கோடை காலம் துவங்கிவிட்டது. பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது. இதிலிருந்து தப்பிக்க; உடலின் வெப்பத்தைக் தணிக்க, மக்கள் குளிர்பானங்களை நாடிச் செல்கின்றனர். கலர் கலராக பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் வேதிப்பொருட்கள் கலந்துள்ளதால், அவற்றை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக பழ வகைகள், பழச்சாறுகளை சாப்பிடுமாறு டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஆனால், பழங்களை பழுக்க வைக்க பல்வேறு ரசாயன பொருட்கள் பயன்படுத்துவதும், அதனால் பல உடல் உபாதைகள் ஏற்படும் அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மாம்பழ சீசன்.
சில வியாபாரிகள் அதிக லாபம் பார்க்கும் நோக்கில் மாங்காய்களை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து, கடைகளில் குவியலாக வைத்து அதில் கார்பைட் கல் மூலம் பழுக்க வைக்கின்றனர். இப்படி பழுக்க வைக்கப்படும் பழங்களின் தோல் பகுதி பளபளப்பாக இருக்கும். இது பார்ப்பவர்களை வாங்கத் துாண்டும். கார்பைட் கல் மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்களை சாப்பிடும் போது புற்றுநோய் (கேன்சர்) வரும்.
இதேபோல் தமிழகம் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வரும் பழுக்காத பப்பாளிக்காய் கொண்டுவரப்பட்டு, கார்பைட் கல் வைத்து பழுக்க வைக்கப்படுகிறது. இதே போல் வாழைப்பழங்களை பழுக்க வைக்க எத்திலின் என்ற ரசாயன திரவம் மற்றும் காஸ் பயன்படுத்துகின்றனர்.
திருச்சி, திண்டுக்கல், துாத்துக்குடி, கடலுார் பகுதியில் இருந்து புதுச்சேரிக்கு பச்சைக்காயாக வரும் வாழைத்தார்களை வியாபாரிகள் வாங்கி, அதன் மீது எத்திலினை ஸ்பிரே மூலம் தெளிக்கின்றனர். ஒரே இரவில் பளபளப்பான மஞ்சள் நிறத்திலான வாழைப்பழம் தயாராகிவிடுகிறது. பெரிய வியாபாரிகளிடம் இருந்து பச்சையாக உள்ள, வாழைத்தார்களை வாங்கிச் செல்லும் சிறு வியாபாரிகளுக்கு, எத்திலின் கரைசலும் கையோடு இலவசமாக கொடுத்து அனுப்படுகிறது.
கார்பைட் கல் மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்படும் மாம்பழம், பப்பாளிப்பழம் சாப்பிட்டால் வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு ஏற்படுவதுடன் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. குறிப்பாக குடல் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பை உருவாக்குகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப் படுகின்றனர்.
செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் மாம்பழம், பப்பாளிப்பழம் பளபளப்பாக முழுவதுமாக பழுத்து இருக்கும். ஆனால் சாப்பிடும்போது ருசி இருக்காது. பழத்தின் மீது வெண் நிறத்திலான பவுடர் படர்ந்திருக்கும்.
எனவே, மக்கள் ஜாக்கிரதையாக பழத்தை தேர்வு செய்து வாங்கி சாப்பிடுவதுடன், தண்ணீரில் நன்கு கழுவிய பின்பு பழங்களை சாப்பிட்டால், இதுபோன்ற ரசாயன பொருட்கள் பழத்துடன் உடலுக்குள் செல்வதை ஓரளவிற்கு தடுக்க முடியும். செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வோரை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தினமும் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மற்ற கலப்பட பட்டியல்
- மா, பப்பாளிப்பழம் வரிசையில், தினசரி வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் பச்சை பட்டாணியை பச்சை நிற சாயத்தில் ஊற வைத்து சிலர் விற்பனை செய்கின்றனர்.
- மீன்களை புதிய மீன்கள் போல் தெரிய, பார்மலின் என்ற ரசயான கலவை பூசி சிலர் விற்கின்றனர்.
- தர்பூசணிப்பழத்தின் உட்பகுதி சிகப்பு நிறமாக மாற எரிக்குரோசின்(பி) ரசாயன கலவையை ஊசி மூலம் செலுத்தி சிலர் விற்பனை செய்கின்றனர்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்