‘அமேசான் காடுகளில் மட்டுமே வளரும் அரியவகை தாவரங்கள்’ என்ற வார்த்தைகளை விளம்பரங்களில் அடிக்கடி கேட்டிருப்போம். அந்தக் காடுகளில் மட்டுமே விளையும் மரங்கள் பலவற்றை தனது தோட்டத்தில் வளர்த்து வருகிறார், ஹரி முரளிதரன். நம் நாட்டில் காணக்கிடைக்காத, சாகுபடி செய்யப்படாத அரியவகை பழ மரங்கள் பலவும், கேரளாவிலுள்ள இவரின் தோட்டத்தில் செழிப்பாய் வளர்கின்றன. பச்சைப்பசேலென காட்சியளிக்கும் தோட்டத்தில், பல வண்ணங்களில் பழங்கள் காய்த்துக் குலுங்குகின்றன.
காடு போல காட்சியளிக்கும் தனது தோட்டத்தை, கடந்த 10 ஆண்டுகளாகக் கட்டமைத்துவருகிறார் ஹரி. தோட்டத்தில் விளையும் 800 வகையான பழ மரங்களில், 700 வகை மரங்கள் வெளிநாட்டில் மட்டுமே விளைபவை. சோதனை முறையில் தனது தோட்டத்தில் அரியவகை பழ மரங்களை வளர்த்து, கேரளாவில் பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். விஞ்ஞானியான முனைவர் ஹரி முரளீதரன், தான் இயற்கை விவசாயியாக மாறிய கதையை மகிழ்ச்சியுடன் பகிர்கிறார்.
“என் பூர்வீகம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை. இங்கதான் ஸ்கூல் படிப்பை முடிச்சேன். கோயம்புத்தூர்ல எம்.எஸ்ஸி வரை படிச்சுட்டு, காரைக்குடியில பிஹெச்.டி முடிச்சேன். பெங்களூர், சிங்கப்பூர், சென்னைனு பல இடங்கள்ல 11 வருஷம் ஆராய்ச்சியாளராக வேலை செஞ்சேன். 2010-ம் வருஷம் என் அம்மாவுக்கு உடல்நிலைப் பாதிப்பு ஏற்படவே, சென்னையிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பினேன். சென்னையில் இருக்கும்போதே, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காகப் பாடங்களைப் படிக்க ஏதுவாக எளிய முறையிலான அட்டவணை ஒண்ணு தயாரிச்சேன். அந்த வேலைகளைச் சொந்த ஊருக்குத் திரும்பிய பிறகு அதிகப்படுத்தினேன். அதுக்காக, ஒருமுறை பழங்கள் பற்றிய தகவல்களைச் சேகரிச்சேன்.
நம் நாட்டில் விளையும், நாம பயன்படுத்தும் பழங்களுடன், நமக்குத் தெரியாத ஏராளமான பழங்கள் பத்தின தகவல்களும் கிடைச்சுச்சு. அதில் பெரும்பாலான பழங்கள் வெளிநாட்டில் மட்டும்தான் விளையும்னு பலரும் சொன்னாங்க. ‘அதையெல்லாம் நம்ம நாட்டில் ஏன் வளர்க்க முடியாது?’ன்னு எனக்குள் கேள்வி எழுந்துச்சு…” என்கிறார் முரளிதரன்.
“விதைகளைச் சேகரிக்கத் தொடங்கினேன். வெளிநாட்டு விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் பலர்கிட்டயும் பேசினேன். அவங்க மூலமா விதைகளைச் சேகரிச்சேன். இரவு பகலா ரொம்பவே சிரமப்பட்டேன். 50 வகையான விதைகள் கிடைச்சதும், அதை எங்க தோட்டத்தில் விதைச்சு வளர்க்க ஆரம்பிச்சேன். அதுவரை எங்க சொந்த விவசாய நிலத்துல வேலையாட்கள் மூலமாதான் விவசாயம் நடந்துச்சு. இந்த நிலையில் நானும் விவசாய வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்.
எங்க வீட்டைச் சுத்தி சற்று இடைவெளிவிட்டு, மூணு பகுதியில விளைநிலம் இருக்கு. அதுல 60 சென்ட் நிலத்துல மட்டும் சோதனை முறையில் பல்வேறு பழவகை மரங்களையும் வளர்த்தேன். அதில் சில செடிகள் வளரலை. அதிகபட்சமா மூணு முறை நட்டுவெச்சதுக்குப் பிறகும் ஒரு விதையோ, செடியோ வளரலைனா, அந்தச் செடியை வளர்க்கும் எண்ணத்தை கைவிட்டுடுவேன். என் ஊரின் பருவநிலையைத் தாங்கி நல்லா வளரும் செடியை மட்டும்தான் தொடர்ந்து வளர்க்கிறேன். இப்படியே கடந்த 10 வருஷத்துல வெளிநாட்டில் மட்டுமே விளையும் 700 வகை மரங்களை என் தோட்டத்தில் வளர்க்கிறேன்” என்னும் ஹரி, தனது தோட்டத்தில் விளையும் சில பழங்களின் சுவாரஸ்யமான தகவல்களைக் கூறினார்.
“சர்க்கரையைவிடப் பல மடங்கு அதிக இனிப்புச் சுவைகொண்ட ஃப்ளாவஸ் (flavus) என்ற பழம், மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள கானா நாட்டின் அடர்ந்த காட்டுப்பகுதியில் மட்டுமே வளருது. அதேபோல, கதம்ஃபி (katemfe) பழமும் கானா நாட்டில்தான் விளையுது. இந்த இரண்டு பழங்களையும் நேரடியா சாப்பிட முடியாது. மருத்துவத் தேவைகளுக்கும், சோதனைப் பயன்பாடுகளுக்கும்தான் உதவும். இவை இரண்டும் என் தோட்டத்தில் விளையுது. அதில் ஃப்ளாவஸ்ல மட்டும் இன்னும் பழங்கள் வரலை. இனிப்புச் சுவைகொண்ட அற்புதப் பழமும் (miracle fruit), என் தோட்டத்தில் விளையுது. இந்தப் பழத்தைச் சாப்பிட்டுவிட்டு, புளிப்புச் சுவைகொண்ட உணவுப் பொருள் எதைச் சாப்பிட்டாலும், இனிப்புச் சுவைதான் தெரியும்.
ஐஸ் க்ரீம் பீன் (Ice cream bean) பழத்தின் சதைப் பகுதி ஐஸ் க்ரீம் சுவையில் இருக்கும். ஜப்பானில் புகழ்பெற்ற சிவப்பு மாம்பழம் எனப்படும் (Egg of the sun mango) என்ற அரியவகை மாம்பழம் ஒன்றின் விலை 75,000 ரூபாய்வரை ஏலம் எடுக்கப்படுது. அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும் அந்தப் பழ மரமும் என்னிடம் இருக்கு. முழுக்கவே வெள்ளை நிறத்திலுள்ள மாம்பழ மரத்தையும் (White Mango) வளர்க்கிறேன். பிரேசில் நாட்டின் Jaboticaba grape fruit என்ற அரியவகை திராட்சை மரம் என் தோட்டத்தில் நல்லாவே வளருது. இதய நோய் பிரச்னைகளுக்குப் பயன்தரும் Inca peanut fruit என்கிட்ட இருக்கு. தவிர, அமேசான் காடுகள்ல இருக்கிற 30 வகையான மரங்களையும் வளர்க்கிறேன். தவிர, ரொலினியா (Rollinia), ஸ்பானிஷ் லைம் (Spanish lime), ரம்புட்டான் (Rambutan) உட்பட நிறைய மரங்கள் எங்க தட்பவெப்பத்துக்கு நல்லாவே வளருது” என்கிறார்.
‘வளர்க்கும் மரங்களில் பழங்கள் கிடைக்கவில்லை எனில்…’ என்ற நம் கேள்விக்குப் பதிலளிக்கும் முரளி, “என் வீட்டைச் சுத்தி தூய்மையான ஆக்ஸிஜனை என் மரங்கள் கொடுக்குது. குளுமையான சூழல் நிலவுது. இதைவிடப் பெரிய பயன் உண்டோ? எனவே, பழங்கள் கிடைக்காட்டியும் வருத்தப்பட மாட்டேன். என் தோட்டத்தில் விளையும் பெரும்பாலான மரங்கள் இந்தியாவில் வேறெங்கும் கிடையாது. நான் சோதனை முறையில் வளர்த்துள்ள மரங்கள் பலவும் நல்லா விளைஞ்சு, இப்போ பலன்கொடுக்க ஆரம்பிச்சுடுச்சு.
அதை, கிளிகள், குருவிகள் உட்பட பல்வகையான பறவைகள் சாப்பிட்டதுபோக, வீட்டுத் தேவைக்குப் போக, அக்கம்பக்கத்தினர், நண்பர்களுக்குக் கொடுக்கிறேன். அரியவகை பழங்களை மட்டும் விற்பனை செய்றதில்லை. சப்போட்டா, பலா, மா, அத்தி, கொய்யா, எலுமிச்சை, ஆரஞ்சு, வாழைனு நம்ம நாட்டில் விளையும் 80 வகையான பழ மரங்களையும் வளர்க்கிறேன். அரியவகை மரங்கள் வளரும் 60 சென்ட் நிலம் தவிர, பக்கத்திலேயே இருக்கிற ரெண்டு நிலத்தின் 50 சென்ட் நிலத்துலயும் மரங்களை வளர்க்கறேன். இதில் 500 வகை மரங்கள்தாம் நிலத்தில் வளர்கின்றன. இடப் பற்றாக்குறையால் 300 வகை மரங்களையும், செடிகளையும் மண் தொட்டியில் வளர்க்கறேன்.
முன்பு நிறைய மாடுகள் வளர்த்தோம். அந்தக் கொட்டகையின் மொட்டைமாடியில் 2,000 சதுர அடியில் காய்கறிச் செடிகளை வளர்க்கிறோம். அந்த மாடித்தோட்ட விவசாயத்தை அப்பா கவனிச்சுக்கிறார். வீட்டுக்குத் தேவையான பெரும்பாலான காய்கறிகள், பழங்களை வீட்டிலேயே விளைவிச்சுக்கிறோம். அரியவகை மரங்கள் நம்ம மண்ணுலயும் வளரும்னு நிரூபிக்கும் என் முயற்சியில வெற்றி பெற்றிருக்கேன். எனக்கு விதைகள், செடிகள் கொடுத்து உதவிய வெளிநாடுகளைச் சேர்ந்த விவசாயிகள் பலருக்கும் வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டிருப்பேன். சினிமா, அரசியல், ஐ.ஏ.எஸ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலரும் எனக்கு போன் பண்ணி, நான் வளர்க்கும் செடிகள் பத்தி தகவல் கேட்பாங்க.
ஒருநாள் பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் சாரின் அழைப்பு எனக்கு இன்ப அதிர்ச்சியா இருந்துச்சு. ‘நாம என்ன செயல் செஞ்சாலும், நம்ம குருவுக்கான மரியாதையை மட்டும் தவறாமல் கொடுக்கணும். ஒரு செடியை மண்ணில் வெச்சாலும், அது மண்ணில் வளர்ந்து பலன் கொடுக்க குருவின் அருள் இருக்கணும். அப்படித்தான் உங்க தோட்டத்துல நிறைய அரியவகை செடிகளும் விளைஞ்சு, பலன்கொடுப்பதாக நினைக்கறேன். உங்க வீட்டுக்குப் பக்கம் வரும்போது நிச்சயம் உங்களை வந்து சந்திக்கிறேன்’னு சொன்னார்” என்று மகிழ்ச்சியுடன் கூறும் ஹரி, வருமான வாய்ப்புகள் குறித்துப் பேசினார்.
“என் தோட்டத்தில் வளரும் மரங்களிலிருந்து பதியம் செஞ்சு புதிய செடிகளை உருவாக்கறேன். ‘க்ரீன் கிராமா’ங்கிற பெயர்ல என் தோட்ட விளைபொருள்கள், செடிகளை விற்பனை செய்றேன். அரியவகை பழ மரங்களின் தாய் மரங்கள் என்னிடம் இருப்பதால், இதன் மூலம் புதிய செடிகளை உருவாக்க முடியும். இதனால, வருங்காலத்தில் என்னிடமுள்ள மரங்களைப் பரவலா பலதரப்பட்ட மக்களும் வளர்த்துப் பயனடைவாங்க. இதுவரை 80 லட்சம் ரூபாய்வரை செலவு செய்திருக்கேன். 30 லட்சம் ரூபாய்வரை கிடைச்சிருக்கு. என் தோட்ட மரங்கள் வளர வளர நல்ல வருமான வாய்ப்புகள் பெருகும்.
இந்த அளவு மரங்கள் சமதளப் பரப்பளவுள்ள நிலத்தில் விளைவது சாத்தியமில்லை. மலைப்பகுதியில் இருக்கிற மாதிரி, படிக்கட்டு வடிவிலான அமைப்பில் என் தோட்டம் இருப்பது அதிகளவிலான மரங்களை வளர்க்க ஏதுவாக இருக்கு. தோட்டத்துல இருக்கும் குளத்தில் எப்போதும் நீர் இருக்கும். அதனால தண்ணிக்குப் பிரச்னையில்லை. மாட்டுச்சாணம் மூலம் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் உட்பட பல்வேறு இடுபொருள்களை தயாரிச்சு, முழுக்கவே இயற்கை முறையில்தான் விவசாயம் செய்றேன்.
18 புதிய டெக்னாலஜி சார்ந்த கண்டுபிடிப்புகளில் வேலை செய்திருக்கேன். ஏராளமான அறிவியல் ஆய்வுகளையும் சமர்ப்பிச்சிருக்கேன். ரெண்டு புத்தகங்கள் எழுதியிருக்கேன். அப்போதெல்லாம் என்னைப் பத்தி யாருக்கும் தெரியாது. ஆனா, அரியவகை மரங்களை வளர்க்க ஆரம்பிச்சதுமே, என்னைப் பத்தி பலருக்கும் தெரிய ஆரம்பிச்சுடுச்சு.
என் அனுபவத்தில் நான் சொல்வது, பெரும்பாலான விவசாயிகள் தொடர்ந்து ஒரே விதமான பயிர்களைத்தான் சாகுபடி செய்றாங்க. சோதனை முறையில்கூட புதுமையான பயிர்களை விளைவிக்கிறதில்லை. புதுசா சில பயிர்களை விளைவிச்சு, அனுபவ ரீதியில் வெற்றி கிடைச்சா, அதைத் தொடர்ந்து பயிரிட்டு லாபம் ஈட்டலாம். முயற்சிகள் தவறினாலும், ஒருபோதும் முயற்சி செய்ய தவறக்கூடாது” என்கிறார் புன்னகையுடன்.
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்