நூற்றுக்கணக்கில் மரங்களை நட்ட 103 வயது பாட்டி!

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் ஒன்மேன் ஆர்மி. கர்நாடக மாநிலதைச் சேர்ந்த  ‘சாலுமரத’ திம்மக்கா அப்படி என்ன செய்தார்…? தன் வாழ்நாள் முழுக்க மரங்களின் மீதான காதல் குறையாமல் வாழ்பவர்.
தான் வாழும் பகுதியான குமர ஹள்ளியில்,  சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் இரு புறங்களிலும் 384 ஆலங்கன்றுகளை நட்டு, அதை இன்று மரங்களாக்கி ஒரு பூங்காவனமாக அந்த இடத்தை மாற்றிய சாதனை பெண்மணி.
தன் வாழ்நாள் முழுக்க பல்லாயிரக்கணக்கான மரக்கன்றுகளை ஒரே ஆளாக நட்டிருக்கும் இந்த சாதனை பெண்மணி,  இன்று தன்னுடைய 103 வயதிலும் உற்சாகம் குறையாமல், மரங்களை நேசிப்பது, புதிய மரங்களை நடுவது என தொய்வின்றி இயங்கிவருகிறார்.
தான் நட்ட மரங்களை தன் சொந்த குழந்தைகளை போலவே எண்ணி பார்த்துக்கொள்வதோடு,  பல இயற்கை ஆர்வலர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார்.
இத்தனைக்கும், திம்மக்கா பள்ளி படிப்பை கூட தாண்டாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவின் ஒரு குக்கிராமத்தில் எளிமையான குடும்பத்தில் பிறந்த திம்மக்காவுக்கு, 16 வயதில் சிக்கையா என்பவருடன் திருமணமானது. 10 வருடங்கள் கழிந்த பின்னும் குழந்தை பாக்கியம் இல்லை. கோவில், குளங்கள், விரதம் என்று வழக்கமான பெண்ணாக சில வருடங்கள் குழந்தை வரத்திற்காக போராடினார்.
ஒருகட்டத்தில் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துக்கே  தள்ளப்பட்டார். அப்படி ஒரு முயற்சியின்போதுதான் அவர் மனதில் ஒரு எண்ணம் உதித்தது. ‘ உதிரத்தால் உருவாகி வயிற்றில்
சுமப்பது மட்டும்தான் இந்த உலகில் உறவா…எந்தவித பிரதிபலனுமின்றி நமக்கு நம் தேவைகளை நிறைவேற்றுகிற இயற்கை நம் பிள்ளை இல்லையா…?’ என சிந்தித்தார். கடவுளின் படைப்பில் செடி, கொடி, மரம் என அனைத்தும் உயிர்கள்தானே? என்று உணர்ந்த திம்மக்காவுக்கு, அன்று தோன்றியதுதான் மரங்கள் வளர்க்கும் எண்ணம்.
முதல் முயற்சியை தன் கிராமத்திலேயே துவங்கினார். வாழ்ந்த கூதூரில் ஒரே ஒரு ஆலம் கன்று நட்டிருக்கிறார். அது வளர்ந்து மரமாக நின்றபோது திம்மக்கா  அளவில்லா ஆனந்தம் அடைந்தார். அதுதான் பின்னாளில் அவரை மேன் மேலும் மரங்கள் வளர்க்க உத்வேகப்படுத்தியிருக்கிறது. அவரது இந்த முயற்சிக்கு அவரது கணவரிடமிருந்து ஒத்துழைப்பு கிடைத்தது. பல இடங்களில் அலைந்து திரிந்து திம்மாக்காவும் அவரது கணவரும் ஆலமரக் கன்றுகளை தேடிப் பிடித்து கொண்டு வந்து வளர்க்க தொடங்கினர்
இதில் ஆச்சர்யம் என்னவென்றால், திம்மக்கா மரங்கள் நடுவதில் தீவிரமாக இயங்கிய நேரத்தில் அந்த பகுதியில் குடிக்க கூட தண்ணீர் கூட கிடையாது. பஞ்சம் தலைவிரித்தாடிய அக்காலத்தில் கூட பல மைல்கள் நடந்து சென்று, பானைகளில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி மரங்களை வளர்த்திருக்கின்றார். 25  ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்துவிட்ட போதிலும் தளராமல் கணவர் விட்டுச்சென்ற பணிகளையும் சேர்த்து செய்தார்.

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களுடன், வயதான காலத்திலும் விழிப்புணர்வு பணிகளில் தீவிரமாக இயங்கிவரும் திம்மக்காவின்,  தான் சார்ந்த மாநிலம் மட்டுமின்றி மற்ற இடங்களிலும் இயற்கையை நேசிக்கும் தலைமுறைகள் உருவாக இன்றுவரை காரணமாக இருக்கிறார்.

இதுமட்டுமில்லாமல் தன் கிராமத்தில் மழைநீரை சேகரிக்க பிரம்மாண்ட தண்ணீர் தொட்டி ஒன்றை கட்டுவதற்கும் திம்மக்கா உதவியிருக்கிறார். திம்மக்காவின் இந்த மகத்தான சேவைக்கு இந்தியாவின் ‘சிறந்த தேசிய குடிமகன் விருது’ , பிரதமர், குடியரசு தலைவர், முதலமைச்சர் என மத்திய மாநில விருதுகள் கொடுத்து கவுரவித்துள்ளன.
மேலும், அமெரிக்காவின் ஒரு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் கிளை ஒன்றிற்கு,  திம்மக்காவின் பெயர் சூட்டப்பட்டிருப்பது அவரது சாதனைக்கான ஒரு மகுடம். இத்தனை கவுரவங்களையும் விருதுகளையும் பெற்றிருக்கும் திம்மக்கா இன்றும் ஏனோ வறுமையில்தான் வாழ்கிறார். ஆனால் அது குறித்து எந்த ஒரு வருத்தமோ இவரிடம் இல்லை.
“பிள்ளைகள் கூட அவர்களை பெற்றவர்களை மட்டும் தான் பார்த்துக்கொள்வார்கள். ஆனால் ஒரே ஒரு மரத்தை வளர்த்தால் அது ஒரு ஊருக்கே நிழல் கொடுக்கும்” என்று நெகிழும் திம்மக்கா, ” நான் வளர்த்துவிட்டிருக்கும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் (மரங்கள்),  காற்றில் அசைந்தாடி இந்த ஊரையே மகிழ்விக்கும் அழகை பார்ப்பதே என் வாழ்வில் கிட்டிய பேரானந்தம். ஒரு நாள், என்னிடம் போதிய பணம் இருக்கும்போது, என் கிராமத்தில் ஒரு இலவச மருத்துவமனை கட்டுவதே என் கனவு” என்கிறார்.
103 வயதிலும் இயற்கையின் மீதான நேசத்தை குறைத்துக்கொள்ளாத திம்மக்கா பாட்டியை இயற்கையும் நம்முடன் இணைந்து பாராட்டும்!
யூ ஆர் ரியலி கிரேட் பாட்டி!
Courtesy: Yourstory
Courtesy: Yourstory

நன்றி:  விகடன்

இவரின் முகவரி

Salumaradha Thimmakka, Hulikal Post – 561101, Kudur, Magadi Taluka, Karnataka
இவரை பற்றி மேலும் அறிய


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *