பாலையை சோலையாக்கிய ஒற்றை பெண்…!

ரலாற்றில் பல அரிய நிகழ்வுகள் சில தனி மனித முன்னெடுப்புகளால்தான் நடந்தது. தனி மனிதனின் ஆன்மா, ஏதோவொரு நெகிழ்ச்சியான சம்பவத்தால் பாதிக்கப்படும்போது, அவன் தனக்குள் கிளர்ந்தெழுந்து தீர்வைத் தேடுகிறான். அசாத்தியமான அந்தத் தீர்வை சாத்தியமாக்க மக்களை திரட்டுகிறான். இலட்சியம் உன்னதமானதாக இருக்கும்போது, இயற்கையும் ஒத்திசைக்கிறது. இறுதியில் அந்த இலட்சியம் கைகூடுகிறது. வரலாற்றில் இது மட்டுமே நடந்து இருக்கிறது.

அதுபோல் தனி மனித முன்னெடுப்பால் நடந்த சம்பவம்தான் இது. ராஜஸ்தான் என்று பெயரைக் கேட்டவுடன்,  நம் மனதில் எத்தகைய சித்திரம் விரியும். ‘அது மணலும் மணல் சார்ந்த இடம்,  வெப்பம் கக்கும் பாலை பூமி’ என்பது போன்ற சித்திரங்கள் விரியும்தானே. ஆம். அது உண்மையும்கூட. ஆனால், அந்த பாலை பூமி ஒரு பெண்ணின் முன்னெடுப்பால் சோலையாகி இருக்கிறது. அந்த மாநிலத்தில் இருக்கும் நூறு கிராமங்கள், வளம் கொழிக்கும் பூமியாக மாறி இருக்கிறது.

அம்லா ரூயா,  உத்தரபிரதேசத்தில் பிறந்து மும்பையில் இயங்கிக் கொண்டிருந்த செயற்பாட்டாளர். ஒருநாள் காலையில் செய்தித்தாளை புரட்டிக்கொண்டிருக்கும் போது, ‘ராஜஸ்தானில் கடும் வறட்சி. மக்கள் குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். மக்களின் தாகத்தைப் போக்க அரசாங்கம் லாரியில் தண்ணீர் வழங்குகிறது. ஆனால், அது போதுமானதாக இல்லை…’  என்ற செய்தியைப் படிக்கிறார்.  அந்தச் செய்தியை அவரால் சுலபமாக கடந்து செல்ல முடியவில்லை. உடனே ராஜஸ்தான் பயணம் ஆகிறார்.

 

லாரி தண்ணீர் தீர்வல்ல:

ராஜஸ்தானில் அவர் முன் வைத்த கருத்தைக் கேட்டு மக்கள் கோபமடைகிறார்கள். அம்லாவுக்கு எதிராக திரும்புகிறார்கள். ஆம், அவர் சொன்னது இதுதான், “முதலில் மக்களுக்கு லாரியில் தண்ணீர் தருவதை நிறுத்துங்கள்”. லாரித் தண்ணீர் மட்டும்தான் ஒரே தீர்வு என நம்பிக்கொண்டிருந்த மக்கள், இதைக் கேட்டதும் கோபமடைவது இயல்பானதுதானே.

ஆனால், அம்லா அது தீர்வல்ல என்பதை ஆழமாக நம்பினார்.  “இது இருகாலமும் நிரந்தரத் தீர்வல்ல, ஒரு இடத்திற்குத் தண்ணீர் தர இன்னொரு இடத்திலிருந்து நீரை சுரண்டுவது எப்படித் தீர்வாகும்?  நாளை அந்த இடத்தையும் வறட்சி கவ்வும். பிறகு அந்த இடத்திற்கு தண்ணீர் கொடுக்க மற்றொரு இடம்… அடுத்த நாள் இன்னொரு இடம். இது முடிவிலி. ஒருநாள் மொத்த பூமியும் வறட்சியின் கைகளுக்குச் செல்லும்போது, வேற்று கிரகத்திலிருந்தா தண்ணீரை  இறக்குமதி செய்ய முடியும்…?” என்றார்.
நிரந்தரத் தீர்வை நோக்கிய பயணம்

மக்கள் சிந்திக்கத் துவங்கினர். தீர்வைத் தேடத் துவங்கினர்.  அம்லாவே ஒரு தீர்வை முன்வைத்தார். நிரந்தரத் தீர்வு என்பது, “அந்தந்தப் பகுதி நீர்வளத்தை பெருக்குவதுதான். நாம் மலைகள் ஓரம் அதிகமான தடுப்பு அணை கட்டுவோம். மழை காலத்தின் மொத்த மழையையும் நமக்கானதாய் செய்வோம்..” என்றார்.

மக்கள் முதலில் இதை நம்ப மறுத்தாலும், அம்லா மீது  இருந்த நம்பிக்கையால் சம்மதிக்கிறார்கள்.

தடுப்பணைகளுக்கும் அதிக சிமென்ட், செங்கற்கள் பயன்படுத்தாமல், நம் மரபான  முறையில் கட்டினார். அவர் கட்டியதெல்லாம், அங்கு என்ன பொருள் கிடைக்கிறதோ அதைக்கொண்டு கட்டிய மண் தடுப்பணைகள். அது மட்டும் அல்ல, தடுப்பணைகள் கட்டுவதில் மக்களின் பங்களிப்பு வேண்டும் என்கிறார்.

“பணமோ, உழைப்போ… மக்களின் பங்களிப்பு கண்டிப்பாக வேண்டும். மக்களின் பங்களிப்பு இருக்கும்போது தான், மக்கள் அதைக் கவனமாகப் பார்த்துக்கொள்வார்கள். அந்த அணை குறித்த பெருமிதம் இருக்கும்…” என்கிறார் அம்லா.

ஆண்டு வருமானம் ரூபாய் 300 கோடி

நாம் ஏற்கெனவே பார்த்தோம் இல்லையா, மக்களின் நோக்கம்  உன்னதமானதாக இருக்கும்போது, இயற்கையும் இணையும் என்று. அவர்களுக்கு இயற்கை இசைந்தது, அந்தப் பகுதியில் மழை பெய்தது. அணைகள் நிரம்பின.

இன்று அவரது முயற்சியால், நூறு கிராமங்களில் 200 தடுப்பணைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. அங்கு  வசிக்கும் இரண்டு இலட்சம் விவசாயிகளின் ஆண்டு வருமானம் 300 கோடி ரூபாய்.

டவுசா மாவட்டத்தில் இருக்கும் பத்தாயிரம் பேர் வசிக்கும்,  மந்தாவார் என்னும் சிறு கிராமத்தில் உள்ள விவசாயிகளின் ஆண்டு வருமானம் மட்டும் ரூபாய் 12 கோடி ரூபாய்.

இதையெல்லாம் தாண்டி, அந்தப் பகுதியின் நிலத்தடி நீர் மேம்பட்டுள்ளது. உள்ளூரிலேயே வேலை கிடைப்பதால், மக்கள் யாரும் இடம் பெயர்வதில்லை.

அம்லா சொல்கிறார், “இந்த மாற்றம் சாதாரணமானது இல்லை. மக்களின் அர்ப்பணிப்பு மட்டுமே இந்த சாதனைக்குக் காரணம். சில சமயம் அரசின் தலையீடுகள் எங்கள் வேலையை மந்தமாக்கி இருக்கிறது. ஆனால், என்றுமே மக்கள் துவளவில்லை. அவர்கள் தங்கள் சொந்த வேலையாகக் கருதி இதனை சாத்தியமாக்கி இருக்கின்றனர்”

இப்போது இவர் சத்தீஸ்கர் மாநிலத்தில்,  நீர்நிலைகளை மேம்படுத்த மக்களுடன் கரம் கோர்த்துள்ளார்.

உண்மையில்… மக்களால், மக்களுக்காக என்பது  இது தான். தமிழகம் பயணிக்க வேண்டிய திசைவழியும் இதுதான்.  தீர்வுகள் நிரந்தரமானதாக இருக்க வேண்டும், தற்காலிகத் தீர்வில் சமாதானம் அடைவது தன்னைத் தானே மாய்த்துக்கொள்வதற்கு சமம்.

நன்றி: ஆனந்த விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “பாலையை சோலையாக்கிய ஒற்றை பெண்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *