அவரையில் இருவகைகள் உள்ளன. குத்து அவரை ரகங்களை ஆண்டு முழுவதும் (120 நாள்கள்) பயிரிடலாம். பந்தல் அவரை ரகத்தை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் (240 நாட்கள்) சாகுபடி செய்யலாம்.நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் அவரை சாகுபடிக்கு ஏற்றது.
குத்து அவரை நடவு செய்ய ஒரு ஹெக்டேருக்கு 25 கிலோ விதையும், பந்தல் அவரை நடவு செய்ய 5 கிலோ விதையும் போதுமானது. குத்து அவரையை 1 அடிக்கு 2 அடி வீதமும், பந்தல் அவரையை 2 மீ 3 மீ இடைவெளியிலும் நடவு செய்ய வேண்டும். நட்டவுடன் நீர் பாய்ச்சுவது அவசியம்.
நிலம் தயாரிப்பு மற்றும் உர அளவு
குத்து அவரை: நிலத்தை நன்கு உழுது தயார் செய்து, ஹெக்டேருக்கு 12.5 டன் தொழு உரத்துடன், யூரியா 54 கிலோவும், சூப்பர் பாஸ்பேட் 83 கிலோவும் மேலுரமாக இட வேண்டும். மானாவாரி நிலத்துக்கு ஹெக்டேருக்கு 12.5 டன் தொழுஉரத்துடன் 27 கிலோ யூரியாவையும், 42 கிலோ சூப்பர் பாஸ்பேட்டையும் மேலுரமாக இட வேண்டும்.
பந்தல் அவரை: ஹெக்டேருக்கு 20 டன் தொழுவுரத்துடன் யூரியா 13 கிலோவும், சூப்பர் பாஸ்பேட் 20 கிலோவும், பொட்டாஷ் 75 கிலோவும் மேலுரமாக இடவேண்டும். விதை நேர்த்திஒரு ஹெக்டேருக்கு தேவையான விதையுடன் 600 கிராம் ரைசோபியம் நுண்ணுயிர் உரத்தை ஆறிய சோற்றுக் கஞ்சியுடன் கலந்து நிழலில் 15-30 நிமிடம் உலர்த்தி பின் விதைக்க வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு
காய்த் துளைப்பான் பூச்சிநோய் அவரையை அதிகமாக தாக்கும். இந்நோயால் விவசாயிகளுக்கு அதிக மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நோயை கட்டுப்படுத்த கார்பரில் 50 டபிள்யூபி மருந்தை 1 லிட்டர் நீரில் 2 கிராம் வீதம் கலந்து 15 நாள்கள் இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும் அல்லது எண்டோசல்பான் 35 இசி மருந்தை 1 லிட்டர் நீரில் 2 மி.லி. என்ற அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
அவரை பயிரை தாக்கும் மற்றொரு வகையான நோய் சாறு உறுஞ்சும் பூச்சி நோய். இந்நோயை மாலத்தியான் 50 இசி மருந்தை 1 லிட்டர் நீரில் 1 மி.லி. வீதம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த கார்பென்டசிம் மருந்தை லிட்டருக்கு 0.5 கிராம் வீதம் தெளித்து கட்டுப்படுத்தலாம். பந்தல் அவரை ஒரு ஹெக்டேருக்கு 12 முதல் 13 டன் வரையிலும், குத்து அவரை 8 முதல் 9 டன் வரையிலும் மகசூல் பெறலாம்.
இந்த தகவல்களை டாக்டர் பெருமாள் வேளாண்மை அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் டி.சுந்தர்ராஜ் வெளியிட்டு உள்ளார். மேலும் விவரங்களுக்கு 09443888644 செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
2 thoughts on “அவரை பயிர் இடுவது எப்படி?”