ஆபத்தாக மாறும் ஆன்ட்டிபயாட்டிக்

இந்தியாவில் சாப்பிடப்படும் இறைச்சியில், 50 சதவீதம் கோழி இறைச்சிதான். கறிக்கோழி இறைச்சித் தொழில் ஆண்டுக்கு 10 சதவீதம் வளர்ந்துவருகிறது. ஆனால், அது எல்லாமே சத்தானதாக, நோயைத் தராத ஒன்றாக இருக்கிறதா?

பிராய்லர் சிக்கன் எனப்படும் கறிக்கோழி, இன்றைக்குத் தொழில்முறையாக உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான உணவுப் பொருட்களின் உற்பத்தி முறை சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. உணவு உற்பத்தித் தொழில் லாபத்தை மட்டுமே குறியாகக் கொண்ட துறையாகிவிட்டது. அதனால் லாபத்தைப் பெருக்க, பாதுகாப்பற்ற முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. நுகர்வோரின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.

Courtesy: Hindu
Courtesy: Hindu

பனிப்பாளத்தின் சிறு நுனி

கால்நடைகளில் கட்டுப்பாடில்லாத ஆன்ட்டிபயாட்டிக் பயன்பாடுதான், இந்தியாவில் ஆன்ட்டிபயாட்டிக் எதிர்ப்புத்தன்மை (antibiotic resistance) அதிகரிப்பதற்குக் காரணம் என்று சுகாதார நிபுணர்கள் நீண்டகாலமாகச் சந்தேகித்துவந்தனர். கறிக்கோழி மாதிரிகளில் அறிவியல், தொழில்நுட்ப மையம் (Center for Science and Environment) (சி.எஸ்.இ.) மேற்கொண்ட ஆய்வு இதை உண்மை என நிரூபிக்கிறது. கறிக்கோழியில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருப்பது தொடர்பாகத் தேசிய அளவில் நடத்தப்பட்ட இந்த மிகப் பெரிய ஆய்வின் முடிவு கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியானது.

“ஒரு பெரும் பனிப்பாளத்தின் சிறு நுனி மட்டுமே இந்த ஆய்வு. ஆறே ஆறு ஆன்ட்டிபயாட்டிக்குகள் இருக்கின்றனவா என்று மட்டுமே, இதில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பரிசோதிக்கப்படாத வேறு எத்தனையோ ஆன்ட்டிபயாட்டிக்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்” என்று அடுத்த அதிர்ச்சியைக் கொடுக்கிறார் சி.எஸ்.இ.யின் துணைத் தலைமை இயக்குநர் சந்திர பூஷன்.

உயிருக்கு ஆபத்து

ஆக்சிடெட்ராசைக்ளின், குளோர்டெட்ராசைக்ளின், டாக்சிசைக்ளின், என்ரோஃபிளாக்சாசின், சிப்ரோஃபிளாக்சாசின், நியோமைசின் உள்ளிட்ட ஆன்ட்டிபயாட்டிக்குகள் கறிக்கோழியில் இருக்கின்றனவா என்று சி.எஸ்.இ. பரிசோதனை செய்தது. மனித உடலை நோய் தாக்கும்போது, சிகிச்சை அளிப்பதற்கு இந்த ஆறு ஆன்ட்டிபயாட்டிக்குகளும் மிக முக்கியமானவை, பரவலாகப் பயன்படுத்தப்படுபவையும்கூட. சுருக்கமாகச் சொன்னால், நம் உயிரைக் காப்பாற்றக்கூடியவை.

கடந்த 20 ஆண்டுகளில் புதிய ஆன்ட்டி பயாட்டிக் எதுவும் கண்டறியப்படவில்லை. எனவே, ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள ஆன்ட்டிபயாட்டிக்குகள்தான் உயிரைக் காப்பாற்றுவதற்கு மிச்சமிருக்கின்றன.

நமது உடலில் அற்புதங்களை நிகழ்த்தி உயிரைக் காப்பாற்றக்கூடியதாகக் கருதப்பட்ட இந்த மருந்துகள், தற்போது பலனளிக்க மறுக்கின்றன என்பதுதான் நம்மை உலுக்கும் செய்தி. ஒரு ஆன்ட்டிபயாட்டிக் மருந்துக்கு எதிராக எதிர்ப்புசக்தியைப் பெற்றுவிடும் நுண்ணுயிரிகளுக்கு எதிராக, சம்பந்தப்பட்ட ஆன்ட்டிபயாட்டிக்கை எவ்வளவு செலுத்தினாலும் பலனிருப்பதில்லை.

எப்படி வருகிறது?

தேவையான நேரத்தில் அல்லாமல், சாப்பாடு போல ஆன்ட்டிபயாட்டிக்குகளை அடிக்கடி உள்ளே தள்ளிக்கொண்டிருப்பதால், ஆன்ட்டிபயாட்டிக் எதிர்ப்புத்தன்மை அதிகரிக்கும் என்பது வெளிப்படை.

கால்நடைகளில் கட்டுப்பாடற்ற ஆன்ட்டிபயாட்டிக் பயன்பாடு மூலம், நம் உடலை ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் வந்தடைகிறது. கறிக்கோழி வளர்ப்பில் ஆன்ட்டிபயாட்டிக் வாரியிறைக்கப்படுவதுதான் இதற்கு அடிப்படைக் காரணம்.

தலைநகர் புதுடெல்லி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சி.எஸ்.இ. ஆய்வகம் சேகரித்த 70 கறிக்கோழி மாதிரிகளில், 40 சதவீதக் கறிக்கோழிகளில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருந்தது. அதில் 17 சதவீத மாதிரிகளில் குறைந்தபட்சம் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட ஆன்ட்டிபயாட்டிக்குகள் கோழித் தசை, சிறுநீரகம், ஈரலில் இருந்தன.

விழித்துக்கொள்ள வேண்டும்

தேசிய அளவில் பல்வேறு மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட 13 ஆய்வுகளில் எந்த ஆன்ட்டிபயாட்டிக்குகள் செயலாற்றாமல் போயினவோ, அதே ஆன்ட்டிபயாட்டிக்குகள்தான் கறிக்கோழிகளின் உடலில் எச்சமாகத் தேங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது வெறுமனே ஒத்துப்போகும் விஷயமல்ல. நாம் அனைவரும் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம்.

நோய்களின் கோர முகம்

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நுண்ணுயிர் நஞ்சேறிய ரத்தம் (sepsis), நிமோனியா, காசநோய் போன்ற மோசமான நோய்களுக்கு ஃபுளுரோகுயினலோன்ஸ்தான் சிகிச்சை மருந்து. ஆனால், சமீபகாலமாக இந்த ஆன்ட்டிபயாட்டிக்குக்கு நோய் உண்டாக்கும் கிருமிகள் கட்டுப்பட மறுக்கின்றன. சிப்ரோஃபிளாக்சாசினும் (Ciprofloxin) அதிவேகமாகப் பலனற்றதாக மாறி வருகிறது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக மத்தியச் சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் நாடாளுமன்றத்தில் பதில் அளித்தபோது, “பல மருந்து செயலாற்றாமை (multi-drug resistant) காசநோய் இந்தியாவில் 2011 முதல் 2013 வரை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது, இதற்குப் பெருமளவு காரணம் ஃபுளூரோகுயினலோன்ஸ் செயலாற்றாமல் போனதுதான்” என்று தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடற்ற ஆன்ட்டிபயாட்டிக் பயன்பாட்டால், ஃபுளூரோகுயினலோன்ஸ் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளான என்ரோபிளாக்சாசின், சிப்ரோஃபிளாக்சாசின் ஆகிய இரண்டும் 28 சதவீதக் கறிக்கோழி மாதிரிகளில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், எளிதில் குணமாகக்கூடிய நோய்களும், தற்போது குணம் அளிக்க முடியாதவையாக மாறிவருகின்றன.

அது சரி, என் ப்ரய்லெர் கோழிகளுக்கு  ஆன்ட்டிபயாட்டிக் கொடுக்கிறார்கள் தெரியுமா?

கோழிகளுக்கு நோய் வராமல் காக்க மட்டும்  அல்ல. சிறிய அளவில் தினமும் ஆன்ட்டிபயாட்டிக் கொடுத்தால் கோழிகள் வேகமாக வளரும். சீக்கிரம் அவற்றை கொன்று பணம்  செய்யலாம். பணம் மட்டுமே குறியான உலகில் மக்களுக்கு என்ன ஆனால் என்ன என்ற அலட்சியம்.

கடந்த 50 ஆண்டுகளில் கோழிகளை வேகமாக எடை சேர்க்க செய்வதில் நாம் நன்றாக முன்னேறி விட்டோம். அளவுக்கு மீறிய கொழுப்பு அடங்கிய உணவு, ஆன்ட்டிபயாட்டிக் கொடுப்பதன் மூலம் 1957 ஆண்டு 56 நாள் வயதான கோழியின் எடை 905 கிராமில் இருந்து இப்போது 4500 கிராம் எடை!

Courtesy: Washington Post
Courtesy: Washington Post

கறிக்கோழிக்குப் புகட்டப்படும் ஆன்ட்டிபயாட்டிக்குகளுக்கும், ஆன்ட்டிபயாட்டிக் எதிர்ப்புத்தன்மைக்கும் இடையிலான தொடர்பை இந்த இரண்டு ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன. எனவே, கறிக்கோழி வளர்ப்பில் ஆன்ட்டிபயாட்டிக் பயன்பாட்டைத் தடை செய்வதற்கான விதிமுறைகள் அவசியம்.

இல்லையென்றால், மக்களின் உயிருக்கான ஆபத்து கட்டுப்பாடில்லாமல் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பில் ஆன்ட்டிபயாட்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தாமல், ஆன்ட்டிபயாட்டிக் எதிர்ப்புத்தன்மை பரவுவதை நிச்சயம் தடுக்க முடியாது.

நன்றி: ஹிந்து

மேலும் தெரிந்து கொள்ள:

Fat Drug – New York Times

US to phase out antibiotics for fattening livestock

FDA to Farmers: No More Antibiotics to Fatten Up Livestock


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *