15000 புறாக்களுக்கு தினமும் உணவு கொடுக்கும் வியக்கும் மனிதர்!

 

காலேஜ், ஆஃபீஸ் போறதுக்கு வைக்கிற அலாரமே பாதி நேரம் வொர்க் அவுட் ஆகுறதில்லை. தினமும் அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து பீச்சுக்கு போய் புறாவுக்கு உணவு கொடுக்கிறாங்கனு சொன்னா நம்ப முடியுதா? “நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்” வகை வாட்ஸப் வதந்தி அல்ல இது. ஒரு ‘ரியல்’ மகிழ்ச்சி கதை.

சென்னை மெரினா கடற்கரை…அதிகாலை  ஐந்து மணி. விஜய் குமார் ஜெயினும், அவரது நண்பர்களும் கிட்டத்தட்ட 15000 புறாக்களுக்கு உணவு படைக்கிறார்கள். தினமும் பதினைந்து ஆயிரம் ரூபாய் முதல் இருபது ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து புறாக்களுக்கு பிரேக்ஃபாஸ்ட் கொடுக்கிறது “மெரினா பீச் பிஜியன் பீடிங் சென்டர்” குழு. ’புறாவுக்கே ஃபுட்டா’ என்ற கேள்வியுடன் அவர்களை சந்தித்தோம்.

“நாங்க ராஜஸ்தான். அங்க புறாக்களுக்கு உணவு கொடுப்பது எங்கள் அன்றாட வேலைல ஒண்ணு. 2008ல மெரினாக்கு வந்தப்ப சில புறாக்கள பாத்தோம். அப்ப வெள்ளை சோளம், மக்கா சோளம் வாங்கி புறாக்கள் நிறைய இருந்த இடத்தில் பரப்பி வைத்தோம். கொஞ்ச நேரத்துல புறாக்கூட்டமே சூழ்ந்து சாப்பிட்டதை பார்த்தோம். அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு. அன்று தொடங்கி இப்ப வரைக்கும் விடாம காலைல இதை செய்றோம்.ஒருநாள் எங்களால வர முடியலன்னா நண்பர்கள் பாத்துப்பாங்க. ஆனா, அந்த நாள் எங்களுக்கு முழுமையான நாளாவே இருக்காது. எங்கள விட எங்க வீட்டு குழந்தைகளும்” என்கிறார் விஜய் குமார் ஜெயின்.

2008ல் தினம் ஐநூறு ரூபாய் என்றிருந்த செலவு, புறாக்களின் எண்ணிக்கை கூட கூட தினம் 15000 ஆகிவிட்டது. இதை சமாளிக்க ‘புறாக்களுக்கு உணவளிக்க’ என ஒரு பெட்டியில் எழுதி மெரீனாவில் வைத்திருக்கிறார்கள். இவர்கள் பணியை பார்த்து பலர் பணம் தந்து வருகிறார்கள்.

 

“தினமும் காலை நான்கு மணி முதல் ஐந்து மணி வரை, எழுநூறு கிலோ மக்காச் சோளம், வெள்ளைச் சோளம், உப்புக் கடலை, நூறு கிலோ பச்சை பயிறு ஆகியவற்றை கலந்து மணலில் பரப்பி வைத்து விடுவோம். ஐந்து மணிக்கு வரும் புறாக்கள் எட்டு மணி வரை உணவை உட்கொள்வார்கள். புறாக்கள் சுத்த சைவம். சூரியன் உதித்த பிறகு தான்  உண்பார்கள். உணவை பரப்புவதற்கு இடத்தை சுத்தம் செய்வோம். கடவுளுக்கு உணவு படைப்பது போல் தூய்மை காப்போம்”. புறாக்களை ”அவர்கள், இவர்கள்” என மரியாதையுடன் சொல்கிறார் விஜய் குமார்.

புறாக்களோடு நிறுத்திக் கொள்ளாமல் காகம், நாய்களுக்கும் உணவு படைகிறார்கள். வாக்கிங் செல்பவர்களுக்கு தண்ணீரும் இங்கேயே கிடைக்கிறது.

”பணம் புகழ் என்று சம்பாதித்து சமூகத்தில் நல்ல நிலைமையில் வாழ்ந்தாலும், மனதிற்கு நிறைவு கிடைப்பது இது போன்ற நல்ல காரியங்களில் ஈடுபடும் போதுதான். என் உயிர் இருக்கும் வரை இதை தொடர்வேன்” என்று நெகிழ்ச்சியாக பேசுகிறார் விஜய் குமார் ஜெயின்.

நாம் புகைப்படம் எடுக்க அருகில் சென்ற போது பறந்த புறாக்கள், அவர்கள் போனால் அசையாமல் இருக்கின்றன. புறாக்களின் சொந்தக்கரர்களாகவே ஆகிவிட்டது இந்தக் குழு.

– சக்கர ராஜன். ம (மாணவ பத்திரிகையாளர்); படங்கள்: எம்.வஸீம் இஸ்மாயில் (மாணவ பத்திரிகையாளர்) 

நன்றி: விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *