எதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்?

உண்மையில் நாம் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பற்றி நமக்குத் தெரிந்திருப்பது ரொம்பவே கொஞ்சம்தான். ஒரு விவசாயி நிலத்தில் விதைத்து, பயிர் செய்து, உணவு உற்பத்தி ஆகி, சந்தைக்கு வந்து, அங்கிருந்து நம்மிடம் வந்து சேருவதற்கு இடையே நடைபெறும் பல்வேறு கைமாறுதல்களின்போது என்ன நடக்கிறது என்பதைப் பற்றி நாம் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.

காய்கறிகளும் பழங்களும், புதுசாகவும் பளபளப்பாகவும் இருந்தால்; பருப்பு வகைகளும் தானியங்களும் தூசி தும்பு அகற்றப்பட்டிருந்தால், அவை சிறந்தவை என்று நம்பி கண்ணை மூடிக்கொண்டு வாங்குகிறோம். பெரும்பாலும் பொருளின் நிறத்தைப் பார்த்தே, உணவுப் பொருட்களை வாங்கிக்கொண்டிருக்கிறோம். அதுவே பதப்படுத்தப்பட்ட பொருள் என்றால், ‘பேக்கேஜிங் செய்யப்பட்ட நாள்’, ‘பெஸ்ட் பிஃபோர் டேட்’ போன்றவற்றை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, பாக்கெட்-அட்டையின் மேல் எழுதப்பட்டுள்ள ஆரோக்கியப் பலன்கள் தரும் கவர்ச்சியில் மயங்கி வாங்கிவிடுகிறோம்.

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கமே அடிப்படை. இன்றைக்கு எல்லா உணவு வகைகளும் நமக்குத் தாராளமாகக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. ஆரோக்கியமான, சத்தான உணவு என்று பல விஷயங்களை நம்பிச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். அப்படிச் சாப்பிடுவதற்கு முன் உண்மையிலேயே நாம் உட்கொள்ளும் உணவு சுத்தமானதா, ஆரோக்கியமானதா, பாதுகாப்பானதா என்று தெரிந்துகொள்ள நம்மில் எத்தனை பேர் முயற்சித்திருக்கிறோம்?

சென்னை பெசன்ட் நகர் ஸ்பேசஸ் அரங்கில், பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு மற்றும் ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்கெட் இணைந்து நடத்திய ‘பாதுகாப்பான உணவு’ என்கிற தலைப்பில் இயற்கை வேளாண் ஆர்வலர் அனந்துவின் பேச்சு இந்தக் கேள்விகளுக்கு விடையளித்தது. பலரும் கேட்க நினைக்கும் கேள்விகளும், அதற்கு அவர் சொன்ன பதில்களும்:

நாம் உட்கொள்ளும் உணவு பாதுகாப்பானதா?

நாம் வாங்கிக்கொண்டிருக்கும் பெரும்பாலான காய்கறிகள், பழங்களில் தடை செய்யப்பட்ட சில பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுவது உண்மை. அதற்காகத் தடை செய்யப்படாத பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தினால் நன்மை என்று நம்ப முடியாது. இரண்டுமே பிரச்சினைதான். இயற்கையாக விளைந்த காய்கறியோ, பழமோ பார்ப்பதற்குப் பளபளப்பாகவோ, நல்ல கலராகவோ இருக்காது. காரணம், செயற்கை உரங்கள்தான் ஒரு பயிரை அதிகத் தண்ணீரைக் குடிக்க வைக்கின்றன. அப்படிப்பட்ட தாவரத்தில் விளைந்த விளைபொருள்தான் பளபளவென்றும் பளிச்சென்ற கலரிலும் இருக்கும். அந்தக் காய்கறிகளில் சிலவற்றை வீட்டில் விளைவித்துப் பாருங்கள், உண்மை புரிந்துவிடும்.

நிறத்தைப் பார்த்தே பல உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கிறோம். உதாரணமாக, சர்க்கரையின் நிறம் வெள்ளையாக இருந்தால் நல்லது என நம்பிவிடுகிறோம். அதே கரும்பிலிருந்து எடுக்கப்படும் வெல்லம் மட்டும் எப்படிப் பழுப்பு நிறத்தில் இருக்கிறது. சர்க்கரையை வெள்ளையாக்க என்னென்ன வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன, தெரியுமா?

சர்க்கரை முதல் ரீஃபைண்ட் ஆயில்வரை நாம் பயன்படுத்தும் பெரும்பாலான உணவு வகைகள் சுத்தமானவை அல்ல, வேதிப்பொருட்களால் பட்டை தீட்டப்பட்டவை, நிறமும் மணமும் அற்றவை. அத்துடன் வெப்பப்படுத்தும், தூய்மைப்படுத்தும் நடைமுறையில் சத்துகளையும் இழந்துவிடுகின்றன. பாதுகாப்பான, சத்தான, ஆரோக்கியமான உணவு முறைக்கு இயற்கை விளைபொருள், தானிய, உணவு வகைகளுக்கு மாறுவது நல்லது.

உணவுப் பொருட்களை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை என்னென்ன?

பொதுவாக உணவு பொருட்களை வாங்கும்போது, அவை பேக் செய்யப்பட்ட நாள், காலாவதி ஆகும் நாளைப் பார்த்துவிட்டு வாங்கி விடுகிறோம். அப்படிச் செய்வதாலேயே நாம் வாங்கும் பொருள் பாதுகாப்பானது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எந்த ஒரு பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருளை வாங்கும்போதும், நாம் அவசியம் கவனிக்க வேண்டியது அந்தப் பேக்கில் அச்சிடப்பட்டிருக்கும் ‘பயன்படுத்தப்பட்டுள்ள மூலப்பொருட்கள்’ பட்டியல்தான். சில பொருட்கள் நமக்குத் தெரிந்தவையாகவும், மேலும் சில பொருட்களின் பெயர்கள் நமக்குத் தெரியாதவையாகவும் இருக்கும்.

எந்த ஒரு பொருளை வாங்கும்போதும் நமக்குத் தெரியாத பெயர்கள் மூலப்பொருள் பட்டியலில் இருந்தால், அப்பொருளைத் தவிர்ப்பது நல்லது. பல நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட, விழிப்புணர்வு பரவலாக்கப்பட்ட தவறான சேர்க்கைப்பொருட்களுக்கு மக்கள் அறியாத குறியீட்டு பெயர்களைத் தந்திரமாகப் பயன்படுத்துகின்றன. உதாரணமாக, E300 என்பது நிறத்தைக் குறிக்கும், E200 முதல் E282 வரை பிரிசர்வேர்டிவ்ஸ் எனப்படும் பதப்படுத்தும் பொருட்களைக் குறிக்கும். அஜினமோட்டோ உட்படப் பல்வேறு பொருட்கள், இப்படி மாற்றப்பட்ட பெயர்களில் வலம் வருகின்றன. ஒரு பொருளைத் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பானது என்று உறுதியாகத் தெரிந்தாலும் புரிந்தாலும் மட்டுமே வாங்குங்கள்.

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் பாதுகாப்பானவையா?

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் நிச்சயம் பாதுகாப்பானவை அல்ல. மரபணு மாற்றப்பட்ட பயிர்களால் விவசாயிகளின் வாழ்க்கை பாதிக்கப்படும், ஒரு நிறுவனத்துக்கு அடிமைபோல அவர்கள் மாற்றப்பட்டுவிடுவார்கள். விதைக்காகப் பெரிய நிறுவனங்களை, விவசாயிகள் எப்போதுமே நம்பி இருக்க வேண்டும். நிறுவனம் முடிவு செய்யும் விலையை மாற்ற முடியாது. அந்த நிறுவனம் விற்பனை செய்யும் பொருட்களும் விலை குறைந்தவை அல்ல. இந்தியாவில் அதிகம் பயிரிடப்பட்ட மரபணு பருத்தி ஏற்படுத்தும் பிரச்சினைகள், தற்போது பரவலாகக் கவனத்துக்கு வந்துள்ளன. விவசாயிகள் தற்கொலை முதல், மண் மலடாதல், சுற்றுச்சூழல் சீர்கேடு, தேனீக்கள் மறைவு, விலை வீழ்ச்சிவரை பல்வேறு சிக்கல்கள் அதன் காரணமாக முளைத்துள்ளன.

இந்தப் பின்னணியில் மரபணு கடுகு, மற்ற உணவுப் பொருட்களை அனுமதிக்க மத்திய அரசு தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறது. மரபணு மாற்றப்பட்ட பயிர்களால் சுற்றுச்சூழல் சீர்கெடும். மகரந்தச் சேர்க்கையால் சுற்றுப்புறத்தில் உள்ள மரபணு மாற்றப்படாத பயிர்களும் பாதிக்கப்படும். உடல்நலப் பாதிப்புகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பது பற்றி தெரியவில்லை. இவற்றைப் பற்றி 400-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுகளின் தொகுப்பு புத்தகமாக உள்ளது.

ஆர்கானிக் உணவு அவசியமா?

நவீன, வேதி விவசாயத்தால் மண் வளம் சீர்கெட்டு வருகிறது. விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி வாங்குவதற்குப் பன்னாட்டு – பெரு நிறுவனங்களையே விவசாயிகள் நம்பி இருக்கின்றனர். கடும் நச்சு கலந்த பூச்சிக்கொல்லிகளை அதிகம் பயன்படுத்துவதால், அவற்றிலிருந்து பெறப்படும் உணவுப் பொருட்களை உட்கொள்ளும்போது புற்றுநோய் முதல் சுவாசக் கோளாறுகள்வரை பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை.

இயற்கை உரம், பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் ஆர்கானிக் – இயற்கை விளைபொருட்கள் தற்போது அதிகம் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. இவற்றை வாங்கி உண்பதால் உடல்நலம் கெடுவதில்லை, ஆரோக்கியம் மேம்படுகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேம்படுகிறது. வேதிப்பொருள் கலந்து பளபளவென கிடைக்கும் உணவு வகைகளில் இருந்து ஆர்கானிக் உணவின் சுவை மாறுபட்டிருக்கும். ஆர்கானிக் உணவு பார்க்கப் பளபளப்பாக இல்லாவிட்டாலும், சத்தும் சுவையும் நிறைந்து காணப்படுகிறது.

பொதுவாக ஆர்கானிக் உணவு அதிக விலையில் விற்கப்படுவது ஏன்?

பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல், இயற்கையாக விளையும் விளைபொருளைப் பயிர் செய்பவர்களுக்கு உற்பத்தி குறைவதில்லை. இருந்தாலும், சில நடைமுறை சிக்கல்களால் இயற்கை வேளாண் பொருட்கள் வழக்கமாகச் சந்தையில் கிடைக்கும் உணவுப் பொருட்களைவிட சற்றே அதிக விலையில் விற்கப்படுகின்றன. இயற்கை விளைபொருள் உற்பத்தியாளர்களுக்கு அரசின் எந்த மானியமும் கிடைப்பதில்லை. இயற்கை விளைபொருள், விவசாயிகளிடம் இருந்து சந்தையை வந்தடைவதற்குச் சீரான கட்டமைப்பு வசதியும் இல்லை.

இவை அனைத்துக்கும் மேலாக நம் உடலுக்குப் பாதுகாப்பற்ற உணவு பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கி, பின்னர் மருத்துவமனையில் பல ஆயிரங்கள் செலவழிப்பது அவசியமா? பாதுகாப்பான, தரமான, இயற்கை விளைபொருட்கள் அநியாய விலையில் விற்கப்படுவதில்லை. இதில் இயற்கை விளைபொருளை விற்பவருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையிலான வெளிப்படைத்தன்மை மிக முக்கியம். இயற்கை விளைபொருட்கள் பற்றிய விழிப்புணர்வும் தேவையும் அதிகரித்துக்கொண்டே போவதால், அவற்றின் உற்பத்தி விரைவில் அதிகரிக்கும். அப்போது, அவற்றின் விலையும் குறையும்.

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *