சென்னை, கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள கடற்கரைகளில் இன்று அதிகாலை நீங்கள் வாக்கிங் சென்றிருந்தால், மக்கள் கூட்டமாக குப்பைகளை அள்ளி பைகளில் நிரப்பிக்கொண்டிருப்பதை கண்டிருப்பீர்கள். அவர்கள் அனைவரும் ‘சென்னை ட்ரெக்கிங் கிளப்’ நடத்திய ‘சென்னை கடற்கரைகளை சுத்தப்படுத்துவோம்’ என்ற பெயரில் கடற்கரைகளில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சென்னை ட்ரெக்கிங் கிளப்பைச் சேர்ந்த பீட்டர் வான் கெயிட் தலைமையில் நடைபெற்ற இந்த சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியில், கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள், தொண்டு நிறுவனத்தினர், கல்லூரி மாணவர்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் பங்குகொண்டனர். கையுறைகளும், குப்பைகளை நிறப்ப பைகளும் பங்கேற்றோரிடம் கொடுக்கப்பட்டது. மெரினா, பட்டினம்பாக்கம், பெசன்ட் நகர் தொடங்கி கோவளம் வரையுள்ள கடற்கரைகளில் குப்பைகளை அகற்றினர்.
நிகழ்வின் தொடக்கத்தில் பேசிய பீட்டர் வான் கெயிட், ”மக்கள் கண்டிப்பாக பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். நமது உலகிற்கு நாம் செலுத்தும் பெரிய நன்றி இதுதான்” என்றார். கடற்கரையில் குப்பைகளை அகற்றுவதைப் பார்த்த பொதுமக்களும், தங்கள் பங்கிற்கு பேப்பர்கள், பிளாஸ்டிக் கவர்கள், காலி பாட்டில்கள் போன்றவற்றை எடுத்து, குப்பை பைகளில் போட்டனர்.
சென்னை மட்டுமின்றி கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி போன்ற நகரங்களில் உள்ள கடற்கரைகளிலும் இந்த பணி நடைபெற்றது. மேலும் மாடம்பாக்கம், செம்பாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள ஏரிகளும் இன்று சுத்திகரிக்கப்பட இருப்பதாக சென்னை ட்ரெக்கிங் கிளப்பைச் சேர்ந்தவர்கள் கூறினர். சென்ற ஆண்டு 50 டன் குப்பைகளை அகற்றியதாகவும், இந்த முறையும் அதே அளவு குப்பைகளை அகற்றுவோம் என்றும் அவர்கள் கூறினர்.
நன்றி: விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்