ஈரோடு மாவட்டம், பவானி வட்டம் செரையாம் பாளையம் கிராமத்தில் பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று உள்ளது. அந்த ஊரில் மிகவும் பிரபலமான இந்த ஆலமரத்தில், ஆண்டுதோறும் வரும் ஆடி மாதம் முழுவதும் ஊர்மக்கள் திரண்டு பொங்கல் வைத்து மரவழிபாடு செய்வது வழக்கம். ஆனால், திடீர் என்று வந்தது அந்த ஆலமரத்துக்கு ஒரு சோதனை. இந்த ஊர் வழியாக கொண்டுசெல்லப்படும் உயர் அழுத்த மின்பாதை கோபுரம் (டவர் லைன்) அமைக்க , இந்த ஆலமரம் இடைஞ்சலாக இருப்பதாக கூறியது மின்சார வாரியம். அத்துடன் அதை அடியோடுப் பிடுங்கி எரிய பொக்லைன் இயந்திரத்தோடு கிளம்பி வர, ஊர்மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால், விழித்துக்கொண்ட கிராம மக்கள் ஆலமரத்தைக்காப்பாற்ற நூதன முறையில் போராடத் துவங்கினர். செரையாம் பாளையம் கிராமத்தைச்சேர்ந்த குழந்தைகள்,பெண்கள், ஆண்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி, அருகில் ஓடும் பவானி ஆற்று நீரில் இறங்கி மூழ்கி எழும் தொடர் போராட்டத்தை மேற்கொண்டனர்.
இந்த நூதனபோராட்டத்தை முன்னின்று நடத்திய,சுற்றுச்சூழல் போராளி முகிலன் கூறியதாவது, ஆலமரத்தை பிடுங்கி எரிய வந்த பொக்லைன் எந்திரத்தை மக்கள் விரட்டி அடித்தனர். அவர்களின் தீவிர போராட்டத்தில் நியாயம் இருப்பதை உணர்ந்த மின்சார வாரியம், மின்பாதை வழித்தடத்தை மாற்றி அமைப்பதாக , உறுதி கூறியதை அடுத்து ஆற்று நீரில் இறங்கிப்போராடும் நூதன போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த மகிழ்ச்சியை கொண்டாட கிராம மக்கள் ஒன்று திரண்டு , ஆலமர நிழலில் பொங்கல் வைத்து மரத்தை வணங்கி மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.மேலும் வேறு வழித்தடங்கள் இருந்தும் ஒப்பந்தக்காரர்களின் லாபம் கருதி பழைமை வாய்ந்த நாட்டு மரங்களை மனிதாபிமானம் இல்லாமல் மின்சார வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதை தட்டிக்கேட்கும் மக்களை காவல் துறையை விட்டு தாக்குதல் நடத்தி, வழக்குப்போடும் அத்து மீறலும் நடக்கிறது. இந்தப் போக்கை மின்வாரியம் மாற்றிக்கொள்ளவேண்டும்’ என்றார்.
நன்றி: விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்