இருக்கிறேன். பாம்புப் படத்தைப் பார்த்து குரங்களின் கூட்டம் மரத்துக்கு கீழேயே நிக்குது. இந்தப் படம் வரைந்து ஒரு மாதம் ஆகிறது. ஒரு குரங்கு கூட மரத்து மேல ஏறாமல் கீழே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. நானும் குரங்குகளை விரட்டுவதில்லை . என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம் என்று இருக்கிறேன். இது என்னோட சிறிய முயற்சிதான். போகப் போகத்தான் தெரியும். இப்போ நான் நிம்மதியாக இருக்கிறேன். இந்த முயற்சியை மற்ற விவசாயிகளும் செய்துபார்க்கலாம்.

நன்றி: விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *