நாமகிரிப்பேட்டை பகுதியில், மரத்தில் வாழும் வவ்வால் கூட்டத்துக்காக, ஒரு கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல், தீபாவளி கொண்டாடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே முள்ளுக்குறிச்சியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மயானத்தில், மூன்று அரச மரங்கள் வளர்ந்துள்ளன; அதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வவ்வால்கள் வசித்து வருகின்றன.

கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், பெரிய அரச மரத்தில் வசித்த இந்த வவ்வால்கள், அந்த மரம் விழுந்ததும், சுடுகாட்டில் உள்ள மூன்று அரச மரங்களில் வசிக்கின்றன. இரவு நேரங்களில், வெளியே இரை தேட சென்றுவிட்டு, அதிகாலையில் வந்து தங்கும் வவ்வால்களை, யாரும் துன்புறுத்துவது இல்லை. துவக்கத்தில் வவ்வால்களை வேட்டையாட வந்த கும்பலை, இப்பகுதி யினர் துரத்திவிட்டனர். அதனால், அவற்றை யாரும் வேட்டையாடுவதில்லை. கிராம மக்கள், வவ்வாலுக்கு எவ்வித தொந்தரவும் கொடுப்பதில்லை.
சுடுகாட்டு பகுதியில் மேளம் அடிப்பதையும், பட்டாசு வெடிப்பதையும் நிறுத்திவிட்டனர். இதனால், வவ்வால்கள் மரங்களில் எவ்வித தொந்தரவும் இல்லாமல் வசிக்கின்றன. இதற்கிடையே, கடந்த சில ஆண்டுகளாக, தீபாவளி மற்றும் விழாக்களில் கூட, பட்டாசு வெடிக்காமல், கிராமத்தினர் கொண்டாடி வருகின்றனர்.
நன்றி: தினமலர்
இந்த வவ்வால்கள் பழந்தின்னி வவ்வால்கள் எனப்படும் வகையை சார்ந்தவை. தன்னுடைய இறக்கையை பிரித்தால் கிட்டத்தட்ட 2 அடி இருக்கும்!
பெரிய உருவத்தை உடைய இவை ஊருக்கு வெளியில் உள்ள மரத்தில் தங்கி இரவில் காட்டு மரங்களில் உள்ள பழங்களை உண்ணும். பெரிய பழைய மரங்கள் ரோடு அகல படுத்துவதிலும் நகரமயம் காரணமாக அழிந்து வருவதால் இந்த வவ்வால்கள் அழிந்து வருகின்றன.
நாமகிரிப்பேட்டை கிராம மக்கள் தன்னுடைய தீபாவளியை குறைத்து கொண்டு இவற்றை வாழ வைப்பது படிக்க பெருமையாக இருக்கிறது! வாழ்க இவர்கள்!!
இன்னொன்று உங்களுக்கு தெரியுமா? வவ்வால்கள் பறவைகளே இல்லை. இவை நம்மை போன்று குட்டி போட்டு பால் தரும் பாலூட்டிகள்!! பறக்கும் பாலூட்டிகள் மிக குறைவே! வவ்வால்கள் அவற்றில் ஒன்று
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்