தூர்ந்துபோன ஏரியை மீட்டெடுக்கும் பணிக்காக அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்திராமல் உள்ளூர் இளைஞர்களே களமிறங்கி அரசிடம் முறையாக அனுமதி பெற்று தூர் வாரி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் காரை ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு நம்மாழ்வார் இளைஞர் நற்பணி மன்றத்தை தொடங்கினர். கிராமத்தில் மரக்கன்று நடுதல், இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல், பாரம்பரிய விதைகளை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், புதுக்குறிச்சிக்கு மிகப்பெரும் நீராதாரமாக விளங்கிய ஏரி தூர்ந்துபோய் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து காடுபோல காட்சியளிப்பதை மாற்ற, ஏரியை மீட்டெடுக்கும் பணியில் இறங்கினர்.
சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த ஏரியைச் சீரமைக்க வேண்டும் என நம்மாழ்வார் நற்பணி மன்றத்தினர் முடிவெடுத்து களத்தில் இறங்கியபோது அவர்களது முயற்சிக்கு அவ்வளவாக ஆதரவு கிடைக்கவில்லை. அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். நீண்ட அலைச்சலுக்குப் பின்னர் ஊராட்சி நிர்வாகம் மூலம் வருமாறு அரசு அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஊராட்சி நிர்வாகத்தை அணுகி ஏரியைத் தூர் வார நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியதற்கு சாதகமான பதிலில்லை. பலமுறை முயன்றும் பலனில்லாததால் 9 மாதங்களுக்கு முன்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி ஏரியை தூர் வார ஆவண செய்வதாக உறுதியளித்தனர். புதுக்குறிச்சி இளைஞர்கள் ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் தலைவரை மீண்டும் அணுகி ஏரியை தூர் வார வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றச் செய்தனர். அந்த தீர்மானத்தை வைத்துக்கொண்டு, வருவாய், வனம் மற்றும் பொதுப்பணித் துறை என பல்வேறு அரசு அலுவலகங்களுக்குப் படையெடுத்தனர்.
இறுதியில், சீமைக்கருவேல மரங்களை வெட்ட டெண்டர் விடப்பட்டது. புதுக்குறிச்சி இளைஞர்கள், மற்றவர்கள் கேட்ட தொகையை விட அதிக தொகைக்கு ஏலம் எடுத்தனர். அதற்கான தொகையையும், ஆரம்பகட்ட பணிகளுக்கான தொகையையும் ஊர் இளைஞர்கள் திரட்டினர்.
இதுகுறித்து நம்மாழ்வார் நற்பணி மன்றத் தலைவர் தனபால் கூறியபோது, “எங்கள் ஊர் ஏரியைச் சீரமைக்க முயற்சி மேற்கொண்டு, சீமைக் கருவேல மரங்களை வெட்டும் பணிக்கான டெண்டரைப் பெற்றோம். அந்தமரங்களை விறகு, கரியாக ஆக்கி விற்று அதன் மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு ஏரியைத் தூர் வார முடிவு செய்துள்ளோம். ஏரியின் கரைகளைப் பலப்படுத்தி சூழலுக்கு நன்மைபயக்கும் பயனுள்ள மரங்களை வளர்க்க முடிவு செய்துள்ளோம்.
கருவேல மரங்களை ஒருபக்கம் பொக்லைன் மூலம் பெயர்த்து எடுக்க, இன்னொரு பக்கம் ஊர் மக்கள் ஜாதி, மத வேறுபாடு பாராமல் பெரியவர், இளைஞர், சிறுவர் என பாகுபாடின்றி அனைவரும் மண்வெட்டி, கடப்பாறை, அரிவாள் போன்ற உபகரணங்கள் கொண்டு ஏரியை தூர் வாரும் பணியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். புதுக்குறிச்சி ஏரியைத் தூர் வாரும் பணி மிக வேகமாக நடக்கிறது. 30 நாட்களில் ஏரியைத் தூர் வாரிமுடிக்க திட்டமிட்டுள்ளோம். அரசு அனுமதி பெற்று ஏரியிலுள்ள வண்டல் மண்ணை எடுத்து விவசாயத்துக்குப் பயன்படுத்தி வருகின்றனர். வரும் மழைக்காலத்தில் ஏரியில் தண்ணீர் நிரப்பும்வகையில் ஏற்பாடுகள் செய்துவருகிறோம்” என்றார்.
உள்ளூரில் உள்ள நீர்நிலைகளை அரசு அனுமதியுடன் மீட்டெடுக்க ஆர்வமுள்ளவர்களுக்கு புதுக்குறிச்சி இளைஞர்கள் ஒரு நல்ல முன்மாதிரி.
அதற்கான வழிமுறை குறித்து தெரிந்துகொள்ள விரும்புவோர் தனபாலை 09095941127 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்