அதிர்ச்சி! பழங்களை பழுக்க வைக்க சீனாவில் இருந்து வரும், புது ரசாயனம்!

கோயம்பேடு மார்க்கெட்டில், பழங்களை செயற்கையாக பழுக்க வைக்க பயன்படுத்தும், ‘கால்சியம் கார்பைடு’ ரசாயன கல்லை, அதிகாரிகள் பறிமுதல் செய்து வரும் நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும், ‘எத்திலின்’ பொடியை, வியாபாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதை, உடனடியாக தடுத்து, மக்களின் உயிரை காக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஆப்பிள், ஆரஞ்ச், திராட்டை, கிவி போன்ற பழங்கள் விற்பனைக்கு வருகின்றன.

மாம்பழ சீசன்:

அதே போல், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாம்பழம், வாழைப்பழம், திராட்சை, சாத்துக்குடி, பப்பாளி உள்ளிட்ட பல வகை பழங்களும் விற்பனைக்கு வருகின்றன. கோடைக்காலம் என்பதால், நீர்ச்சத்து அதிகம் உள்ள சாத்துக்குடி, திராட்சை, ஆரஞ்சு, மாம்பழம் போன்ற பழங்கள் அதிக அளவில் விற்பனையாகும். ஏப்ரலில் துவங்கும் மாம்பழ சீசன், ஜூலை வரை நீடிக்கும்.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், தர்மபுரி, திண்டுக்கல், வேலுார் உள்ளிட்ட, பல மாவட்டங்களில், வர்த்தக ரீதியாக மாம்பழ உற்பத்தி நடக்கிறது. மாமரம், பூத்து, காய் பருவத்திற்கு வர, எட்டு மாதங்கள் தேவைப்படுகின்றன. அதற்குள், காற்றாலும், பனியாலும் உள்ளிட்ட பிரச்னைகளால், மாங்காய் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இதனால், ஆறு மாதத்திலேயே, காய் பதத்தில் பறிக்கப்பட்டு, விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த மாங்காய், இயற்கையாக பழமாக மாற வேண்டுமானால், ஒரு வார கால அவகாசம் தேவைப்படும். இயற்கையாக கனியும் பழங்கள், மிகவும் ருசியாகவும், உடல் நலத்துக்கு பாதிப்பு இல்லாததாக இருக்கும்.

ரசாயன கல்:

ஆனால், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில், மாங்காய் வாங்கி, வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள், மாங்காயை உடனடியாக பழுக்க வைக்க, ‘கால்சியம் கார்பைடு’ என்ற ரசாயன கல்லை பயன்படுத்துகின்றனர். ரசாயன பொருளில் இருந்து வெளியாகும், வெப்பத்தை தாங்க முடியாமல், இரண்டு நாட்களுக்குள், மாங்காய் முழுமையாக பழுத்துவிடும். இந்த பழங்களை உண்பவர்களுக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்திபேதி போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

1 டன் பறிமுதல்:

செயற்கையாக மாம்பழங்களை பழுக்க வைத்து, விற்பனை செய்வதற்கு அரசு தடை செய்துள்ளது. இதனால், ஒவ்வொரு ஆண்டு, மாம்பழ சீசனின் போதும், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், மார்க்கெட்டுகளில் ஆய்வு நடத்தி, ‘கால்சியம் கார்பைடு’ கற்கள் வைத்து செயற்கையாக பழுக்க வைத்த பழங்களை பறிமுதல் செய்து அழிக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த வாரம், கோயம்பேடு மார்க்கெட்டில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட, 1 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். மேலும், சப்போட்டா, வாழைப்பழம் ஆகியவை, 4 டன் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது, கால்சியம் கார்பைடு ரசாயன கல் மூலம் பழுக்க வைக்கும் பழங்களை, அதிகாரிகளும், நுகர்வோரும் எளிதில் கண்டுபிடிப்பதால், வியாபாரிகள் சிலர், சீனாவில் இருந்து கொண்டு வரப்படும், ‘எத்திலின்’ என்ற ரசாயன பொடி மூலம், பழங்களை பழுக்க வைக்கின்றனர்.

சிறு பாக்கெட்டில் வரும் எத்திலின் ரசாயன பொடியை, தண்ணீரில் கரைத்து, பழங்கள் மீது தெளிக்கின்றனர். இந்த பொடியில் இருந்து, எந்த வாசனையும் வருவதில்லை.

இதனால், பழங்கள் செயற்கையாக பழுக்க வைத்துள்ளதை, கண்டுபிடிக்க முடிவதில்லை. இந்த பழங்களை உண்போருக்கு, அதிகளவில் உடல்நல பாதிப்பு ஏற்படும் என, மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

‘கால்சியம் கார்பைடு’ ரசாயன கல் பயன்படுத்த தடை உள்ளது போல், எத்திலின் பயன்படுத்தவும் தடை உள்ளது. பழங்கள் பழுக்க வைக்க, 100 பி.பி.எம்., எத்திலின் வாயு பயன்படுத்தலாம் என, உணவு பாதுகாப்பு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், எத்திலின் பொடியாகவோ, தண்ணீரில் கலந்தோ பயன்படுத்த அனுமதி வழங்கவில்லை. ஒவ்வொரு முறையும் வியாபாரிகளுக்கு, இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். அதையும் மீறி, ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை பயன்படுத்தும் கடைகளில், ஆய்வு செய்து, பழங்களை பறிமுதல் செய்கிறோம்.’ என்றார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *